காரின் விலை எவ்வளவு இருந்தால் என்ன? இப்போதே புக் செய்ய தயாராகும் இந்திய செல்வந்தர்கள்! ரேஞ்ச் ரோவர் கார் ஆச்சே
ரேஞ்ச் ரோவர் வேலர் ஃபேஸ்லிஃப்ட் (Range Rover Velar Facelift) காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டு உள்ளது. இந்த புதிய ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி காரை பற்றிய முழுமையான விபரங்களையும், இந்த காரை எவ்வாறு முன்பதிவு செய்வது? என்பதையும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
இந்தியா உள்பட உலகளவில் ரேஞ்ச் ரோவர் கார்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளதை மறுப்பதற்கு இல்லை. ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி கார்களிலேயே மிகவும் விலை உயர்ந்த மாடல்களுள் ஒன்றாக வேலர் விளங்குகிறது. ரேஞ்ச் ரோவர் வேலர் காரின் புதிய மேம்படுத்தப்பட்ட வெர்சன் கடந்த பிப்ரவரி மாதத்தில் பொது மக்களின் பார்வைக்கு வெளியீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், புதிய வேலர் காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டு உள்ளன. விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் ரேஞ்ச் ரோவரின் அதிகாரப்பூர்வ டீலர்ஷிப் மையங்களிலோ அல்லது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திலோ காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். காருக்கான இந்திய எக்ஸ்-ஷோரூம் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது முன்பதிவு துவங்கப்பட்டுள்ள புதிய வேலர் ஃபேஸ்லிஃப்ட் காரின் டெலிவிரிகள் வருகிற செப்டம்பர் மாதத்தில் இருந்து துவங்கப்பட உள்ளன. ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் என்பதால், புதிய வேலர் காரில் முக்கியமான மாற்றங்கள் அனைத்தும் காரின் வெளிப் பக்கத்தில் கொண்டுவரப்பட்டு உள்ளது. இதன்படி, 2023 ரேஞ்ச் ரோவர் வேலரின் வெளிப் பக்கத்தில் பிக்ஸல் எல்இடி விளக்குகள் மற்றும் புதிய டிசைனில் பின்பக்க பம்பர் மற்றும் டெயில்லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

வெளிப்பக்கத்திற்கு ஏற்ப காரின் உட்பக்கத்திலும் டேஸ்போர்டை புத்துணர்ச்சியான டிசைனில் மாற்றியுள்ளனர். டேஸ்போர்டில் வழங்கப்பட்டுள்ள 11.4-இன்ச் வளைவான டச் ஸ்க்ரீன் ஆனது ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்பிளேவை ஏற்கக்கூடியது. இதன் மூலமாக, ரோவரின் பிவி புரோ சிஸ்டத்துடன் ஓட்டுனர் தனது மொபைல் போனை இணைத்து கொள்ளலாம்.
ரேஞ்ச் ரோவர் கார்கள் பொதுவாக ஆஃப்-ரோடுகளுக்கும் கொண்டு செல்ல ஏற்றவை. 2023 வேலர் காரை ஆஃப்-ரோட்டிற்கு கொண்டு சென்றால், சாலையின் தன்மைக்கு ஏற்ப வாகனத்தின் டெர்ரன் ரெஸ்பான்ஸ் சிஸ்டத்தை மாற்றி கொள்ளலாம். இதற்கு இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தின் திரை பயன்படுத்த வேண்டும். கியர் லிவரை கொண்ட மைய கன்சோல் பகுதி மிகவும் நேர்த்தியாக, எந்தவொரு கூடுதல் திரைகள் & டயல்கள் இன்றி வடிவமைக்கப்பட்டு உள்ளது.

வேலர் காரில் முன்பு கியர் லிவர் ஆனது சுழற்றக்கூடிய டயல் போன்று வழங்கப்பட்டு வந்தது. மைய கன்சோல் பகுதியில் வயர்லெஸ் போன் சார்ஜிங் பகுதி வழங்கப்பட்டு உள்ளது. புதிய வேலர் ஃபேஸ்லிஃப்ட் காரை 2.0 லிட்டர் பெட்ரோல் அல்லது 2.0 லிட்டர் டீசல் என்ஜின் உடன் பெறலாம். இதில் பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 247.5 பிஎச்பி மற்றும் 365 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 7.5 வினாடிகளில் எட்டிவிட முடியும். டாப்-ஸ்பீடு 217kmph ஆகும். மறுப்பக்கம், மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டத்துடன் வழங்கப்படும் டீசல் என்ஜின் மூலம் 201.9 பிஎச்பி மற்றும் 430 என்எம் டார்க் திறன் வரையில் இயக்க ஆற்றலை பெறலாம். இந்த டீசல் & மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டத்துடன் 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 8.3 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய புதிய வேலர் காரின் டாப்-ஸ்பீடு 210kmph ஆகும்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: பொதுவாகவே, ரேஞ்ச் ரோவர் கார்கள் கம்பீரமான தோற்றம் கொண்டவை என்பது மட்டுமின்றி, சாலையில் எவரொருவரையும் வசீகரிக்கக் கூடியவை. அதிலும் குறிப்பாக, விலைமிக்க ரேஞ்ச் ரோவர் மாடல்களுள் ஒன்றாக இருப்பதால் வேலர் பார்ப்போரை சில வினாடிகளில் கவர்ந்துவிட கூடியது. அப்படிப்பட்ட வேலர் கார் 2023ஆம் ஆண்டிற்காக அப்டேட் செய்யப்பட்டுள்ளது. புதிய வேலரின் விலைகளை எந்த அளவில் எதிர்பார்க்கிறீர்கள் என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications









