நம்பர் பிளேட் இல்லாத காரை ஓட்டி வந்த பிரபலம்... இவங்களை எல்லாம் போலீஸ் ஒன்னும் செய்யாதா?..
இரண்டு சக்கரம், மூன்று சக்கரம், நான்கு சக்கரம் என எத்தனை சக்கர வாகனமாக இருந்தாலும் அந்த வாகனங்கள் கட்டாயம் பதிவெண்ணைக் கொண்டிருக்க வேண்டும். இது இல்லாமல் இயங்கும் வாகனங்கள் போலீஸார் கண்களில் படும் எனில் உடனடியாக அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
இந்த மாதிரியான சூழலில் இந்தியாவின் முக்கிய பிசினஸ் மேன்களில் ஒருவர் தன்னுடைய விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் காரில் நம்பர் பிளேட் இல்லாமல் பயணிக்கும் படங்கள் வெளியாகி உள்ளன. கவுதம் சிங்கானியா இவரே நம்பர் பிளேட் இல்லாத விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் காரை பொது சாலையில் ஓட்டிச் சென்றவர் ஆவார்.

இவர் வேறு யாரும் அல்ல முன்னணி நிறுவனமான ரேமண்ட் குழுமத்தின் உரிமையாளர் ஆவார். இவர் மிகப் பெரிய வாகன காதலர் ஆவார். வாகனங்கள் மீது வைத்திருக்கும் தன்னுடைய காதலை வெளிக்காட்டும் விதமாகவே அவர் சமீபத்தில் ஃபெர்ராரி 296 ஜிடிபி (Ferrari 296 GTB) காரை வாங்கினார்.
இது ஓர் சூப்பர் கார் ரக வாகனமாகும். இந்த காரிலேயே அவர் நம்பர் பிளேட் இல்லாமல் பயணித்திருக்கின்றார். மும்பையின் முக்கிய நகர்புற சாலையில் அவர் பயணித்துக் கொண்டிருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்த படங்களை petrolhead.mumbai எனும் இன்ஸ்டா பயனரே வெளியிட்டு உள்ளார். நம்பர் பிளேட் இல்லாமல் கவுதம் சிங்கானியா ஃபெர்ராரி 296 ஜிடிபி வலம் வந்ததை அந்த படங்கள் தெளிவாகக் காண்பிக்கின்றன.

மிக சமீபத்திலேயே வாங்கப்பட்ட வாகனம் இது ஆகும். இதன் காரணத்தினாலேயே அதில் நம்பர் பிளேட் இடம் பெறாமல் இருந்திருக்கும் என கூறப்படுகின்றது. ஒருவேளை இவர் சூப்பரான ஃபேன்சி நம்பருக்காக காத்திருக்கலாம் என்றும் யூகிக்கப்படுகின்றது. இதன் காரணமாகவே அக்காரில் நம்பர் பிளேட்டை பொருத்தாமல் இருந்திருக்கலாம்.
இருப்பினும், வாகனங்கள் டெலிவரி கொடுக்கும் முன்னரே பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும் என விதிகள் கூறுகின்றன. இந்த நிலையிலேயே புதிய தகவல்கள் சில வெளியாகி உள்ளன. காரின் ரகசியம் காக்க வேண்டி அதன் புகைப்படங்களை வெளியிட்ட நபர்கள் காரின் நம்பர் பிளேட் தெரியாத வண்ணம் எடிட் செய்து அதை வெளியிட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. இருப்பினும், சில தவறுதலான புரிதலின் காரணமாக இப்போது கவுதம் சிங்கானியா சர்ச்சையில் சிக்கி இருக்கின்றார்.

அவர் வாங்கி இருக்கும் ஃபெர்ராரி 296 ஜிடி சூப்பர் காரின் மதிப்பு ரூ. 6.37 கோடிக்கும் அதிகம் ஆகும். இது மும்பை ஆன் ரோடு மதிப்பு என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது கவுதம் சிங்கானியா வாங்கியிருப்பது இரண்டாவது ஃபெர்ராரி 296 ஜிடி காராகும்.
ஏற்கனவே இவரிடத்தில் இதே கார் மாடல் மற்றொன்று இருக்கின்றது. ஆனால், அது அவருடைய லண்டன் இல்லத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது. மிக அதிக வேகத்தில் செல்லக் கூடிய சூப்பர் காராக ஃபெர்ராரி 296 ஜிடி இருக்கின்றது. இது வெறும் 2.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும்.

இதுமட்டுமில்லைங்க இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 300 கிமீட்டருக்கும் அதிகமாக உள்ளது. இந்த மின்னல் வேக திறனுக்காக ஃபெர்ராரி 296 ஜிடியில் 2.9 லிட்டர் வி6 எஞ்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இவையே அக்காருக்கு ராக்கெட் வேகத்தில் செல்லும் திறனை வழங்குகின்றது.
818 குதிரை திறன்களை இந்த மோட்டார்கள் வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. கவுதம் சிங்கானியா இடத்தில் இன்னும் பல விலையுயர்ந்த மற்றும் அதிக வேகத்தில் செல்லும் கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்தவகையில், ஃபெர்ராரி தொடங்கி ரோல்ஸ் ராய்ஸ் வரை என எக்கசக்க சூப்பர் மற்றும் ஆடம்பர வசதிகள் நிறைந்த கார்கள் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன.
ஃபெர்ராரி 488 பிஸ்தா (Ferrari 488 Pista), லம்போர்கினி அவென்டேடார் எஸ்வி (Lamborghini Aventador SV), போர்ஷே 911 ஜிடி3 (Porsche 911 GT3), அஸ்டன் மார்டின் டிபி11 (Aston Martin DB11), ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் (Rolls-Royce Phantom) மற்றும் பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி (Bentley Continental GT) உள்ளிட்ட கார்களையே அவர் வைத்திருக்கின்றார்.
இதுதவிர அவரிடத்தில் ஃபோர்டு மஸ்டாங் மேச்1 காரும் உள்ளது. இந்த கார்களின் வரிசையிலேயே புதிதாக ஃபெர்ராரி 296 ஜிடிபி-யை கவுதம் சிங்கானியா இணைத்திருக்கின்றார். இந்த காரை பிரத்யேகமாக அதிக வேகத்தில் செல்வதற்கு ஏற்பவே நிறுவனம் தயாரித்து இருக்கின்றது. இதற்காக மிகவும் இலகு ரக எடைக் கொண்ட பேனல்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதேபோல், அதன் ஏரோடைனமிக்ஸும் அதிக வேகத்திற்கு ஏற்பவே வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.
என்னதான் இதன் எடை இலகு ரகமானதாக இருந்தாலும் அனைத்து பாகங்களும் உறுதித் தன்மை மிக்கதாக இருக்கின்றது. இதுதவிர, ரைடர்களுக்கு மிக சிறந்த இயக்க அனுபவத்தை வழங்கும் விதமாக ஸ்டியரிங் வீலில் முக்கிய கன்ட்ரோல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளை இந்த காரில் ஃபெர்ராரி வழங்கி இருக்கின்றது. இதனால்தான் இந்த காருக்கு சூப்பர் கார் ஆர்வலர்கள் மத்தியில் அமோக வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நம்பர் பிளேட் இல்லாமல் வாகனங்களை இயக்குவது அபராதத்திற்கு வழிவகுக்கும். வாகனங்கள் பதிவெண் பெறும் வரை சாலையில் நடமாடக் கூடாது என விதிகள் கூறுகின்றன. குறைந்தபட்சம் தற்காலிக பதிவெண்ணையாவது வாகனங்கள் கொண்டிருக்க வேண்டும். ஆனால், கவுதம் சிங்கானியாவின் காரில் நம்பர் பிளேட் எடிட் செய்து மறைக்கப்பட்டிருப்பதைப் போல தெரிகின்றது. இது நிரூபிக்கப்படும்பட்சத்தில் அவர் போலீஸ் நடவடிக்கை எடுக்காது. இல்லையேல் அபராதம் விதிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications









