இன்னும் 40 நாள்தான்! பெட்ரோல், டீசல் கார்களை ஒழிச்சு கட்ட போறாங்க! அதான் இப்பவே விற்பனையை நிறுத்தறாங்களா!
இந்தியாவில் மிகவும் கடுமையான பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகள் (BS6 Emission Norms) கடந்த 2020ம் ஆண்டு அமலுக்கு கொண்டு வரப்பட்டன. இதை தொடர்ந்து ஆர்டிஇ என சுருக்கமாக அழைக்கப்படும் ரியல் டிரைவிங் எமிஷன் (RDE - Real Driving Emissions) விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வர அரசு தற்போது தயாராகி வருகிறது.
இந்த புதிய விதிமுறை வரும் ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு கொண்டு வரப்படவுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளின் 2வது கட்டம்தான் (Phase 2) ஆர்டிஇ. இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையில் இந்த ஆர்டிஇ விதிமுறைகள் ஏற்படுத்த போகும் தாக்கங்கள் என்ன? இதனால் பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு? என்பதை பற்றி தகவல்களை எல்லாம் உங்களுக்கு மிகவும் விரிவாக விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

டீசல் கார்களுக்கு செக்!
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து டீசல் கார்களிலும் எஸ்சிஆர் என சுருக்கமாக அழைக்கப்படும் செலக்டிவ் கேட்டலிடிக் ரிடக்ஸன் (SCR - Selective Catalytic Reduction) இடம்பெறுவதை ஆர்டிஇ விதிமுறைகள் கட்டாயமாக்குகின்றன. இது டீசல் கார்களுக்கு (Diesel Cars) 'செக்' வைக்கும் ஒரு நடவடிக்கையாகும். அது எப்படி? என்ற கேள்வி தற்போது உங்களுக்கு எழுந்திருக்கும். இதற்கு நாம் 3 ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்க வேண்டும்.
கடந்த 2020ம் ஆண்டு பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டபோது, டீசல் கார்கள்தான் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டன. பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் மேம்படுத்தப்பட வேண்டுமென்றால், டீசல் இன்ஜின்களில் மிகப்பெரிய மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு கார் நிறுவனங்கள் தள்ளப்பட்டன. இது அதிக செலவு ஆகும் ஒரு விஷயம் ஆகும். இந்த மிகப்பெரிய செலவை செய்வதற்கு நிறைய நிறுவனங்கள் தயாராக இல்லை.

எனவே பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, ஏராளமான டீசல் கார்களின் விற்பனை நிறுத்தப்பட்டது. இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனம் என்ற மகுடத்தை தலையில் சுமந்து கொண்டிருக்கும் மாருதி சுஸுகியோ, ஒட்டுமொத்தமாக டீசல் கார்களின் விற்பனையை நிறுத்தி விட்டது. தற்போது ஒரு டீசல் காரை கூட மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்வதில்லை. மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்வதெல்லாம் பெட்ரோல் (Petrol), சிஎன்ஜி (CNG) மற்றும் ஹைப்ரிட் (Hybrid) கார்கள்தான்.
சரி, தற்போதைய ஆர்டிஇ விதிமுறைகளுக்கு வருவோம். பெரிய டீசல் இன்ஜின் கார்கள் இந்த விதிமுறைகளில் இருந்து தப்பித்து கொள்ளும். அதாவது 2.0 லிட்டர் அல்லது அதற்கும் மேற்பட்ட திறனுடைய டீசல் இன்ஜின்கள் ஏற்கனவே நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள எஸ்சிஆர் எனப்படும் செலக்டிவ் கேட்டலிடிக் ரிடக்ஸனுக்கு மாறி விட்டன. ஆனால் அளவில் சிறிய டீசல் இன்ஜின் கார்களுக்குதான் பிரச்னையே. அத்துடன் குறைவாக விற்பனையாகி கொண்டிருக்கும் டீசல் கார்களுக்கும் 'செக்' வைக்கப்பட்டுள்ளது.
அளவில் சிறிய டீசல் இன்ஜின்களை ஆர்டிஇ விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்த வேண்டுமென்றால், கார் நிறுவனங்கள் உற்பத்தி செலவை அதிகரிக்க வேண்டியிருக்கும். இந்த பாரம் வாடிக்கையாளர்களின் தலையில்தான் விழும். அதாவது அவர்கள் அதிக விலை கொடுத்து கார்களை வாங்க வேண்டியிருக்கும். இதன் எதிரொலியாக கார் விற்பனை குறையலாம். எனவே பெரிய தொகையை முதலீடு செய்வதற்கு கார் நிறுவனங்கள் தயங்குகின்றன. இதன் காரணமாக ஏராளமான டீசல் கார்களின் விற்பனை தற்போது படிப்படியாக நிறுத்தப்பட்டு வருகிறது.
பெட்ரோல் கார்களையும் ஆர்டிஇ விதிமுறைகள் பாதிக்குமா?
டீசல் கார்களின் அளவிற்கு இல்லை என்றாலும் கூட, இந்த ஆர்டிஇ விதிமுறைகள், பெட்ரோல் கார்கள் (Petrol Cars) மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் பெட்ரோல் கார்களின் மீதான தாக்கம் சிறியதாக இருக்கும். டீசல் கார்களை போலவே, பெட்ரோல் கார்களையும் ஆர்டிஇ விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் மேம்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் விற்பனையை நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை.
சுருக்கமாக சொன்னால்...
சுருக்கமாக சொல்வதென்றால், ஆர்டிஇ விதிமுறைகள் பின்வரும் தாக்கங்களை ஏற்படுத்தும்:
- விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்களுக்கு மாசு உமிழ்வு விதிமுறைகள் கடுமையாகும்.
- பெட்ரோல், டீசல் கார்களின் உற்பத்தி செலவு அதிகரிக்கும்.
- இதன் காரணமாக கார்களின் விலை உயரும்.
- அளவில் சிறிய டீசல் இன்ஜின் கார்களின் விற்பனை நிறுத்தப்படும்.
- எலெக்ட்ரிக் கார்களின் (Electric Cars) விற்பனை அதிகரிப்பதற்கும் கூட ஆர்டிஇ விதிமுறைகள் வழிவகுக்கலாம்.


Click it and Unblock the Notifications