பிஎம்டபிள்யூ பிராண்டில் பேக்-2-பேக் ஆக எலக்ட்ரிக் கார்கள்!! இப்போ புதுசா ஒன்னு... 7 சீரிஸ் காரும் அப்டேட்டட்..
ஜெர்மன் லக்சரி கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ அப்டேட் செய்யப்பட்ட 7 சீரிஸ் காரை, முற்றிலும் புதிய ஐ7 இவி உடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பிஎம்டபிள்யூ கார்களை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.
புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.1.70 கோடியும், ஐ7 எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.95 கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த இரு பிஎம்டபிள்யூ கார்களும் ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது புதிய 7 சீரிஸ் காரை 740ஐ எம் ஸ்போர்ட் வேரியண்ட்டிலும், புதிய ஐ7 எலக்ட்ரிக் காரை எக்ஸ் டிரைவ்60 வேரியண்ட்டிலும் மட்டுமே வாங்க முடியும்.

அப்டேட் செய்யப்பட்ட 7 சீரிஸ் காரின் 740ஐ எம் ஸ்போர்ட் வேரியண்ட்டில் 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு நேரடி-6 சிலிண்டர் என்ஜினை பிஎம்டபிள்யூ நிறுவனம் பொருத்தியுள்ளது. அதிகப்பட்சமாக 376 பிஎச்பி மற்றும் 520 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கியர்பாக்ஸ் ஆனது என்ஜினின் இயக்க ஆற்றலை காரின் பின் சக்கரங்களுக்கு அனுப்பும்.
0-வில் இருந்து 100kmph வேகத்தை புதிய 7-சீரிஸ் காரில் குறைந்தப்பட்சமாக 5.4 வினாடிகளிலேயே எட்டிவிட முடியும். இந்த காரின் டாப்-ஸ்பீடு 250kmph ஆகும். மறுப்பக்கம், ஐ7 எலக்ட்ரிக் காரில் இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றிற்கு ஆற்றலை வழங்க 101.7kWh பேட்டரி தொகுப்பு உள்ளது. இவற்றின் மூலமாக அதிகப்பட்சமாக 536 பிஎச்பி மற்றும் 740 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெற முடியும் என்கிறது பிஎம்டபிள்யூ நிறுவனம்.

இந்த எலக்ட்ரிக் காரில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 4.7 வினாடிகளிலும், அதிகப்பட்சமாக மணிக்கு 240கிமீ வேகத்திலும் பயணிக்க முடியுமாம். புதிய ஐ7 காரின் 101.7kWh பேட்டரி தொகுப்பை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 625கிமீ தொலைவிற்கு பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் பேட்டரியை 195 கிலோவாட்ஸ் நேர்திசை மின்னோட்ட ஃபாஸ்ட் சார்ஜரின் மூலம் 10% - 80% சார்ஜை வெறும் 34 நிமிடங்களில் நிரப்பிவிட முடியும்.
இத்தகைய சார்ஜரை பெற நீங்கள் ஃபாஸ்ட் சார்ஜிங் மையத்திற்கு செல்ல வேண்டியிருக்கும். வீட்டிலேயே 22 கிலோவாட்ஸ் மாறுதிசை மின்னோட்ட மின்சாரத்தின் மூலம் சார்ஜ் செய்து கொள்வதற்கு புதிய ஐ7 காருடன் வால் பாக்ஸ் சார்ஜரை வழங்கவுள்ளதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் மூலம் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்ப உங்களுக்கு குறைந்தது 5 மணிநேரங்கள் தேவைப்படும். தோற்றத்தை பொறுத்தவரையில், புதிய 7 சீரிஸ் காரும், ஐ7 எலக்ட்ரிக் காரும் கிட்டத்தட்ட ஒன்றே.

இந்த இரு காரின் முகப்பு பகுதியிலும் மெல்லியதான பிஎம்டபிள்யூ கிரிஸ்டல் க்ளோ எல்இடி ஹெட்லேம்ப்கள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் பிஎம்டபிள்யூ பிராண்டிற்கே உண்டான அடையாள சின்னமான 'கிட்னி' வடிவிலான க்ரில் அமைப்பும் இவற்றில் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், அளவில் பெரியதான அலாய் சக்கரங்களும் இந்த இரு காரிலும் ஒரே மாதிரியான டிசைனிலும், ஒரே மாதிரியான அளவிலும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் பின்பக்கத்திலும் எல்இடி டெயில்லைட்களில் வித்தியாசம் இல்லை.
ஆனால் ஐ7 எலக்ட்ரிக் கார் என்பதால், பின்பக்கத்தில் சைலன்ஸர்கள் எதுவும் இல்லை. வெளிப்பக்கத்தை போல் உட்பக்கத்திலும் புதிய 7 சீரிஸ் மற்றும் ஐ7 கார்கள் ஒத்து காணப்படுகின்றன. இவை இரண்டிலும் உட்பக்க டேஸ்போர்டில் 12.3 இன்ச்சில் ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கக்கூடிய திரையையும், 14.9 இன்ச்சில் இன்ஃபோடெயின்மெண்ட் திரையையும் காண முடிகிறது. இவற்றுடன் அமேசான் ஃபயர் டிவி கனெக்ஷன் உடன் 8கே திரை மற்றும் பின் இருக்கை பயணிகள் சவுண்ட் சிஸ்டத்தை கண்ட்ரோல் செய்யவும், இருக்கைகள், ஏசி மற்றும் விளக்குகளை கண்ட்ரோல் செய்யவும் பின் கதவுகளில் 5.5 இன்ச்சில் திரைகள் போன்றவையும் இந்த புதிய பிஎம்டபிள்யூ காரில் உள்ளன.


Click it and Unblock the Notifications








