கார் உற்பத்தியில் பிரம்மாண்ட சாதனையை படைத்த முன்னணி நிறுவனம்! இது தமிழ்நாட்டுக்கே பெருமைங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று ரெனால்ட் (Renault). இது பிரான்ஸை சேர்ந்தது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில், க்விட் (Renault Kwid), கைகர் (Renault Kiger) மற்றும் ட்ரைபர் (Renault Triber) உள்ளிட்ட கார்களை ரெனால்ட் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
முன்னதாக டஸ்டர் (Renault Duster) காரையும், ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வந்தது. ஆனால் அதன் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது. இருப்பினும் டஸ்டர் காரின் புதிய தலைமுறை மாடலை, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ரெனால்ட் நிறுவனம் தயாராகி கொண்டு வருகிறது.

இதற்கிடையே ரெனால்ட் நிறுவனம் புதிய மைல்கல் (Milestone), ஒன்றை தற்போது கடந்துள்ளது. இந்தியாவில் 1 மில்லியன் (10 லட்சம்) கார்கள் உற்பத்தி என்பதுதான் அந்த மைல்கல். ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் 10 லட்சமாவது காராக உற்பத்தி செய்திருப்பது கைகர் (Renault Kiger) ஆகும்.
தமிழக தலைநகர் சென்னையில் உள்ள ரெனால்ட் நிறுவனத்தின் தொழிற்சாலையில் இருந்து இந்த கைகர் கார் வெளிவந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் ஒரு ஆண்டுக்கு 4.80 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும். இங்கு உற்பத்தி செய்யப்படும் கார்களை ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் மட்டும் விற்பனை செய்வதில்லை.

கூடவே வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து கொண்டுள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ரெனால்ட் நிறுவனத்தின் கார்கள், சார்க் நாடுகள், ஆசிய பசிபிக் நாடுகள், தென் ஆப்ரிக்கா மற்றும் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
இதற்கிடையே ரெனால்ட் மற்றும் நிஸான் நிறுவனங்கள் (Renault-Nissan), இந்தியாவில் வர்த்தகத்தை பெருக்குவதற்காக மேலும் 5,300 கோடி ரூபாயை முதலீடு செய்யவுள்ளன. இந்த 2 நிறுவனங்களும் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன. இந்த முதலீட்டின் மூலம் எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) உள்பட 6 புதிய கார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளன.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்புதான், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. 6 புதிய கார்களில், ரெனால்ட் நிறுவனம் 3 புதிய கார்களையும், நிஸான் நிறுவனம் 3 புதிய கார்களையும் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழ்நாட்டில் தொழிற்சாலையை அமைத்துள்ள ஒரு நிறுவனம் 10 லட்சம் கார்களை உற்பத்தி செய்திருப்பது உண்மையிலேயே நாம் பெருமை கொள்ள வேண்டிய விஷயம்தான். இது தமிழ்நாட்டின் வலுவான பொருளாதாரத்திற்கும் வலிமை சேர்க்கும் விஷயம் என்பதில் நமக்கு எள் அளவிற்கும் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications








