ரெனால்ட்க்கு இந்தியா ராசியே இல்ல போல... 11 வருடங்களில் வெறும் 9 இலட்ச கார்கள் தான் விற்பனை!!
இந்திய சந்தையில் கார்களை விற்பனை செய்வதில் பல வருடங்களாக போராடி கொண்டு வரும் நிறுவனங்களுள் ஒன்று, ரெனால்ட் ஆகும். இந்தியாவில் கார்கள் விற்பனையை துவங்கி 11 வருடங்களாகிவிட்ட நிலையில், இதுவரையில் இந்த நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்ட கார்கள் எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன.
ஐரோப்பா ஆட்டோமொபைல் வாகனங்களின் பிறப்பிடம் என சொன்னால் அது மிகையில்லை. ரோல்ஸ்-ராய்ஸில் துவங்கி மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ என ரெனால்ட் வரையில் பெரும்பான்மையான கார் நிறுவனங்கள் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவை ஆகும். இதில் நாம் பார்க்க போகும் ரெனால்ட் ஆனது பிரெஞ்சு கார் நிறுவனம் ஆகும். இதனாலேயே ரெனால்ட் கார்களின் ஸ்டைல் சிட்ரோன் கார்களை போன்று சற்று வித்தியாசமானதாக இருக்கிறது.

சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருவோம். இந்தியாவில் ரெனால்ட் கார்கள் விற்பனை எண்ணிக்கை 9 லட்சத்தை வெற்றிக்கரமாக கடந்துள்ளது. இந்தியாவில் கார்கள் விற்பனையை துவங்கி 11 வருடங்களில் இந்த மைல்கல்லை ரெனால்ட் கடந்துள்ளது. இந்தியாவில் பல்வேறு விதமான கார்களை அறிமுகப்படுத்தி இருந்தாலும், தற்போதைக்கு ரெனால்ட் நிறுவனத்தில் இருந்து க்விட், கைகர் மற்றும் டிரைபர் என மூன்றே மூன்று கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் விற்பனை செய்யும் கார்களை அவ்வப்போது அப்டேட் செய்வது மட்டுமின்றி, டீலர்ஷிப் நெட்வொர்க்கையும் விரிவுப்படுத்துவது, தொழிற்நுட்பம் சார்ந்த கண்டுப்பிடிப்புகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது மற்றும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் அவர்களது விருப்பத்திற்கேற்ப தனிப்பயனாக்க தேர்வுகளை வழங்குவது போன்ற செயல்பாடுகளிலும் ரெனால்ட் ஈடுப்பட்டு வருகிறது.

இதன் விளைவாக, இந்தியாவில் தற்சமயம் ரெனால்ட் நிறுவனத்திற்கு மொத்தம் 450 விற்பனை மையங்களும், 530 சேவை தொடுமையங்களும் உள்ளன. நம் மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின்படி, தனது எதிர்கால தயாரிப்புகளை 90% இந்தியாவில் கிடைக்கும் பாகங்களை கொண்டே உற்பத்தி செய்ய ரெனால்ட் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராம் மாமில்லாபல்லே கூறுகையில், "இந்தியாவிற்காக நாங்கள் வலிமையான தயாரிப்புகள் உத்தியை கொண்டுள்ளோம். எதிர்கால தயாரிப்புகளில் உள்நாட்டுமய மாக்குதலில் முழுமையான கவனம் கொண்டுள்ளோம்" என்றார். ரெனால்ட் இந்தியாவில் விற்கும் கார்களில் கைகர் & டிரைபர் மாடல்கள் க்ளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 4-ஸ்டார்களை பெற்றுள்ளன.

இதில் கைகர் காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் மூலமாக 20.62kmpl மைலேஜை கைகரில் பெற முடிகிறது. ரெனால்ட்டின் எம்பிவி காரான டிரைபரில் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இது அதிகப்பட்சமாக 72 பிஎஸ் மற்றும் 96 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: 9 இலட்ச கார்கள் விற்பனை என்பது கவனிக்கத்தக்க கூடிய விஷயம் தான். இருப்பினும், 11 வருடங்களில் 9 இலட்ச கார்கள் விற்பனை என்பது உண்மையில் குறைவே ஆகும். தற்சமயம் வெறும் 3 கார்களை மட்டுமே விற்பனை செய்து வருவதை வைத்தே ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் எந்த அளவிற்கு போராடி கொண்டு வருகிறது என்பதை அறியலாம்.


Click it and Unblock the Notifications









