கண்ணீருடன் பிரியாவிடை பெற்றது ரெனால்ட் க்விட்! குட்டி காரா இருந்தாலும் குடும்பத்தோடு போனதை மறக்கவே முடியாது!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ரெனால்ட் க்விட் (Renault Kwid). இது ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்தியாவில் ரெனால்ட் நிறுவனத்தின் வெற்றிகரமான தயாரிப்புகளில் ஒன்றாக க்விட் ஹேட்ச்பேக் காரை குறிப்பிட முடியும்.
ரெனால்ட் க்விட் கார் 800 சிசி (0.8 லிட்டர்) பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதில், 800 சிசி பெட்ரோல் இன்ஜின் மாடலின் விற்பனையை ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் சத்தமே இல்லாமல் நிறுத்தியுள்ளது.

எனவே இந்திய சந்தையில் ரெனால்ட் க்விட் 800 சிசி மாடலின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. RXL மற்றும் RXL (O) ஆகிய வேரியண்ட்களில், ரெனால்ட் க்விட் 800 சிசி மாடல் கிடைத்து வந்த நிலையில், தற்போது விற்பனையில் இருந்து விலக்கப்பட்டிருப்பது, வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இனிமேல் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் மட்டுமே ரெனால்ட் க்விட் கார் கிடைக்கும். பிஎஸ்6 2வது கட்டம் (BS6 Phase 2) மற்றும் ஆர்டிஇ (RDE - Real Driving Emissions) ஆகிய புதிய மாசு உமிழ்வு விதிமுறைகள் கடந்த ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வந்திருப்பதுதான், ரெனால்ட் நிறுவனத்தின் இந்த முடிவிற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

800 சிசி பெட்ரோல் இன்ஜினை புதிய மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்தி விற்பனை செய்வது லாபகரமானதாக இருக்காது என்பதால், ரெனால்ட் நிறுவனம் இந்த முடிவை எடுத்திருக்கலாம். ரெனால்ட் க்விட் காரின் 800 சிசி இன்ஜின் மாடல், வாடிக்கையாளர்கள் பலரின் தேர்வாக இருந்து வந்தது.
இந்த இன்ஜின் அதிகபட்சமாக 52 பிஹெச்பி பவர் மற்றும் 72 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டு வந்தது. இனி 800 சிசி மாடல் கிடைக்காது என்பதால், ரெனால்ட் க்விட் காரை வாங்குவதாக இருந்தால், 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே வாங்க முடியும்.
ரெனால்ட் க்விட் 800 சிசி மாடல் மட்டுமல்லாது, இந்தியாவில் அமலுக்கு வந்துள்ள புதிய மாசு உமிழ்வு விதிமுறைகளால், இன்னும் ஏராளமான கார்களின் விற்பனை அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். குறிப்பாக ஹோண்டா (Honda) நிறுவனம் இந்தியாவில் பல்வேறு கார்களின் விற்பனையை நிறுத்தி விட்டது.
எனவே ஹோண்டாவிற்கு தற்போது மிகவும் சிறிய நிறுவனம் என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஹோண்டா, ரெனால்ட் உள்பட அனைத்து நிறுவனங்களும் இந்தியாவில் பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன. எனவே அந்நிறுவனங்கள் விற்பனை செய்யும் கார்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?
க்விட் 800 சிசி மாடல் விடைபெற்றிருப்பதால், ரெனால்ட் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை குறையலாம். இதை ஈடுகட்டும் வகையில், புதிய தலைமுறை டஸ்டர் உள்பட (New-gen Renault Duster) பல்வேறு புதிய கார்களை களமிறக்க ரெனால்ட் நிறுவனம் தயாராகி வருகிறது. இதில், எலெக்ட்ரிக் கார்களும் (Electric Cars) அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








