உலகையே திரும்பி பார்க்க வைத்த தமிழ்நாடு! விலை குறைவான எலெக்ட்ரிக் கார் சென்னையில் உற்பத்தி! இவ்ளோ கோடி முதலீடா
இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்திற்கு முதலீட்டை ஈர்க்க கடுமையான முயற்சிகளை செய்து வருகின்றன. வேலைவாய்ப்புகள் பெருகி பொருளாதாரம் மேம்படும் என்பதுதான் இதற்கு காரணம். இந்த சூழலில் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீட்டை தமிழ் நாடு (Tamil Nadu Government) அரசு தற்போது பெற்றுள்ளது.
பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் (Renault) நிறுவனமும், ஜப்பானை சேர்ந்த நிஸான் (Nissan) நிறுவனமும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. சென்னைக்கு (Chennai) அருகே உள்ள ஒரகடம் (Oragadam) பகுதியில் ரெனால்ட்-நிஸான் நிறுவனங்களின் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதுடன் மட்டுமல்லாது, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. எனவே இந்தியாவின் ஆட்டோமொபைல் தொழில்துறையில், இந்த தொழிற்சாலை மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

இத்தனை ஆயிரம் கோடி முதலீடா!
இந்த சூழலில் தமிழ் நாட்டில் மேலும் பல்லாயிரக்கணக்கான கோடிகளை முதலீடு செய்து, தொழிலை விரிவுபடுத்துவதற்கு ரெனால்ட்-நிஸான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. தமிழ் நாடு முதலமைச்சர் (Chief Minister) மு.க.ஸ்டாலின் (MK Stalin) முன்னிலையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU - Memorandum of Understanding) இன்று (பிப்ரவரி 13) கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி ரெனால்ட்-நிஸான் நிறுவனங்கள் சென்னை தொழிற்சாலையில் 5,300 கோடி ரூபாயை முதலீடு செய்யவுள்ளன.
இத்தனை புதிய கார்கள் வரப்போகுதா!
இதன் மூலம் சென்னையில் உள்ள அந்நிறுவனங்களின் தொழிற்சாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. அத்துடன் இந்த புதிய முதலீட்டின் மூலம் சென்னை தொழிற்சாலையில் ரெனால்ட்-நிஸான் நிறுவனங்கள் 6 புதிய கார்களை உற்பத்தி செய்யவுள்ளன. இதில், 2 எலெக்ட்ரிக் கார்களும் (Electric Cars) அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 6 புதிய கார்களில், 3 கார்கள் ரெனால்ட் நிறுவனத்துடையதாக இருக்கும். அதே நேரத்தில் எஞ்சிய 3 கார்கள் நிஸான் நிறுவனத்துடையதாக இருக்கும்.

இத்தனை பேருக்கு வேலை கிடைக்க போகுதா!
இந்த புதிய கார்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. அதே சமயம் இந்த 6 புதிய கார்களில் 4 கார்கள் எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்தவையாக இருக்கும். எஞ்சிய 2 கார்களும், எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்கும். ரெனால்ட்-நிஸான் நிறுவனங்களின் இந்த புதிய முதலீட்டின் மூலம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகிழ்ச்சி!
ரெனால்ட்-நிஸான் நிறுவனங்களின் புதிய முதலீடானது, உற்பத்தியை அதிகரிக்க உதவுவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கும் பயன்படுத்தப்படும். இதன் மூலம் இந்தியாவில் தங்களது கார் விற்பனையை அதிகரிப்பதற்கு ரெனால்ட்-நிஸான் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அத்துடன் இந்த புதிய முதலீடு மூலம் தமிழ் நாட்டின் பொருளாதாரத்திற்கும் நன்மை கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே தமிழ் நாட்டு மக்கள் மத்தியிலும் இந்த புதிய முதலீடு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விலை கம்மியான கார்களா!
இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயமும் உள்ளது. ரெனால்ட்-நிஸான் நிறுவனங்களிடம் இருந்து வரவுள்ள 2 புதிய எலெக்ட்ரிக் கார்களும் மாஸ்-மார்க்கெட் கார்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது நிறைய பேரால் வாங்க கூடிய வகையில், மிகவும் குறைவான விலையில் அந்த எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வரவுள்ளன. இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் புரட்சி உருவாகியுள்ள நிலையில், புதிய மாடல்களுக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இது நிச்சயம் மகிழ்ச்சியான செய்திதான்.
காலரை தூக்கி விடுங்க!
தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் டாடா (Tata), மஹிந்திரா (Mahindra), ஹூண்டாய் (Hyundai) மற்றும் எம்ஜி (MG) போன்ற பல்வேறு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகின்றன. இந்த வரிசையில் ரெனால்ட் மற்றும் நிஸான் நிறுவனங்களும் கூடிய விரைவில் இணையவுள்ளன. தமிழ் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்கள் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படவுள்ளது நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய விஷயம்தான் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications








