ரெனால்ட் பக்காவா ஸ்கெட்ச் போட்டுடுச்சு!! எலக்ட்ரிக் கார் இவ்வளவு ஸ்டைலா வந்தா எல்லாரது சாய்ஸும் இதுதான்!
ரெனால்ட் (Renault) மற்றும் ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனங்கள் இணைந்து விலை குறைவான எலக்ட்ரிக் கார்களை உருவாக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த கூட்டணியில் உருவாகும் எலக்ட்ரிக் கார்கள் எப்போதும் அறிமுகம் செய்யப்பட உள்ளன? என்பதை பற்றியும், இந்தியாவில் அந்த எலக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளதா என்பதையும் இனி பார்க்கலாம்.
ஐரோப்பிய கார் நிறுவனங்களான ரெனால்ட் மற்றும் ஃபோக்ஸ்வேகன் கூட்டணி சேர்ந்து கார்களை உருவாக்கும் முனைப்பில் உள்ளன. குறிப்பாக, எலக்ட்ரிக் கார்கள் இந்த கூட்டணியில் உருவாக்கப்பட உள்ளனவாம். ஆரம்பத்தில், ரெனால்ட் நிறுவனம் ஒரு முன்னணி கார் நிறுவனத்துடன் கூட்டணி சேரவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், எந்த கார் நிறுவனமாக அது இருக்கும் என்பது தெரியாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், அது ஃபோக்ஸ்வேகனாக இருக்கலாம் என ஆங்கில பத்திரிக்கைகள் செய்திகளை வெளியிட ஆரம்பித்துள்ளன. ரெனால்ட்- ஃபோக்ஸ்வேகன் கூட்டணியில் முதல் எலக்ட்ரிக் கார் ட்விங்கோ இவி என்ற பெயரில் வருகிற 2024ஆம் ஆண்டின் துவக்கத்தில் வெளியீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் ரெனால்ட் நிறுவனம் இந்த கூட்டணிக்காக பல்வேறு கார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
எந்தெந்த கார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது குறித்த விபரங்களை ரெனால்ட் வெளியிடவில்லை. ரெனால்ட் உடன் கூட்டணி சேர்வது குறித்து ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் இப்போதுவரையில் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. புதிய ட்விங்கோ இவி-க்காக ரெனால்ட்டும், ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகனும் கூட்டணி சேரவுள்ளதாக ஐரோப்பாவில் பிரபலமான ஆங்கில பத்திரிக்கையான இன்சைடர்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடர்ந்துக் கொண்டு இருப்பதாகவும் இன்சைடர்ஸ் தெரிவித்துள்ளது. எங்களுக்கு தெரிந்தவரையில், இன்னும் சில வாரங்களுக்குள் எந்த நிறுவனத்துடன் எலக்ட்ரிக் கார்களுக்கு கூட்டணி சேர போகிறோம் என்பதை ரெனால்ட் நிறுவனம் வெளியிட்டுவிடும். எந்த நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்தாலும், ரெனால்ட்டின் நோக்கம் ஒன்றுதான், விலை குறைவான எலக்ட்ரிக் கார்களை உருவாக்குவது.
அதன்படி, ட்விங்கோ எலக்ட்ரிக் காரின் விலை 20 ஆயிரம் யூரோக்களாக (கிட்டத்தட்ட ரூ.18 இலட்சம்) நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தை பொறுத்தவரையில், இந்த நிறுவனத்தில் இருந்து 25 ஆயிரம் யூரோக்களில் புத்தம் புதிய எலக்ட்ரிக் கார் ஒன்று 2025இல் வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், 20 ஆயிரம் யூரோக்களிலும் ஒர் எலக்ட்ரிக் வாகனத்தை உருவாக்க உள்ளதாக ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த எலக்ட்ரிக் கார் குறித்த எந்த விபரங்களும் இல்லை. ரூ.18 இலட்சத்தில் ஒரு எலக்ட்ரிக் கார் என்பது நமக்கு அதிகமாக தோன்றலாம். ஆனால், ஐரோப்பாவில் குறைவே ஆகும். ஏனெனில், ஐரோப்பாவில் எலக்ட்ரிக் கார்களின் விலை சராசரியாக 65,000 யூரோக்கள் என்ற அளவில் உள்ளது.
அதாவது, ரூ.58.47 இலட்சம் ஆகும். உலகிலேயே முன்னணி எலக்ட்ரிக் வாகன மார்க்கெட்டாக விளங்கும் சீனாவில் கூட எலக்ட்ரிக் கார்களின் சராசரி விலை 31 ஆயிரம் யூரோக்கள் என்ற அளவிலேயே உள்ளது. இவ்வாறு, ஐரோப்பாவில் எலக்ட்ரிக் கார்களின் விலை அதிகமாக இருப்பதினாலேயே, வாடிக்கையாளர்களை கவர விலை குறைவான எலக்ட்ரிக் கார்களை களமிறக்க ரெனால்ட் திட்டமிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரெனால்ட்டும் 20 ஆயிரம் யூரோக்களில் எலக்ட்ரிக் காரை கொண்டுவர யோசித்து வருகிறது. அதேபோல், ஃபோக்ஸ்வேகனும் 20,000 யூரோ எலக்ட்ரிக் காரை தனது எதிர்கால திட்டத்தில் வைத்துள்ளது. இந்த திட்டங்கள் எல்லாம் எதர்ச்சையாக மேற்கொள்ளப்பட்டது போல் தெரியவில்லை. ஆதலால், ரெனால்ட்டும், ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் கூட்டணி சேர்வதற்கு அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









