டெஸ்டிங் ஆரம்பிச்சாச்சு! இன்னும் கொஞ்ச நாள் தான்... இந்தியாவுக்கு வரப்போகும் டஸ்டர் கார்!
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ரெனால்ட், இந்நிறுவனம் நிஸான் என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ஆலைகள் அமைத்து தனித்தனி பிராண்டில் கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் தான் மிகவும் பிரபலமானது. இந்தியாவில் எஸ்யூவி கார்கள் பிரபலமானதற்கு இந்த டஸ்டர் காரும் ஒரு முக்கியமான காரணம்.
இந்த டஸ்டர் சில ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த கார் நிறுத்தப்பட்டபின்பு பலர் இந்த காரை மிஸ் செய்தனர். இன்றைய எஸ்யூவி ரசிகர்கள் எல்லாம் ரெனால்ட் நிறுவனத்திடம் இந்த காரை மீண்டும் மார்கெட்டிற்கு கொண்டுவரும்படி கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில் ரெனால்ட் நிறுவனம் தனது 3வது தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரை வடிவமைத்துள்ளது. அதை தற்போது டெஸ்ட் செய்தும் வருகிறது. இந்த காரை அந்நிறுவனம் இந்தியாவில் 2025ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னர் சர்வதேச அளவில் அறிமுகமாகிவிடும்.
இந்நிலையில் இந்த கார் குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி இந்த புதிய ரெனால்ட் டஸ்டர் கார் இந்தியாவில் 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆகிய 2 ஆப்ஷன் சீட்டர் கொண்ட காராக விற்பனைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இந்த கார் அப்படி விற்பனைக்கு வந்தால் இரண்டு செக்மெண்டில் உள்ள கார்களுக்கு போட்டியாக அமையும்.
5 சீட்டரை பொருத்தவரை ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, ஆகிய கார்களுக்கு போட்டியாகக் களம் இறங்கும். அதுவே 7 சீட்டரில் கியா கேரன்ஸ், ஹூண்டாய் அல்கேஸர், டாடா சஃபாரி, மற்றும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாகக் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய தலைமுறை குலோபல் மாடல் டஸ்டர் கார் சாலையில் டெஸ்ட் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில் இந்த காரில் நாம் எல்இடி ஹெட்லைட், ஆங்குலர் ஸ்டான்ஸ், ஃபிளாட் பானட் ஆகிய அம்சங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த வடிவமைப்பில்தான் இந்த கார் இந்தியாவிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த காரில் ரூஃப் ரெயில்கள், சதுரமான வீல் ஆர்ச், சி பில்லரில் பின்பக்க கதவுகளுக்கான புல் டைப் டோர் ஹேண்டில் ஆகிய அம்சங்கள் இப்பது காணக்கிடைக்கிறது. இந்த டஸ்டர் காரை பார்க்கும் போது பிக்ஸ்டர் கான்செப்ட் காரை போலவே தோற்றம் கொடுக்கிறது. இது ரோட்டில் பார்க்கவும் சிறப்பான தோற்றத்தை பெறுகிறது.
இந்த காரின் பின்புறம் ட்வின் பாட் ஸ்டைல் ஸ்பாய்லர்கள், புமராங் வடிவ டெயில் லேம்ப் ஆகியன உள்ளன. இந்த காரை இந்தியாவில் தயாரிக்கும் போது அந்நிறுவனத்தின் சிஎம்எஃப்-பி பிளாட்பார்மில் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிளாட்ஃபார்மை ரெனால்ட் மற்றும் நிஸான் ஆகிய 2 நிறுவனங்களும் சேர்ந்து உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் இந்த பிளாட்ஃபார்மில் தான் டஸ்டர் கார் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வரும் இந்த கார் பழைய டஸ்டர் காரை விட சற்று பெரிய காராக இருக்க அதிகம் வாய்ப்பிருக்கிறது. ரெனால்ட் நிறுவனம் இந்த டஸ்டர் காரை மட்டுமல்ல இதே பிளாட்ஃபார்மில் என்ட்ரி லெவல் இவி கார் ஒன்றையும் தயாரிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
ஆனால் இது பற்றி அந்நிறுவனம் எதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் சர்வதேச அளவில் இந்நிறுவனம் ரெனால்ட் க்விட் இடெக் என்ற காரை வைத்திருக்கிறது. அதாவது க்விட் காரின் இவி வெர்ஷன் கார் தான் இது இதில் 26.8 கிலோ வாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது முழு சார்ஜில் 271 கிமீ ரேஞ்ச் பயணிக்கும் திறன் கொண்டது.
இந்த கார் 44 பிஎச்பி பவரையும், 125 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த காரில் 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4 ஸ்போர்க் ஸ்டிரிங் வீல், இவி ஸ்பெசிஃபிக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டயர் பிரஷர் மானிட்டர், 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் ஏய்டு உள்ளிட்ட பல வசதிகள் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








