எல்லாருக்கும் பன்ச் கொடுக்க சூப்பரான பஞ்ச் கார் நவம்பர் மாசத்துல வர போகுது! இதுக்காகதான் எல்லாரும் வெயிட்டிங்!
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் சூப்பரான மற்றும் மலிவு விலை கார் மாடலாக பஞ்ச் இருக்கின்றது. இந்த காரின் இடத்தைப் பிடிக்க சந்தையில் தற்போது போட்டி அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக, ஹூண்டாய் நிறுவனத்தின் கண்களை பஞ்ச் கார் வெகுவாக உறுத்திக் கொண்டு இருக்கின்றது என்றே கூறலாம்.
இதனால்தான் சமீபத்தில் எக்ஸ்டர் எனும் கார் மாடலை, பஞ்ச் விற்பனையாகிக் கொண்டிருக்கும் மைக்ரோ எஸ்யூவி கார் பிரிவில் அது விற்பனைக்குக் களமிறக்கியது. இதுதவிர, இன்னும் சில நிறுவனங்களும் இந்த கார் (பஞ்ச்) மாடலுக்கு போட்டியாக மைக்ரோ எஸ்யூவி ரக காரை விற்பனைக்குக் கொண்டு வரலாமா என்கிற எண்ணத்தில் உள்ளன.

இந்த மாதிரியான சூழலிலேயே டாடா மோட்டார்ஸ் தனக்கு அதிகரித்து வரும் போட்டியை சமாளிக்க பஞ்ச் காரில் கூடுதலான சிறப்பு தேர்வுகளைச் சேர்க்கும் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையில் சன்ரூஃப் வசதி உடன் பஞ்ச் சிஎன்ஜி தேர்வை இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்தது.
இத்துடன், வெகு விரைவில் பஞ்ச் கார் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதுகுறித்த தகவலே தற்போது வெளியாகி உள்ளன. இதன் அறிமுகம் நவம்பர் 2023லேயே அரங்கேறிவிடும் என்று கூறப்படுகின்றது. இந்த தகவல் மின்சார கார் பிரியர்களை, குறிப்பாக, பஞ்ச் கார் பிரியர்களை மிகுந்த குஷியில் ஆழ்த்தி இருக்கின்றது.
அதிலும், பஞ்ச் இவி வரும் நவம்பர் மாதத்திற்கு உள்ளாகவே அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது என்கிற காத்திருப்பை எகிற செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்தியாவின் மலிவு விலை கார் மாடலாகவே பஞ்ச் எஸ்யூவி இருக்கின்றது. இந்த காரில் கொண்டு வரப்பட இருக்கும் மின்சார வெர்ஷனும் சற்று மலிவான விலையைக் கொண்டாதகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேநேரத்தில், டாடா ஏற்கனவே விற்பனைச் செய்துக் கொண்டிருக்கும் டியாகோ இவியைக் காட்டிலும் சற்று அதிக விலையில் விற்பனைக்கு வரலாம் என்றும் கூறப்படுகின்றது. நிறுவனத்தின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார் மாடலே டியாகோ இவி ஆகும். இந்த கார் இப்போதைய நிலவரப்படி ரூ. 8.69 லட்சம் தொடங்கி ரூ. 12.04 லட்சம் வரையில் விற்கப்படுவது குறிப்பிடத்தகுந்தது.
டாடா நிறுவனம் ஏற்கனவே இந்த பஞ்ச் இவி காரை இந்தியாவில் சோதனையோட்டம் செய்ய தொடங்கி விட்டது. தற்போது விரைவில் விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான பணிகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பஞ்ச் இவியும், ஐசிஇ எஞ்ஜின் கொண்ட பஞ்ச் காரும் தோற்றத்தில் ஒரே மாதிரியானதாகவே இருக்கப்போகின்றன.
அதேவேளையில், பஞ்ச் இவியில் கணிசமான சிறப்பு அலங்காரப் பொருட்களை டாடா மோட்டார்ஸ் சேர்க்க இருக்கின்றது. உதாரணமாக பஞ்ச் இவி எனும் பேட்ஜ், பிரத்யேக கிரில் மற்றும் பாடி பேனல்கள் ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன. இதுதவிர, 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இந்த காரில் இடம் பெற இருப்பது உறுதியாகி இருக்கின்றது.
மேலும், எலெக்ட்ரிக் சன்ரூஃப், 2 ஸ்போக்குகள் கொண்ட ஸ்டியரிங் வீல், மின்சார காருக்கு ஏற்ப மறு வடிவமைப்பு செய்யப்பட்ட சென்டர் கன்சோல் மற்றும் 360 டிகிரி கேமிரா உள்ளிட்ட அம்சங்களும் பஞ்ச் இவி-யில் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆனால், இந்த காரில் என்ன மாதிரியான திறன் கொண்ட பேட்டரி பேக் மற்றும் மின்சார மோட்டார் பயன்படுத்தப்பட இருக்கின்றன என்பது தெரியவில்லை.
டாடா நெக்ஸானைப் போல கணிசமான அளவு அதிக ரேஞ்ஜ் தரக் கூடியதாக டாடா பஞ்ச் இவி இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவின் மின்சார கார் உலகை டாடா மோட்டார்ஸே தற்போது ஆளுகை செய்துக் கொண்டிருக்கின்றது. இந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் விதமாக அந்நிறுவனம் தொடர்ச்சியாகப் புதுமுக எலெக்ட்ரிக் கார்களைக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றது.
இதன்படி, பஞ்ச் இவி மட்டுமின்றி இன்னும் சில எலெக்ட்ரிக் கார் மாடல்களும் டாடா மோட்டார்ஸின் மின் வாகன பிரிவில் இணைய உள்ளன. அந்தவகையில், அல்ட்ராஸ் இவி, கர்வ், ஹாரியர் இவி ஆகியவை விரைவில் நாட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதில், பெரும்பாலான எலெக்ட்ரிக் கார் மாடல்க வரும் 2024 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டிலேயே வெளியீட்டைக் காண இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்கள் பிரிவில் இப்போதே போட்டி அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றது. ஆனால், இந்த பிரிவில் மாருதி சுஸுகி இன்னும் ஒற்றை எலெக்ட்ரிக் கார் மாடலைக்கூட விற்பனைக்குக் களமிறக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. விரைவில் இந்த நிறுவனம் இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரின் வாயிலாக போட்டியில் இணைய இருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








