இந்திய மக்களுக்கு இவ்ளோ கம்மியான விலையில் டெஸ்லா காரா! மோடி பேசுனதும் உடனடியாக இறங்கி வந்த எலான் மஸ்க்!
அமெரிக்காவை சேர்ந்த எலெக்ட்ரிக் கார் (Electric Car) நிறுவனங்களில் ஒன்று டெஸ்லா (Tesla). இதன் தலைமை செயல் அதிகாரியாக (CEO - Chief Executive Officer) எலான் மஸ்க் (Elon Musk) உள்ளார். இவர்தான் ட்விட்டர் (Twitter) நிறுவனத்தின் உரிமையாளராகவும் இருக்கிறார். டெஸ்லா மற்றும் எலான் மஸ்க் ஆகிய 2 விஷயங்களுக்கும் அறிமுகமே தேவையில்லை.
தற்போதைய நிலையில் ஆசிய கண்டத்தில் டெஸ்லா நிறுவனத்தின் சீனாவில் (China) மட்டுமே எலெக்ட்ரிக் கார் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. ஆனால் சீனாவில் இயங்கி வரும் பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பது குறித்து தற்போது ஆலோசிக்க தொடங்கியுள்ளன. போதுமான மனித வளமும், ஆற்றலும் இருப்பது இந்தியாவின் மிகப்பெரிய பலம்.

டெஸ்லா நிறுவனத்தை பொறுத்தவரை கடந்த பல ஆண்டுகளாகவே இந்தியாவில் தங்களது எலெக்ட்ரிக் கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பது குறித்து ஆலோசித்து வருகிறது. ஆனால் வரி (Tax) விஷயத்தில் இந்திய அரசிற்கும், டெஸ்லா நிறுவனத்திற்கும் ஒத்து போகவில்லை. எனவே டெஸ்லாவின் இந்திய வருகை தொடர்ந்து தாமதமாகி கொண்டே செல்கிறது.
ஆனால் இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தபோது, எலான் மஸ்க்கை சந்தித்து பேசினார். இதன் பிறகு டெஸ்லா நிறுவனம் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தைக்குள் நுழையும் பணிகள் வேகம் எடுத்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடியும், எலான் மஸ்க்கும் சந்தித்த ஒரு சில நாட்களுக்கு பின்னர், இந்திய அரசுடன் டெஸ்லா நிறுவனம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கியுள்ளது.

எனவே கூடிய விரைவில் டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் தொழிற்சாலை இந்தியாவில் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் அமைக்கவுள்ள தொழிற்சாலையில் ஒரு ஆண்டுக்கு 5 லட்சம் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய முடியும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த தொழிற்சாலையில், வெறும் 20 லட்ச ரூபாய் என்ற விலையில் (Price) புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை தயாரிக்க டெஸ்லா நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் மிகவும் விலை உயர்ந்தவையாக இருக்கும்போது, 20 லட்ச ரூபாய் மட்டுமே என வெளியாகியுள்ள தகவல் இந்திய வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது.
முதலில் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள எலெக்ட்ரிக் கார்கள் 60 லட்ச ரூபாய் என்ற விலையில் இருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் டெஸ்லா நிறுவனம் வெறும் 20 லட்ச ரூபாய் என்ற விலையில் இந்தியாவிலேயே எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது.
டெஸ்லா நிறுவனம் இந்த விலை குறைவான புதிய எலெக்ட்ரிக் காரை இந்தியா மட்டுமின்றி, இந்தியாவை போன்று வளர்ந்து வரும் மேலும் பல வெளிநாடுகளிலும் விற்பனைக்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் அமைக்கவுள்ள தொழிற்சாலை மிகவும் முக்கியமான உற்பத்தி மையமாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் பெரும்பாலான எலெக்ட்ரிக் கார்கள் 20 லட்ச ரூபாய் அல்லது அதற்கும் மேலான விலையில்தான் கிடைக்கின்றன. எனவே டெஸ்லா நிறுவனம் 20 லட்ச ரூபாய் என்ற விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை களமிறக்கினால், அது நிச்சயம் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெறும்.
டெஸ்லா நிறுவனத்திற்கும், இந்திய அரசிற்கும் இடையே பேச்சுவார்த்தைகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருவதால், கூடிய விரைவிலேயே இது நடக்கும் என நாம் எதிர்பார்க்கலாம். டெஸ்லா ரசிகர்கள் மட்டுமல்லாது, அனைவருமே இதற்காக ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர் என்பதில் நமக்கு துளியும் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications








