இனி பெட்ரோல், டீசல் வண்டி ஒன்னு கூட ஓட கூடாது! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென வெளியான அதிரடி உத்தரவு!
இந்தியாவில் காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) வாகனங்கள்தான் மிக முக்கியமான காரணமாக இருக்கின்றன. எனவே சுற்றுச்சூழலுக்கு நட்பான எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாட்டை அரசு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
மத்திய அரசு மட்டுமல்லாது, பல்வேறு மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம், சாலை வரி மற்றும் பதிவு கட்டணங்களில் இருந்து விலக்கு போன்ற சலுகைகளை இதற்கு உதாரணமாக கூற முடியும்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வரும் மாநிலங்களில் ஒன்றாக டெல்லி உள்ளது. இதற்கு முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) தலைமையிலான ஆம் ஆத்மி (Aam Aadmi) அரசின் நடவடிக்கைகள்தான் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகின்றன.
இந்த வரிசையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் மற்றொரு மாநிலமான பஞ்சாப்பிலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் தற்போது ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பகவத் மான் (Bhagwant Mann) முதல் அமைச்சராக இருந்து வருகிறார்.

இவரது அரசில் போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் லல்ஜித் சிங் புல்லார். 2023 எலெக்ட்ரிக் வாகன கொள்கையை அமல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட மாநில அளவிலான எலெக்ட்ரிக் வாகன கமிட்டியின் கூட்டத்திற்கு அமைச்சர் லல்ஜித் சிங் புல்லார் தலைமை வகித்தார். அப்போது அவர் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
பஞ்சாப் மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் மாறுவதை ஊக்குவிக்கும் வகையில், அடுத்த 3 ஆண்டுகளில், சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான சலுகைகளை வழங்க அரசு முடிவு செய்திருப்பது, அமைச்சர் லல்ஜித் சிங் புல்லார் பகிர்ந்து கொண்ட தகவல்களில் மிக முக்கியமான ஒன்றாகும்.

எலெக்ட்ரிக் சைக்கிள்கள், எலெக்ட்ரிக் டூவீலர்கள், எலெக்ட்ரிக் ரிக்ஸாக்கள் மற்றும் எலெக்ட்ரிக் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு சலுகைகள் வழங்கப்படவுள்ளன. இதுதவிர பேட்டரி மூலம் இயங்கும் இலகு ரக வர்த்தக வாகனங்களுக்கும் பஞ்சாப் மாநில அரசு சலுகைகளை வழங்கவுள்ளது. யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு, பஞ்சாப் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதவிர பொருத்தமான இடங்களை கண்டறிந்து, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை (Charging Stations) அமைப்பது தொடர்பான அறிக்கையை ஒரு மாதத்திற்குள் தயாரிக்க வேண்டும் என பஞ்சாப் மாநில மின்சார வாரியம் மற்றும் பஞ்சாப் ஆற்றல் மேம்பாட்டு துறை ஆகியவற்றுக்கு, அமைச்சர் லல்ஜித் சிங் புல்லார் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் புதிதாக கட்டப்படவுள்ள ஷாப்பிங் மால்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் வசதி இருப்பது தொடர்பான கொள்கையை உருவாக்க வேண்டும் என வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அதிகாரிகளுக்கும் அமைச்சர் லல்ஜித் சிங் புல்லார் உத்தரவிட்டுள்ளார்.
இதுதவிர 15 ஆண்டுகளுக்கு மேலான அரசு பஸ்களை ஸ்கிராப்பிங் செய்து விட்டு, அதாவது அழித்து விட்டு, அவற்றுக்கு பதிலாக எலெக்ட்ரிக் பஸ்களை இயக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என போக்குவரத்து துறையை சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கும் அவர் அதிரடியாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை (Price) சற்று அதிகம். எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் செலவழிக்கும் தொகையை குறைக்க வேண்டும் என்றால், அரசு இத்தகைய நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் அவசியமான ஒன்றுதான்.
அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பதால், மக்கள் சுலபமாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க முடியும். அவர்களின் சுமை ஓரளவிற்கு குறையும் என்பது 100 சதவீதம் உறுதி. இதன் மூலமாக பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாடு படிப்படியாக முடிவிற்கு வரும் என அரசு எதிர்பார்க்கிறது. உண்மையை சொல்லப்போனால், பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை முடித்து கட்டுவதற்கான நடவடிக்கைகளில் ஒன்றுதான் இது!


Click it and Unblock the Notifications









