இந்திய மக்கள் இந்த மாதிரியான கார்களை வாங்குவது ரொம்ப குறைஞ்சிடுச்சு!! காரணம் என்ன தெரியுமா?
செடான் கார்களுக்கான தேவை வாடிக்கையாளர்கள் மத்தியில் மெல்ல, மெல்ல குறைந்துவரும் நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட செடான் கார்கள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை வரிசைப்படி, அதிகம் விற்பனை செய்யப்பட்டவைகளில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகளுடன் இனி பார்க்கலாம்.
ஏற்கனவே கூறியதுபோல், நமது இந்தியா மட்டுமின்றி, உலகளவில் எஸ்யூவி கார்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், செடான் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை மெல்ல, மெல்ல குறைந்து கொண்டே வருகிறது. இது இந்திய சந்தையில், கடந்த ஜூன் மாத விற்பனையிலும் எதிரொலித்துள்ளது. ஏனெனில் 2022 ஜூன் உடன் ஒப்பிடுகையில், பல செடான் கார்கள் கடந்த ஜூனில் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

வழக்கம்போல் கடந்த ஜூன் மாதத்திலும் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட செடான் காராக மாருதி சுஸுகி டிசைர் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 9,332 டிசைர் செடான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2022 ஜூன் மாதத்தில் சுமார் 12,597 டிசைர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
இந்த வகையில் டிசைர் கார்களின் விற்பனை ஆனது கடந்த ஆண்டு ஜூன் உடன் ஒப்பிடுகையில் இந்த ஜூனில் கிட்டத்தட்ட 26% குறைந்துள்ளது. இருப்பினும், இப்போதும் இந்தியாவில் விற்பனையாகும் 3இல் 1 செடான் கார் மாருதி டிசைர் ஆகும். டிசைருக்கு அடுத்து இந்த வரிசையில் ஹூண்டாய் அவ்ரா 2வது இடத்தை பிடித்துள்ளது. ஆனால் டிசைர் போல் இல்லாமல், 2022 ஜூனை விட அவ்ரா கார்களின் விற்பனை கடந்த ஜூனில் கணிசமாக அதிகரித்துள்ளது.

2022 ஜூனில் 4,102 அவ்ரா கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்த நிலையில், கடந்த ஜூனில் 4,907 அவ்ரா கார்கள் விற்கப்பட்டுள்ளன. இந்த வகையில் அவ்ரா கார்களின் விற்பனை ஆனது 19.62% அதிகரித்துள்ளது. 3வது இடத்திலும் ஹூண்டாய் மோட்டாரின் தயாரிப்பாக வெர்னா உள்ளது. சற்று விலைமிக்க செடான் காரான வெர்னாவை சமீபத்தில்தான் ஹூண்டாய் அப்டேட் செய்து அறிமுகப்படுத்தி இருந்தது.
இதற்கு கை மேல் பலனாக வெர்னாவின் விற்பனை ஆனது 2022 ஜூனை விட கடந்த ஜூன் மாதத்தில் சுமார் 134.94% உயர்ந்துள்ளது. அதாவது, 2022 ஜூனில் வெறும் 1,703 வெர்னா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் 4,001 வெர்னா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. வெர்னாவுக்கு அடுத்து 5வது இடத்தில் ஹோண்டாவின் காம்பெக்ட் செடான் காரான அமேஸ் உள்ளது.

2022 ஜூனிலும் சரி, 2023 ஜூனிலும் சரி அமேஸ் கார்களின் விற்பனையில் பெரியதாக மாற்றமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், கடந்த ஜூன் மாதத்தில் 3,602 அமேஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், 2022 ஜூனில் 3,350 அமேஸ் கார்கள் விற்கப்பட்டு இருந்தன. 5வது இடத்தில் டாடா மோட்டார்ஸின் காம்பெக்ட் செடான் காரான டிகோர் 3,335 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது.
டிகோரை தொடர்ந்து, 6வது மற்றும் 7வது இடங்களில் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் மாருதி சுஸுகி சியாஸ் கார்கள் உள்ளன. இவை இரண்டின் கடந்த ஜூன் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 1,812 மற்றும் 1,744 ஆகும். இதில் சியாஸ் கார்கள் கடந்த ஆண்டு ஜூனில் இதனை காட்டிலும் 200 யூனிட்கள் குறைவாக விற்கப்பட்டு இருந்தது. 8வது மற்றும் 9வது இடங்களில் ஸ்கோடா ஸ்லாவியா (1,639) மற்றும் ஹோண்டா சிட்டி (1,478) கார்கள் உள்ளன. கடைசி 10வது இடத்தில் டொயோட்டா காம்ரி உள்ளது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஆக மொத்தத்தில், இந்திய சந்தையிலும் பெரும்பாலான செடான் கார்களின் விற்பனை குறைந்து வருவதை கடந்த ஜூன் மாத விற்பனை நிலவரம் வெளிக்காட்டுகிறது. இந்த 10 செடான் கார்களில் ஓரளவிற்கு விற்பனையில் முன்னேற்றம் கண்டுள்ள ஒரே செடான் கார் ஹூண்டாய் வெர்னா ஆகும். அதுவும், வெர்னாவை சமீபத்தில் அப்டேட் செய்த காரணத்தினாலேயே இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









