சேல்ஸ் பெரிசா இல்ல... இருந்தாலும் நமது இந்தியா தான் ஸ்கோடாவுக்கு பெரிய சந்தையாம்!!
ஐரோப்பாவிற்கு அடுத்து இந்தியா தான் கார்கள் விற்பனையில் ஸ்கோடாவிற்கு பிரதான சந்தையை விளங்குவது தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் மூலம் மீண்டும் ஒருமுறை உறுதியாகி உள்ளது. அப்படி எந்த தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.
ஐரோப்பிய நாடான செக் குடியரசில் தோன்றிய கார் தயாரிப்பு நிறுவனம் ஸ்கோடா ஆட்டோ ஆகும். ஃபோக்ஸ்வேகன் குழுமத்தில் இருக்கும் இந்த நிறுவனத்திற்கு நமது இந்தியா பல வருடங்களாக பெரியதாக நம்பிக்கைக்குரிய சந்தையாக இருந்ததில்லை. ஆனால் அந்த நிலை 2021இல் குஷாக் எஸ்யூவி காரின் அறிமுகத்திற்கு பிறகு மெல்ல மெல்ல மாற்றம் கண்டு வருகிறது. அதன்பின் அறிமுகமான ஸ்லாவியா செடானும் இந்தியாவில் ஸ்கோடாவின் வெற்றிக்கரமான மாடல் என்றுதான் சொல்ல வேண்டும்.

எந்த அளவிற்கு என்றால், கடந்த 2022ஆம் ஆண்டில் கார்கள் விற்பனையில் ஜெர்மனி மற்றும் தாயக நாடான செக் குடியரசுக்கு அடுத்து ஸ்கோடாவிற்கு நமது இந்தியா தான் பெரிய சந்தையாக விளங்கியுள்ளது. நாடுகள் வாரியாக கடந்த ஆண்டில் ஸ்கோடா விற்பனை செய்த கார்கள் எண்ணிக்கை குறித்த விபரங்கள் தற்போது அதை வெளிக்காட்டி உள்ளன. செக் குடியரசில் தோன்றினாலும் ஸ்கோடா ஆட்டோவிற்கு மிக முக்கிய சந்தையாக அண்டை நாடான ஜெர்மனியே விளங்குகிறது.
ஏனெனில், ஆட்டோமொபைல் வாகனங்களின் பிறப்பிடம் என அழைக்கப்படுவது மட்டுமின்றி, அளவிலும், மக்கள் தொகையிலும் ஜெர்மனி பெரியது. இந்த நாட்டில் கடந்த 2022ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட ஸ்கோடா கார்களின் எண்ணிக்கை மொத்தம் 1,34,300 ஆகும். இதற்கு அடுத்து 2வது இடத்தில் உள்ள செக் குடியரசு நாட்டில் கூட 71,200 கார்களை மட்டுமே ஸ்கோடா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

அதாவது, உள்நாட்டை காட்டிலும் அண்டை நாடான ஜெர்மனியில் ஏறக்குறைய 60,000 கார்கள் கூடுதலாக ஸ்கோடா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இவை இரண்டிற்கும் அடுத்தே நமது இந்தியா உள்ளது. நமது நாட்டில் கடந்த 2022இல் மொத்தம் 51,900 ஸ்கோடா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய 2021ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்கப்பட்ட ஸ்கோடா கார்களின் எண்ணிக்கையை காட்டிலும் சுமார் 128% அதிகமாகும்.
நமது இந்தியாவில் ஸ்கோடா ஒன்றும் அந்த அளவிற்கு முன்னணி கார் பிராண்ட் கிடையாது. கடந்த ஆண்டில் அதிகளவில் கார்களை விற்பனை செய்த நிறுவனங்கள் வரிசையில் 9வது இடத்திலேயே உள்ளது. 51,900 என்பது இந்தியாவின் நம்பர்.1 கார் பிராண்ட்டான மாருதி சுஸுகி நிறுவனம் ஒரு மாதத்தில் விற்பனை செய்யும் கார்கள் எண்ணிக்கையில் பாதி ஆகும்.

ஆனால் நம் நாடு ஜெர்மனியை காட்டிலும் பெரியதாக இருப்பதால், ஸ்கோடா போன்ற நிறுவனங்களுக்கு கூட வாழ்வளிக்கக்கூடிய சந்தையாக விளங்குகிறது. ஸ்கோடா ஆட்டோவிற்கு இந்தியாவில் தொழிற்சாலை உள்ளது. மற்ற ஐரோப்பிய நாடுகளில் கார்களை உற்பத்தி செய்வதை காட்டிலும் இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்வது செலவு குறைந்ததாகவும், சவுகரியமானதாகவும் விளங்குவதாக ஸ்கோடா நிறுவனம் சார்பில் பல்வேறு பேட்டிகளில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதனாலேயே வியாட்நாம் நாட்டில் புதியதாக வணிகத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுவரும் ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் அந்த நாட்டில் அசெம்பிள் தொழிற்சாலையை மட்டும் நிறுவி, கார் பாகங்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் ஸ்கோடா நிறுவனத்தின் இந்த எழுச்சிக்கு குஷாக் மற்றும் ஸ்லாவியா கார்கள் முக்கியமான காரணங்களாகும். இருப்பினும் உலகளவில் கடந்த ஆண்டில் அதிகம் விற்பனையான ஸ்கோடா கார் என்றால், அது ஆக்டேவியா ஆகும்.


Click it and Unblock the Notifications








