இந்த மாதிரியான எலக்ட்ரிக் காரை தான் எதிர்பார்த்துட்டு இருந்தோம்!! ஸ்கோடா களமிறக்குது!
ஸ்கோடா என்யாக் (Skoda Enyaq) எலக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் இந்தியாவில் பொது சாலையில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளன. சிவப்பு நிற நம்பர் பிளேட் உடன் ஸ்கோடா என்யாக் கார்கள் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படமும், அதில் ஒரு கார் சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்ட போது எடுக்கப்பட்ட படமும் இணையத்தில் வெளியாகி உள்ளன.
ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் அதன் முதல் எலக்ட்ரிக் காராக என்யாக்கை விற்பனைக்கு அறிமுகப்படுத்த தயாராகி வருவது போல் தெரிகிறது. ஏனெனில், இரு என்யாக் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் இந்தியாவில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

இந்த படங்களில், காரின் தோற்றம் தெளிவாக தெரிகிறது. அதாவது, எந்தவொரு மறைப்பாலும் இந்த என்யாக் கார்கள் மறைக்கப்பட்டு இல்லை. சோதனை ஓட்டத்தில் உள்ளன என்பதை குறிக்கும் விதமாக சிவப்பு நிற நம்பர் பிளேட் மட்டும் கார்களில் பொருத்தப்பட்டுள்ளது. சில வெளிநாடுகளில் ஸ்கோடா என்யாக் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் உள்ளன.
அங்கிருந்துதான், இந்த சோதனை ஓட்டத்திற்கான என்யாக் கார்கள் கொண்டுவரப்பட்டு இருக்கும். சோதனை ஓட்டங்கள் ஆரம்பித்து இருப்பதால், என்யாக் எலக்ட்ரிக் காரின் இந்திய அறிமுகத்தை வருகிற 2024ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கிறோம். என்யாக் எலக்ட்ரிக் கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.

இந்தியாவில் உற்பத்தி செய்வதாக இருந்தால், இந்திய மார்க்கெட்டிற்கென பிரத்யேகமான தோற்றத்தில் என்யாக் காரை உருவாக்கி, அதனை முழு மறைப்புகளுடன் பொது சாலையில் ஓட்டிப் பார்த்து ஸ்கோடா சோதனை செய்திருக்கும். இதனால், முழுவதுமாக வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட என்யாக் கார்களே இந்தியாவில் காரை முன்பதிவு செய்பவர்களுக்கு டெலிவிரி செய்யப்படும்.
இதன் காரணமாக காரின் விலையை கொஞ்சம் அதிகமாகவே எதிர்பார்க்கலாம். கார் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் காலத்தில் தேவைகள் அதிகரிக்கும் பட்சத்தில், என்யாக் கார்கள் வெளிநாட்டில் இருந்து பாகங்களாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படலாம். ஸ்கோடா என்யாக் இந்தியாவில் விற்பனையில் ஹூண்டாய் ஐயோனிக் 5 மற்றும் கியா இவி6 எலக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்இபி பிளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டு என்யாக் டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் ஒரு அங்கமாகவே ஸ்கோடா ஆட்டோ செயல்பட்டு வருகிறது. ஸ்கோடா என்யாக் எலக்ட்ரிக் காரின் நீளம் 4,648மிமீ. அதுவே, முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 2,765மிமீ ஆகும்.
அதாவது, காரின் உடல் அமைப்பில் சக்கரங்கள் நன்கு தூரமாக வழங்கப்படுகின்றன. இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் அகலம் 1,877 மிமீ மற்றும் உயரம் 1,618 மிமீ ஆகும். நன்கு நீளமான காராக இருப்பினும், காருக்கு உள்ளே 2 வரிசைகளில் மட்டுமே இருக்கைகள் வழங்கப்படுகின்றன. வெளிநாட்டில் மொத்தம் 5 விதமான வேரியண்ட்களில் என்யாக் இவி விற்பனை செய்யப்படுகிறது. அவற்றுள், என்யாக் 80 இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கு நன்றாகவே மார்க்கெட் விரிவடைந்து இருக்கிறது. ஆதலால், சரியான நேரத்தில்தான் தனது முதல் எலக்ட்ரிக் காரை ஸ்கோடா நிறுவனம் களமிறக்க உள்ளது. ஆனால், முழுவதும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட உள்ளதால், என்யாக் இவி எந்த அளவிற்கு இந்தியாவில் வெற்றிப் பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Image Courtesy: Sarthak Shewale/Facebook


Click it and Unblock the Notifications









