இந்தியாவுக்கு அடிச்சது ஜாக்பாட்! உலகத்துக்கே இனி இந்தியா தான் படியளக்க போகுது! எப்படி தெரியுமா?
உலகின் பல முக்கியமான கார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவை ஒரு ஏற்றுமதி மையமாக மாற்ற முடிவு செய்துள்ளது. அதன்படி இந்தியாவில் கார்கள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளது. இதனால் இந்தியாவின் பொருளாதாரம் பல மடங்கு உயர வாய்ப்புள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா ஏற்கனவே ஜப்பானை பின்னுக்கு தள்ளி கார் தயாரிப்பில் உலகின் மூன்றாவது பெரிய நாடாக மாறிவிட்டது. இந்நிலையில் உலகில் பல முக்கியமான வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவை குறி வைக்க துவங்கிவிட்டன. உலக வாகன தயாரிப்பாளர்கள் பலர் தங்கள் காஸ்ட்லியான கார்களை இந்தியாவிற்கு விற்பனை செய்ய ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதன்படி நிஸான் நிறுவனம் தற்போது இந்தியாவை ஒரு ஏற்றுமதி மையமாக உருவாக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சர்வதேச அளவில் நிஸான் மற்றும் ரெனால்ட் ஆகிய இரு நிறுவனங்களிடையே ஒப்பந்தம் இருக்கிறது. இந்த இரு நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து இந்த ஆண்டு 600 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பணத்தை செலவு செய்து 6 புதிய கார்களை களம் இறக்க முடிவு செய்துள்ளனர். இதில் எலக்ட்ரிக் கார்களும் அடங்கும். இந்த கார்கள் எல்லாம் 2025 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கார்கள் பெரும்பாலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்ய நிஸான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்நிறுவனத்திற்கு நல்ல லாபம் கிடைக்கும் எனவும் மேலும் இந்தியாவில் உள்ள தனது ஆலைகளை விரிவுபடுத்தி அதை அதிகமாக பயன்படுத்த முடியும் என்பதால் இந்த முடிவை நிறுவனம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோமொபைல் வல்லுநர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வில் இந்திய மக்கள் சிறிய ரக கார்களை விட்டுவிட்டு பெரிய மற்றும் மத்திய ரக கார்களை அதிகம் விரும்பி வருகின்றனர். இது சர்வதேச அளவிலான ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களை தங்கள் புதிய கார்களை முதன் முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்த தூண்டுதலை ஏற்படுத்தி வருகிறது என தெரிவித்துள்ளனர். இதனால் வருங்காலத்தில் இந்தியாவை மையப்படுத்திய பல கார்கள் உருவாக்கப்படும் என தெரிகிறது.
வருங்காலங்களில் தயாரிக்கப்படும் கார்கள் இந்தியாவிற்கு முதன்மை முக்கியத்துவம் கொடுத்து முதலில் ரிலீஸ் செய்யவும், பின்னர் இங்கிருந்து கிடைக்கும் அனுபவங்களை வைத்து மற்ற உலக நாடுகளுக்கு தகுந்தார் போல் இதை மாற்றியமைத்து விற்பனைக்கு கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவிற்கு இனி முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உலக அளவை கணக்கிடும்போது இந்தியாவில் கார்களை தயாரிக்க ஆகும் செலவு மிகவும் குறைவாக தான் இருக்கிறது என்பதால் பல நிறுவனங்கள் இந்தியாவிலேயே கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை கார்களுக்கான உதிரிபாகங்கள் தாராளமாக கிடைக்கிறது. அதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் இந்தியாவில் இருக்கிறது.
அதே நேரம் இந்தியாவில் ஊழியர்களின் சம்பளமும் உலக அளவை ஒப்பிடும்போது குறைவாக இருப்பதால் இந்தியா ஆட்டோமொபைல் தயாரிப்பில் ஒரு முக்கிய வளர்ச்சியை பெறப்போகிறது என்பது உறுதியாகிறது. இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சமீபத்தில் வெளியிட்ட ஒரு தகவலின் படி 2023 இந்தியாவில் வாகன உதிரிபாகங்கள் செட்டார் 33 சதவீதம் வளர்ந்து 70 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான மதிப்பை பெற்றுள்ளதாக கூறியுள்ளனர்.
இது மட்டுமல்ல தற்போது இந்தியாவில் மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ் மஹிந்திரா நிறுவனங்கள் அதிக அளவிலான விற்பனையை பெற்று வருகின்றன. இந்நிறுவனம் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டு முழுமையாக இந்திய நிறுவனங்களாக செயல்படுவதால் இந்த நிறுவனங்களுடன் இந்தியாவில் போட்டியிடுவதை விட இந்தியாவில் வாகனங்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்பி அங்கு தங்கள் மார்க்கெட்டை விரிவுபடுத்திக் கொள்ளவே பல வெளிநாட்டு நிறுவனங்கள் விரும்புவதாக தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா உலக அளவில் மிகப்பெரிய ஆட்டோமொபைல் ஏற்றுமதி மையமாக உருவாகும் பட்சத்தில் இந்தியாவில் அதற்கான பொருளாதார வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஆட்டோமொபைத் துறை அதிக பணம் புழங்கும் துறை என்பதால் மிகப்பெரிய அளவிலான பொருளாதார வளர்ச்சியை இந்தியாவிற்கு இந்த ஆட்டோமொபைல் மையம் ஏற்படுத்தித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









