இனி யாராலயும் வாங்க முடியாது! எல்லாருக்கும் பிடிச்ச காரின் விற்பனையை திடீர்னு நிறுத்தீட்டாங்க! மனசே விட்றுச்சு
இந்தியாவில் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளின் 2வது கட்டம் (BS6 Phase 2) விதிமுறைகள் தற்போது அமலுக்கு வந்துள்ளன. கடந்த ஏப்ரல் 1ம் தேதிதான், இந்த புதிய விதிமுறைகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டன. இது இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளின் 2வது கட்டத்திற்கு இணங்கும் வகையில் பல்வேறு கார்கள் அப்டேட் செய்யப்பட்டு, தொடர்ந்து விற்பனையில் நீடித்து வருகின்றன. மறுபக்கம் பல்வேறு கார்கள் இந்த புதிய விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் அப்டேட் செய்யப்படவில்லை. எனவே அவற்றின் விற்பனை அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதில், இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வந்த ஸ்கோடா ஆக்டேவியா (Skoda Octavia) காரும் ஒன்றாகும். இது செடான் (Sedan) ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்று. ஸ்கோடா நிறுவனம் பிரீமியமான கார்களை தயாரிப்பதற்கு பெயர் பெற்றது. இந்த வகையில் ஸ்கோடா ஆக்டேவியா காரும் பிரீமியமான ஒன்றாகதான் இருந்து வந்தது.
சற்று விலை உயர்ந்த காராக இருந்தாலும் கூட, வாடிக்கையாளர்களால் அதிகம் நேசிக்கப்பட்ட கார்களில் ஒன்றாக இதனை குறிப்பிடலாம். இருந்தாலும் ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து ஆக்டேவியா தற்போது நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதன் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டதையே இது உணர்த்துகிறது.

ஸ்கோடா ஆக்டேவியா காரின் புதிய தலைமுறை மாடல், இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதில், 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 188 பிஹெச்பி பவர் மற்றும் 320 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருந்தது.
இந்த இன்ஜினுடன், 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டிருந்தது. பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளின் 2வது கட்டத்திற்கு இணங்கும் வகையில் அப்டேட் செய்தால், லாபகரமாக இருக்காது என ஸ்கோடா நிறுவனம் கருதியதால்தான், ஆக்டேவியா கார் இந்திய சந்தையில் விற்பனையில் இருந்து விலக்கப்பட்டுள்ளது.
ஸ்கோடா ஆக்டேவியா கார் விற்பனையில் இருந்து விலக்கப்பட்டாலும் கூட, அந்நிறுவனத்தின் ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) ஆகிய 2 கார்களும் பல்வேறு சாதனைகளை தொடர்ச்சியாக செய்து வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனைகளில் முதலில் ஸ்கோடா குஷாக் கார் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (Safety Rating) பெற்றிருந்தது. அதை தொடர்ந்து தற்போது ஸ்கோடா ஸ்லாவியா காரும், 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை தன்வசப்படுத்தி, அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?
பிரீமியம் செடான் காரான ஸ்கோடா ஆக்டேவியா காரின் விற்பனை நிறுத்தப்பட்டிருப்பது வருத்தமான ஒரு விஷயம்தான். ஆனால் ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது சுறுசுறுப்பாக செயல்பட தொடங்கியுள்ளது. இந்திய சந்தைக்கென பல்வேறு புதிய திட்டங்களை வகுத்துள்ளது. எனவே ஆக்டேவியாவை விட சிறப்பான கார் ஒன்றை வரும் காலங்களில் நாம் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








