கேட்பாரற்று கிடந்த ஆல்டோவை சூரிய ஒளியில் ஓடும் காராக மாற்றிய மாணவர்கள்.. சார்ஜிங் மையத்தோட உதவியே தேவையில்ல!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஐந்து பேர் சாலையோரத்தில் கை விடப்பட்டு இருந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலான பழைய காரை சோலாரால் இயங்கும் வாகனமாக மாற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஐந்து பேர் கேட்பாரற்று கை விடப்பட்ட நிலையில் இருந்து காருக்கு புத்துயிர் (மறு அவதாரம்) வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்கள் அந்த காரை மீட்டெடுக்கும்போது இயக்கமற்ற நிலையில் இருந்தது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், அதனை சோலாரால் இயங்கும் மின்சார காராக மாறி இருக்கின்றது.

அவர்கள் மீட்டெடுத்திருப்பது மாருதி சுஸுகி ஆல்டோ காராகும். இதுவே அவர்களின் கைகளுக்கு வரும்போது உயரிற்ற நிலையில் இருந்திருக்கின்றது. அதாவது, துளியளவும் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்திருக்கின்றது. இத்தகைய ஆல்டோவிற்கு புதிய அவதாரத்தையும் கொடுத்து, உயிரையும் மாணவர்கள் கொடுத்திருக்கின்றனர். இந்த ஐந்து மாணவர்களும் நவாப் ஷா ஆலம் கான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இறுதியாண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகின்றனர்.
இந்த நிலையிலேயே படிப்புடன் சேர்த்து தங்களின் தனி திறமையை அவர்கள் இதன் வாயிலாக வெளிப்படுத்தி இருக்கின்றனர். மாணவர்களின் இந்த செயல் அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் பெருமிதம் சேர்க்கும் வகையில் அமைந்து இருக்கின்றது. குறிப்பாக, அவர்கள் பயிலும் கல்லூரிக்கு கூடுதல் பெருமையைச் சேர்த்திருக்கின்றது.
இன்றைய நவீன காலத்தில் பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்துக் காணப்படுகின்றது. இவற்றின் விலை உயர்வில் இருந்து நம்முடைய பாக்கெட்டுகளைக் காப்பாற்றும் விதமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் பெருமளவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. ஆனால், அவற்றை சார்ஜ் செய்வதில் மிகப் பெரிய சிக்கல் நிலவுகின்றது.
போதிய அளவு சார்ஜ் மையங்கள் நாட்டில் பயன்பாட்டில் இல்லாததே மிகப் பெரிய சிக்கலாக தென்படுகின்றது. சார்ஜிங் நிலையங்களின் பற்றாக் குறையால் பலர் பல மணி நேரம் சார்ஜ் செய்ய காத்திருக்க வேண்டி இருக்கின்றது. அப்படியே காத்திருந்தாலும், பின்னால், தொடர்ச்சியாக அதிக வாகனங்கள் சார்ஜ் போட காத்திருப்பதால் முழுமையாக சார்ஜாவதற்கு முன்னரே சார்ஜிங் துண்டிக்கப்பட்டு வாகனங்கள் வெளியேற்றப்படுகின்றன.
இத்தகைய சூழலிலேயே சமீப சில காலமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் சிக்கிக் கொண்டிருக்கின்றன. இந்தநிலையிலேயே சார்ஜிங் மையங்களின் உதவித் தேவைப்படாத வாகனத்தை மாணவர்கள் உருவாக்கி இருக்கின்றனர். சோலார் பேனல் வாகனத்தில் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் அதைச் சார்ஜ் செய்ய சூரிய ஒளி ஒன்றே போதுமானதாக இருக்கின்றது.
இந்த சோலார் பேனால் வாயிலாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் 60 கிமீ முதல் 70 கிமீ வரை பயணித்துக் கொள்ள முடியும். அதேவேளையில், மாணவர்களின் கை வண்ணத்தால் சோலார் வாகனமாக உருவெடுத்திருக்கும் இந்த கார் மணிக்கு 80 கிமீ வேகத்தில் பயணிக்கும். இந்த சூப்பரான வேக திறனுக்காக பிஎல்டிசி மோட்டாரையே அக்காரில் மாணவர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர்.
இத்துடன், 80-amp 48V பேட்டரி பேக்கையும் காரில் சேர்த்திருக்கின்றனர். சோலார் பேனல் வாயிலாக உருவாக்கப்படும் மின்சாரத்தை இந்த பேட்டரிகள் சேமித்து வைத்துக் கொள்ளும். இந்த பேட்டரிக்காக மட்டும் மாணவர்கள் ஒன்றரை லட்ச ரூபாய் வரை செலவு செய்திருக்கின்றனர். பேட்டரிகளை அவர்களாகவே காரின் உட் பகுதியில் பொருத்தி இருக்கின்றனர்.
இதன் வாயிலாக ரூ. 80 ஆயிரம் வரை மிச்சப்படுத்தப்பட்டு உள்ளது. இதேபோல், ஒட்டுமொத்தமாக நான்கு சோலார் பேனல்கள் ஆல்டோவில் பொருத்தப்பட்டு இருக்கின்றது. சூரிய சுலபமாக பட வேண்டும் என்பதற்காக அனைத்தும் காரின் மேற்கூரையிலேயே நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றன. பேட்டரி, சோலார் பேனல் மற்றும் பிற முக்கிய பாகங்களை வாங்கியதற்காக அவர்கள் ஒட்டுமொத்தமாக 2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருக்கின்றார்.
இத்தகைய மிகக் குறைவான செலவிலேயே துருவிற்கு இரையாகிக் கொண்டிருந்த ஆல்டோவை தற்போது மாணவர்கள் சோலாரால் இயங்கும் காராக மாற்றி இருக்கின்றனர். ஆல்டோ நீண்ட காலமாக கல்லூரியின் வளாகத்தில் கேட்பாரற்று கை விடப்பட்டிருந்த நிலையிலேயே இத்தகைய மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதை தன்னுடைய துறை தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே இப்படியாக கன்வெர்ட் செய்யும் பணியில் மாணவர்கள் களமிறங்கி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெட்ரோல், டீசல் விலை உயர்வில் இருந்து மட்டுமல்ல அந்த வாகனங்கள் வெளிப்படுத்தும் புகையின் கோரப்பிடியில் இருந்து தப்பிக்கும் விதமாகவும் மின்சார வாகனங்கள் பெருமளவில் பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலில் பைசா செலவில்லாமல் பயன்படுத்தக் கூடிய இந்த சோலார் வாகனங்களை மாணவர்கள் உருவாக்கி இருப்பது இந்தியாவின் நல்ல எதிர்காலத்திற்கான அறிகுறியாக தென்படுகின்றது.


Click it and Unblock the Notifications








