இதனாலதாங்க இவரு சூப்பர் ஸ்டாரு.. எல்லாரும் பாராட்டதான் செஞ்சாங்க ரஜினி அவரோட தேவையையே பூர்த்தி பண்ணிட்டாரு!
நடிகர் ரஜினிகாந்த் சமூக சேவையில் ஈடுபட்டு வரும் ஓர் நபருக்கு விலை உயர்ந்த ஆம்புலன்ஸை பரிசாக வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் பரிசளித்ததற்கான காரணம் என்ன? மற்றும் அவர் என்ன மாதிரியான வாகனத்தை பரிசளித்துள்ளார்? என்பது பற்றிய விரிவான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் முன்னணி திரை நட்சத்திரங்களில் நடிகர் ரஜினியும் ஒருவர் என்பது ஊரறிந்த ஒன்று. இவருக்கு சம்பளமும் சரி, ரசிகப் பட்டாளமும் சரி அனைத்தும் கோடிகளைக் கடந்து உள்ளது. இருப்பினும், எளிமைக்கு பெயர்போனவராக நடிகர் ரஜினிகாந்த் இருக்கின்றார். இந்த நிலையிலேயே நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கவர செய்யும் வகையில் ஓர் செயலைச் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவர் சமூக சேவகர் ஒருவருக்கு விலையுயர்ந்த வாகனத்தை பரிசாக வழங்கி இருக்கின்றார். அது ஓர் ஆம்புலன்ஸ் ரக வாகனம் ஆகும். இதனையே தாமாக முன் வந்து சமூக சேவகருக்கு அன்பளிப்பாக ரஜினிகாந்த் வழங்கி உள்ளார். திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் ஆதரவற்ற நிலையில் கிடக்கும் சடலங்களை மீட்டெடுத்து, காவல்துறையின் அனுமதி உடன் நல்லடக்கம் செய்து வருகின்றார்.
இந்த நற்பணிக்காக அவருக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையிலேயே மணி மாறனின் சேவையில் தன்னுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் விலை உயர்ந்த ஆம்புலன்ஸை பரிசாக வழங்கி இருக்கின்றார். இதனால் நடிகர் ரஜினியை அவரது ரசிகர்கள் தற்போது தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட ஆரம்பித்திருக்கின்றனர்.

இதுவரை மணிமாறன் 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஆதரவற்ற பிரதேங்களை நல் அடக்கம் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சேவையை பாராட்டியே ரஜினிகாந்த் அவரது அறக்கட்டளை சார்பில் ஆம்புலன்ஸை பரிசாக வழங்கி இருக்கின்றார். மேலும், அவருடைய பணி சிறக்க வேண்டும் என்கிற எண்ணத்திலும் நவீன ஆம்புலன்ஸ் பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது.
பரிசாக வழங்கப்பட்டு இருக்கும் ஆம்புலன்ஸின் மதிப்பு ரூ. 8 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். ஆம்புலன்ஸ் உடன் சேர்த்து அதில் சில உயிர் காக்கும் கருவிகளும் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. இதனாலேயே அதன் விலை சற்று அதிகமாக உள்ளது. ஆம்புலன்ஸ் காரை பரிசாக வழங்கியதைத் தொடர்ந்து, "உங்களின் இந்த சேவை மனதை உருக செய்யும் வகையில் உள்ளது" என்றும் நடிகர் ரஜினிகாந்த் மணிமாறனிடம் கூறி இருக்கின்றார்.
காருக்கான ஒட்டுமொத்த கட்டணமும் ரஜினியின் அறக்கட்டளை வாயிலாக செலுத்தப்பட்டு இருக்கின்றது. காரை கைகளில் பெறுவதற்கு முன்னர் வரை மணிமாறன் இருசக்கர வாகனத்திலேயே பயணத்தை மேற்கொண்டு வந்திருக்கின்றார். இந்த நிலையிலேயே கார் வகையிலான ஆம்புலன்ஸ் அவருக்கு அன்பளிப்பு செய்யப்பட்டு இருக்கின்று. இது மாருதி சுஸுகி ஈகோ ஆகும்.
இந்த வாகனத்தை மாருதி சுஸுகி பயணிகள், கார்கோ மற்றும் ஆம்புலன்ஸ் என பல தரப்பட்ட வெர்ஷன்களில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதில் ஆம்புலன்ஸ் வெர்ஷனையே ரஜினி மணிமாறனுக்கு வாங்கிக் கொடுத்திருக்கின்றார். மிக அதிக இட வசதிக் கொண்ட ஓர் வாகனமே ஈகோ ஆகும்.
இந்த வாகனத்தை ஒரு சிலர் பள்ளிக்கு சிறுவர்களை அழைத்து செல்லும் வாகனமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். குறைந்த பராமரிப்பு செலவில் அதிகம் லாபம் தரக் கூடிய வாகனமாக ஈகோ காட்சியளிக்கின்றது. எனவேதான் இதற்கு பயணிகள் பிரிவைப் போலவே கமர்சியல் பிரிவிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
சிஎன்ஜி வெர்ஷனிலும் இந்த காரை மாருதி சுஸுகி இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இது ஒரு கிலோ சிஎன்ஜிக்கு அதிகபட்சமாக 27.05 கிமீ வரை மைலேஜ் தரும். அதேவேளையில் இதன் பெட்ரோல் வெர்ஷன் ஒரு லிட்டருக்கு 19.71 கிமீ தொடங்கி 20.20 கிமீ வரையில் மைலேஜ் தரும். இத்தகைய அதிகம் மைலேஜ் தரும் வாகனமே சமூக சேவகர் மணி மாறனுக்கு பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் ரஜினியை போலவே பெரும் பாணக்காரர்கள் அனைவரும் நற்பணி சேவைகளை மேற்கொள்ள முன் வந்தால் இந்த உலகில் யாரும் பசியிலும், வறுமையிலும் தவிக்க மாட்டார்கள். ஆனால், ஏனோ பலருக்கு மற்றவர்களுக்கு உதவி செய்ய மனமே வருவதில்லை. பசியால் இறப்போர்களின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








