டாடா மோட்டார்ஸுக்கே விற்பனையில் டாடா காட்டியுள்ள ஹூண்டாய்!! இந்த 2 கார்களுக்கு தான் அதிக மவுசு போல...
இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான தேவை அதிகரித்துவரும் நிலையில், கடந்த மே மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 எஸ்யூவி கார்கள் எவை எவை என்பது குறித்த விபரங்களை இனி இந்த செய்தியில் அவற்றின் விற்பனை எண்ணிக்கைகளுடன் விரிவாக பார்க்கலாம்.
செடான் கார்களில் இருந்து இந்திய மக்களின் இரசனை எஸ்யூவி கார்களுக்கு மாறிவிட்டது. எஸ்யூவி கார்கள் கம்பீரமான தோற்றத்தில் காட்சியளிப்பது மட்டுமின்றி, எஸ்யூவி கார்களின் உட்புறத்தில் கூடுதல் இடவசதி கிடைக்கிறது. இவ்வளவு சிறப்புமிக்க எஸ்யூவி கார்கள் பல்வேறு வகைகளில் கிடைக்கின்றன.

அனைத்து விதமான எஸ்யூவி கார்களுள் மக்கள் பலரால் வாங்கப்படும் இந்தியாவின் நம்பர் ஒன் எஸ்யூவி காராக டாடா நெக்ஸான் கடந்த சில வருடங்களாக விளங்கிவந்தது. ஆனால் கடந்த மே மாத விற்பனையில் டாடா நெக்ஸானை மற்றொரு பிரபலமான எஸ்யூவி காரான ஹூண்டாய் க்ரெட்டா முந்தியுள்ளது. டாடா நெக்ஸானின் கடந்த மே மாத விற்பனை எண்ணிக்கை 14,423 ஆகும். இதனை காட்டிலும் வெறும் 26 யூனிட்கள் அதிகமாக விற்பனையாகி உள்ளதன் காரணத்தினால் க்ரெட்டா முதலிடத்தை பிடித்துள்ளது.
அதாவது, ஹூண்டாய் க்ரெட்டாவின் கடந்த மே மாத விற்பனை எண்ணிக்கை 14,449 ஆகும். ஆனால் 2022 மே மாதத்தில் 10,973 க்ரெட்டா கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தன. ஆனால் டாடா நெக்ஸான் 2022 மே மாதத்திலும் 14 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. இன்னும் சொல்லப்போனால், 2022 மே மாதத்தை காட்டிலும் கடந்த 2023 மே மாதத்தில் 191 நெக்ஸான் கார்கள் குறைவாக விற்பனையாகி உள்ளன.

ஹூண்டாய் க்ரெட்டா, டாடா நெக்ஸான் இவை இரண்டும் காம்பெக்ட் எஸ்யூவி கார்களாகும். அதாவது இவை இரண்டும் சற்று அளவில் சிறியவையே. இவை இரண்டு மட்டுமின்றி, இவற்றிற்கு அடுத்து 3வது இடத்திலும் மற்றொரு காம்பெக்ட் எஸ்யூவி காரான மாருதி சுஸுகி பிரெஸ்ஸா தான் உள்ளது. கடந்த மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ள பிரெஸ்ஸா கார்களின் எண்ணிக்கை 13,398 ஆகும். ஆனால் 2022 மே மாதத்தில் 10,312 பிரெஸ்ஸா கார்களை மட்டுமே மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது.
அந்த சமயத்தில், விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையில் இருந்தது. இதற்கு பதிலாக முற்றிலும் புதிய பிரெஸ்ஸா காரை கடந்த 2022 ஜூன் மாத இறுதியில்தான் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இவை மூன்றிற்கு அடுத்து 4வது இடத்தில் மற்றொரு பிரபலமான டாடா எஸ்யூவி காரான பஞ்ச் உள்ளது. நெக்ஸானை காட்டிலும் அளவில் சிறியதான பஞ்ச் காரின் விற்பனை மாதத்திற்கு மாதம் வளர்ச்சி கண்டு வருகிறது.

2022 மே மாதத்தில் 10,241 பஞ்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் 11,124 பஞ்ச் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஹூண்டாய் வென்யூ இவற்றிற்கு அடுத்து 10,213 யூனிட்களின் விற்பனை உடன் 5வது இடத்தில் உள்ளது. இவை ஐந்து தான் கடந்த மே மாதத்தில் 10,000 யூனிட்களுக்கும் மேல் விற்பனையான எஸ்யூவி கார்களாகும். இவற்றிற்கு அடுத்த 5 இடங்களில் உள்ள எஸ்யூவி கார்களை கீழுள்ள அட்டவணையில் காணலாம்.
| Rank | SUVs | May'23 | May'22 | Growth (%) YOY |
| 1 | Hyundai Creta | 14,449 | 10,973 | 31.68 |
| 2 | Tata Nexon | 14,423 | 14,614 | -1.31 |
| 3 | Maruti Brezza | 13,398 | 10,312 | 29.93 |
| 4 | Tata Punch | 11,124 | 10,241 | 8.62 |
| 5 | Hyundai Venue | 10,213 | 8,300 | 23.05 |
| 6 | Maruti Fronx | 9,683 | 0 | - |
| 7 | Mahindra Scorpio / N | 9,318 | 4,348 | 114.31 |
| 8 | Maruti Grand Vitara | 8,877 | 0 | - |
| 9 | Kia Sonet | 8,251 | 7,899 | 4.46 |
| 10 | Mahindra XUV700 | 5,245 | 5,069 | 3.47 |
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: டாடா நெக்ஸான் கார்களின் விற்பனையில் பெரியதாக மாற்றமில்லை. ஆனால் ஹூண்டாய் க்ரெட்டா விற்பனையில் ஒரேடியாக தாவி முதலிடத்தை பிடித்துள்ளது. மாருதி சுஸுகியின் புத்தம் புதிய எஸ்யூவி கார்களான ஃப்ரான்க்ஸ் மற்றும் கிராண்ட் விட்டாராவின் விற்பனையும் கடந்த மே மாதத்தில் நல்லப்படியாக இருந்துள்ளதை இங்கு பதிவு செய்தாக வேண்டும்.


Click it and Unblock the Notifications









