மாருதியின் புது எலெக்ட்ரிக் கார் விலை இவ்ளோதானா! சத்தமே இல்லாம அறிமுகம் பண்ணீட்டாங்க! கிலியில் போட்டியாளர்கள்!
சுஸுகி இடபிள்யூஎக்ஸ் (Suzuki eWX) என்ற எலெக்ட்ரிக் கார் (Electric Car) கான்செப்ட் மாடல் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் புகைப்படங்கள் வெளியாகி, சமூக வலை தளங்களில் பலரின் கவனத்தையும் கவர்ந்துள்ளன. இது குறித்த விரிவான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
இந்திய சந்தையில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) காரை போல், பாக்ஸி டிசைனில் இடபிள்யூஎக்ஸ் கான்செப்ட் மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 3,395 மிமீ, 1,475 மிமீ மற்றும் 1,620 மிமீ ஆகும்.

சுஸுகி இடபிள்யூஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் மாடலின் தொழில்நுட்ப தகவல்கள் எதுவும் தற்போது வெளியாகவில்லை. எனினும் இதன் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 230 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம் என கருதப்படுகிறது. வரும் நாட்களில் அதிகாரப்பூர்வமான தகவல்களை நாம் எதிர்பார்க்கலாம்.
வரும் அக்டோபர் 26ம் தேதியில் இருந்து நவம்பர் 5ம் தேதி வரை, 2023 ஜப்பான் மொபிலிட்டி ஷோ நடைபெறவுள்ளது. இதில் சுஸுகி இடபிள்யூஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் மாடல் காட்சிக்கு வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால் மாருதி சுஸுகி நிறுவனம் இடபிள்யூஎக்ஸ் கான்செப்ட் மாடலை தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தாலும் கொண்டு வரலாம். ஏனெனில் மாருதி சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் இன்னும் ஒரு எலெக்ட்ரிக் காரை கூட விற்பனைக்கு அறிமுகம் செய்யவில்லை.
ஆனால் டாடா (Tata), மஹிந்திரா (Mahindra), எம்ஜி (MG), ஹூண்டாய் (Hyundai) மற்றும் கியா (Kia) போன்ற நிறுவனங்கள் எல்லாம் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து விட்டன. இதில் டாடா நிறுவனமோ 3 எலெக்ட்ரிக் கார்களை தற்போது விற்பனை செய்து கொண்டுள்ளது.
அவை டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV), டாடா டிகோர் இவி (Tata Tigor EV) மற்றும் டாடா டியாகோ இவி (Tata Tiago EV) ஆகியவை ஆகும். எனவே புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் உள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளை எடுக்காமல் இல்லை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை (Maruti Suzuki Wagon R EV) விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டது. இதன் சோதனை ஓட்டங்கள் கூட நாட்டின் பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றன. ஆனால் அந்த திட்டம் நாளடைவில் கைவிடப்பட்டு விட்டது.
குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதுதான் இதற்கு முக்கியமான காரணமாக கூறப்பட்டது. மாருதி சுஸுகி நிறுவனத்தை பொறுத்தவரையில், குறைவான விலையில்தான் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஆனால் மாருதி சுஸுகி நிறுவனத்தின் திட்டங்களுக்கு ஏற்ற வகையில், இடபிள்யூஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் இருக்கலாம்.
பார்ப்பதற்கு வேகன் ஆர் போன்ற தோற்றத்தில் இருக்கிறது என்பது முதல் காரணம். இரண்டாவதாக இந்த எலெக்ட்ரிக் காரை ஓரளவிற்கு குறைவான விலையில் (Price) விற்பனைக்கு கொண்டு வர முடியும். இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், இந்த எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 8 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம். அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 12 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுஸுகி இடபிள்யூஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் மாடல் தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் இந்த சிறிய எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்பது எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications








