மொத்த இந்தியாவுக்கும் பெருமை!! யுகே-இல் இருந்து ஸ்விட்ச் நிறுவனத்துக்கு வந்த ‘பல்க்’ ஆர்டர்!
இந்தியாவை சேர்ந்த ஸ்விட்ச் மொபைலிட்டி (Switch Mobility) நிறுவனம் இங்கிலாந்துக்காக 70 பேருந்துகளை தயாரித்து வழங்க ஆர்டரை பெற்றுள்ளது. யுகே-இல் உள்ள ஸ்டேஜ்கோச் பஸ் நிறுவனத்துக்காக இந்த பேருந்துகளை ஸ்விட்ச் வழங்குகிறது.
இந்தியாவின் இந்துஜா குழுமத்தில் அங்கமாக வகிக்கும் பேருந்து மற்றும் எடை குறைவான கமர்ஷியல் வாகன தயாரிப்பு நிறுவனம் ஸ்விட்ச் மொபைலிட்டி. இந்தியாவில் பல்வேறு போக்குவரத்து துறைகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் ஸ்விட்ச் நிறுவனம் உற்பத்தி செய்த பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோல், சில வெளிநாட்டு நிறுவனங்கள் கூட ஸ்விட்ச்சின் தயாரிப்புகளை நம்பி வாங்கி உள்ளன. இந்த வரிசையில், யுகே-இல் உள்ள முன்னணி பேருந்து மற்றும் கோச் ஆப்ரேட்டரான ஸ்டேஜ்கோச் என்ற தனியார் நிறுவனத்துக்கு ஸ்விட்ச் மொபைலிட்டி நிறுவனம் 70 பேருந்துகளை தயாரித்து வழங்க ஆர்டரை பெற்றுள்ளது.
இந்த 70 பேருந்துகளில், ஸ்விட்ச் நிறுவனத்தின் 9.5 மீட்டர் நீளம் கொண்ட 10 மெட்ரோசிட்டி எலக்ட்ரிக் பேருந்துகளும் அடங்குகின்றன. இந்த எலக்ட்ரிக் பேருந்துகள் இலண்டனில் வழித்தடம் டபிள்யூ11-இல் இயக்கப்பட உள்ளன. மீதி 60 பேருந்துகள், 8.5 மீட்டர்கள் நீளம் கொண்ட ஸ்லிம்லைன் சோலோ பேருந்துகளாகும். இந்த பேருந்துகளை இங்கிலாந்து முழுவதும் இயக்க ஸ்டேஜ்கோச் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும், இந்த 60 ஸ்லிம்லைன் பேருந்துகளை ஸ்டேஜ்கோச் நிறுவனத்தின் விருப்பத்திற்கு ஏற்ப 28 பயணிகள் அமரக்கூடிய வகையில் ஸ்விட்ச் நிறுவனம் உருவாக்க உள்ளது. ஐரோப்பாவின் யூரோ 6 தர நிலைக்கு ஏற்ப இந்த பேருந்துகள் உருவாக்கப்படுகின்றன. யூரோ 6 தர நிலைக்கு இணக்கமாக உருவாக்கப்படும் பேருந்துகளை அப்டேரே பிராண்டின் கீழ் ஸ்விட்ச் நிறுவனம் விற்பனை செய்கிறது.
அதேபோல், ஸ்டேஜ்கோச் நிறுவனத்துக்காக உருவாக்கப்படும் இந்த 70 பேருந்துகளும் அப்டேரே பிராண்டில் விற்பனை செய்யப்பட உள்ளன. ஸ்விட்ச் மொபைலிட்டியின் மெட்ரோசிட்டி எலக்ட்ரிக் பேருந்துகள் இலண்டன் மாநகரில் வருகிற 2024ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து செயல்பட ஆரம்பித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் சில மாதங்கள் கழித்து சோலோ பேருந்துகளும் பயன்பாட்டிற்கு வந்துவிடும்.
அதிநவீன நிக்கல்-மாங்கனீசு-கோபால்ட் (NMC) தொழிற்நுட்பத்தில் எலக்ட்ரிக் பேருந்துகளை ஸ்விட்ச் நிறுவனம் உருவாக்குகிறது. இதன் விளைவாக, ஸ்விட்ச்சின் எலக்ட்ரிக் பேருந்துகள் செயல்திறன்மிக்கவைகளாக விளங்குகின்றன. அத்துடன், கூடுதல் செயல்படுதிறனுக்காகவும், பேருந்துகளின் ரேஞ்சை 170 மைல்கள் வரையில் கொண்டுவரவும் என்.எம்.சி தொழிற்நுட்பத்தை ஸ்விட்ச் மொபைலிட்டி அப்கிரேட் செய்துள்ளது.
மேம்பட்ட என்.எம்.சி தொழிற்நுட்பத்தில் இதுவரையில் 4000க்கும் அதிகமான பேருந்துகளை ஸ்விட்ச் உருவாக்கியுள்ளது. இதுகுறித்து ஸ்விட்ச் நிறுவனம் தெரிவிக்கையில், "ஸ்டேஜ்கோச் உடனான எங்கள் உறவை தொடர்ந்து விரிவுப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சமீபத்தில் இலண்டனில் 20 பேருந்துகள் டெலிவிரி செய்யப்பட்டதை தொடர்ந்து, மெட்ரோசிட்டி எலக்ட்ரிக் பேருந்துக்கான ஸ்டேஜ்கோச்சின் ரிப்பீட் ஆர்டர் இது" என கூறியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஸ்விட்ச்சின் எலக்ட்ரிக் பேருந்துகளை வாங்கியுள்ளதை இதற்குமுன் பார்த்துள்ளோம். சில மாநில அரசாங்கங்கள் கூட முன்வந்து வாங்கியுள்ளன. அந்த அளவிற்கு எலக்ட்ரிக் பேருந்துகள் தயாரிப்பில் நம்பகமான நிறுவனமாக மாறிவரும் ஸ்விட்ச்சின் தயாரிப்புகளை இங்கிலாந்தில் உள்ள ஒரு நிறுவனம் வாங்குவது, ஸ்விட்ச்சின் தயாரிப்புகள் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது.


Click it and Unblock the Notifications








