Tata Altroz CNG காரில் பயணிக்கும்போது வான்வெளியை பார்த்தவாறு பயணிக்க முடியும்.. வெளியானது சூப்பர் தகவல்!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அல்ட்ராஸ் சிஎன்ஜி கார் மாடலை டாடா மோட்டார்ஸ் அண்மையில் இந்திய சந்தையில் அறிமுப்படுத்தியது. மாருதி சுஸுகியின் பலேனோ மற்றும் டொயோட்டா கிளான்ஸா ஆகிய இரு கார் மாடல்களின் சிஎன்ஜி வெர்ஷனுக்கும் போட்டி அளிக்கும் விதமாக டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி-யை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.
அறிமுகத்தைத் தொடர்ந்து இந்த காருக்கான புக்கிங் பணிகளையும் டாடா தொடங்கி இருக்கின்றது. ரூ. 21 ஆயிரம் முன் தொகையில் காருக்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் முதல் ட்வின் (இரண்டு) சிலிண்டர் வசதிக் கொண்ட சிஎன்ஜி கார் இதுவாகும். ஆகையால் இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடிய வாகனமாக இதன் வருகை அமைந்துள்ளது.

இந்த நிலையிலேயே சிஎன்ஜி கார் பிரியர்களின் கவனத்தை கூடுதலாக ஈர்க்கும் பொருட்டு, டாடா மோட்டார்ஸ், இந்த காரில் பல்வேறு வசதிகளை வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக சன்ரூஃப் வசதியை சேர்த்து கூறப்படுகின்றது. இந்த தகவல் பிரீமியம் வசதிகளை அதிகம் விரும்பும் கார் பிரியர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
ஹேட்ச்பேக் கார்கள் பிரிவில் சன்ரூஃபை பெறும் இரண்டாவது தயாரிப்பு இது ஆகும். இந்திய வாகன உலகில் சன்ரூஃப் வசதி உடன் ஐ20 ஹேட்ச்பேக் மட்டுமே விற்பனைக்கு கிடைத்து வந்தது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமில்லைங்க இன்னும் பல வசதிகளை இந்த சிஎன்ஜி காரில் டாடா மோட்டார்ஸ் வழங்க இருக்கின்றது.

டாடா மோட்டார்ஸ் இப்போது வரை அல்ட்ராஸ் சிஎன்ஜி தேர்வின் விலைகளை அறிவிக்கவில்லை. இன்னும் ஒரு சில தினங்களில் இதன் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் விலைகள் அறிவிக்கப்படும் முன்னரே சிறப்பு வசதிகள் பற்றிய விபரங்களை ஒவ்வொன்றாக நிறுவனம் வெளியிட ஆரம்பித்துவிட்டது. அந்தவகையில், அல்ட்ராஸ் ஐசிஎன்ஜி தேர்வின் உயர்நிலை வேரியண்டான 'எக்ஸ்இசட் பிளஸ் எஸ்' தேர்வில் மட்டுமே வழங்கப்பட இருக்கின்றது.
இதுதவிர, டிரைவர்களுக்கான டிஜிட்டல் திரை, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்ட 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இன்னும் பல அம்சங்கள் அதில் இடம் பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காரில் இரண்டு சிலிண்டர் வசதியை அறிமுகம் செய்ய பல காரணங்கள் இருக்கின்றன.

ஆனால், மிக முக்கியமான காரணமாக, அதிக பூட் ஸ்பேஸ் வழங்க வேண்டும் என்பது மட்டுமே இருக்கின்றது. இப்போது விற்பனையில் இருக்கும் பெரும்பாலான சிஎன்ஜி கார்களில் 55 லிட்டர் முதல் 60 லிட்டர் வரை சிஎன்ஜி நிரப்பிக் கொள்ளக் கூடிய ஒரே சிலிண்டர் மட்டுமே வழங்கப்படுகின்றது. இதனால் பூட் ஸ்பேஸிஸ் இடம் வசதி என்பதே இல்லாமல் போய்விடுகின்றது.
இதனை தவிர்க்கும் விதமாக இரண்டு 30 லிட்டர் கொள்ளளவு வசதிக் கொண்ட சிலிண்டர்களை டாடா தனது அல்ட்ராஸ் சிஎன்ஜியில் வழங்கி இருக்கின்றது. ஆகையால், பெரிய லக்கேஜ்களைகூட காரின் பின் புறத்தில் வைத்துக் கொள்ள முடியும். இதன் மைலேஜ் விபரம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இருப்பினும், அல்ட்ராஸ் சிஎன்ஜி ஒரு கிலோவிற்கு 27 கிலோமீட்டர் வரையில் மைலேஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 1.2 லிட்டர் எஞ்ஜின் அல்ட்ராஸ் சிஎன்ஜி தேர்வில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் இயங்கும். சிஎன்ஜில் இயங்கும்போது இதன் திறன் வெளிப்பாடு 73.5 பிஎஸ் மற்றும் 103 என்எம் டார்க்கை வெளியேற்றும்.
இந்த மோட்டாருடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு மட்டுமே வழங்கப்படுகின்றது. இதே மோட்டார் பெட்ரோலில் இயங்கும்போது 84.8 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. டாடா அல்ட்ராஸ் பெட்ரோல் வேரியண்ட் ரூ. 6.45 லட்சம் ஆரம்ப விலையில் விற்கப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அல்ட்ராஸ் சிஎன்ஜி இந்திய சந்தையில் ரூ. 8 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனைக்கு வரும் என நாங்கள் யூகிக்கின்றோம். தற்போது சந்தையில் சிஎன்ஜி கார்களுக்கு நல்ல டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே டாடா அல்ட்ராஸ் ஐசிஎன்ஜி-யை விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இதற்கும் இந்தியர்கள் தங்களின் வரவேற்பை வாரி வழங்குவர் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









