Tata Altroz CNG Vs Maruti Baleno CNG... மைலேஜை விடுங்க இந்த விஷயத்துல டாடா காருதான் பெஸ்ட்!
டாடா மோட்டார்ஸ் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அல்ட்ராஸின் சிஎன்ஜி வெர்ஷனை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது டாடா அல்ட்ராஸ் ஐசிஎன்ஜி (Tata Altroz iCNG) எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும். இரண்டு சிஎன்ஜி சிலிண்டர்களுடன் இந்த கார் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது.
இந்தியாவிலேயே இதுபோன்று இரண்டு சிலிண்டர்களுடன் விற்பனைக்குக் கிடைக்கும் முதல் கார் இதுவே ஆகும். ஆகையால், இந்த காருக்கு இந்தியாவில் பலமடங்கு வரவேற்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டாடா நிறுவனம் இந்த கரை மாருதி சுஸுகி பலேனோ மற்றும் டொயோட்டா கிளான்ஸா ஆகிய கார் மாடல்களுக்கு போட்டி அளிக்கும் விதமாகவே விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

இதன் இரட்டை சிஎன்ஜி சிலிண்டர் செட்-அப்பிற்கும் இதுவே காரணம் ஆகும். பலேனோ மற்றும் கிளான்ஸா ஆகிய இரு கார் மாடல்களிலும் ஒற்றை சிலிண்டர் செட்-அப்பே வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுபோல் இன்னும் பல வசதிகள் பலேனோ மற்றும் கிளான்ஸாவிற்கு போட்டி அளிக்கும் வகையில் வழங்கப்பட்டிருக்கின்றன. அவை என்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.
சிஎன்ஜி நிரப்புதல்: டாடா அல்ட்ராஸ் ஐசிஎன்ஜி காரில் ஒவ்வொரு சிலிண்டரிலும் 30 லிட்டர் வரை கேஸை நிரப்பிக் கொள்ள முடியும். அதேவேளையில், ஒரே ஒரு சிலிண்டரை மட்டும் கொண்டிருக்கும் பலேனோ காரில் 55 லிட்டர் வரை நிரப்பிக் கொள்ள முடியும். இதே அளவிலேயே கிளான்ஸா காரிலும் சிஎன்ஜி-யை நிரப்பிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த இரு கார்களும் (பலேனோ மற்றும் கிளான்ஸா) வெவ்வேறு பிராண்டின் கீழ் விற்பனைக்குக் கிடைத்தாலும், அவை இரண்டும் ஒரே மாடல்கள் ஆகும். அதாவது, மாருதியின் பலேனோவே கிளான்ஸா எனும் பெயரில் டொயோட்டா நிறுவனம்கீழ் ரீபேட்ஜ் செய்யப்பட்டு விற்கப்படுகின்றது. ஆகையில், பல விஷயங்களில் இரண்டும் கார்களும் ஒரே மாதிரியானவையாக அவை இருக்கின்றன.
மோட்டார்: டாடா அல்ட்ராஸ் ஐசிஎன்ஜி-யில் 1.2 லிட்டர் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் 76 பிஎச்பி பவரையும், 97 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதே மோட்டார் பெட்ரோலில் இயங்கும்போது 84.8 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். பலினோ மற்றும் கிளான்ஸாவில் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த மோட்டார் அதிகபட்சமாக 77 எச்பி பவரையும், 98.5 என்எம் டார்கையும் வெளியேற்றும். இதே மோட்டார் பெட்ரோலில் இயங்கும்போது 90 எச்பி மற்றும் 113 என்எம் டார்க்கை வெளியேற்றும். டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜியைக் காட்டிலும் இது சற்றே அதிகமான பவராக தெரிகின்றது. ஆகையால், அல்ட்ராஸ் சிஎன்ஜி திறன் வெளிப்பாடு குறைப்பாடானதாக தெரியவில்லை.
பூட் ஸ்பேஸ்: இரண்டு சிலிண்டராக டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி தேர்வில் வழங்கப்படுவதற்கு மிக முக்கியமான காரணமே பூட் ஸ்பேஸ் இட வசதிதான். பெரிய அளவு உருளைகள் காரின் பின் பக்கத்தில் நிலை நிறுத்தப்படுவதால் பெரும்பாலான சிஎன்ஜி கார்களில் பின் பக்கத்தில் லக்கேஜ் வைப்பதற்கு இடமே இருக்காது. இதேநிலையே பலேனோ மற்றும் கிளான்ஸாவிலும் தென்படுகின்றது. ஆனால், பெரிய பெரிய லக்கேஜ்களைகூட அல்ட்ராஸில் வைத்துக் கொள்ள முடியும்.
மைலேஜ் திறன்: டாடா அல்ட்ராஸ் ஐசிஎன்ஜியின் போட்டி கார் மாடல்களான கிளான்ஸா சிஎன்ஜி மற்றும் பலேனோ சிஎன்ஜி ஒரு கிலோ சிஎன்ஜி-க்கு 30.61 கிமீ மைலேஜை வழங்கும். ஆனால், அல்ட்ராஸ் சிஎன்ஜி ஒரு கிலோவிற்கு 27 கிமீ வரையில் மட்டுமே மைலேஜை வழங்கும் என கூறப்படுகின்றது.
ஆனால், இதனை நிறுவனம் இன்னும் உறுதி செய்யவில்லை. போட்டி மாடல்களைக் காட்டிலும் சற்று குறைவான மைலேஜை வெளியேற்றக் கூடிய கார் மாடலாக அல்ட்ராஸ் இருக்கின்றது. அதேவேளையில், சிறப்பம்சங்கள் மற்றும் பிரீமியம் அம்சங்களில் இந்த கார் போட்டி கார் மாடல்களுக்கு டஃபான வாகனமாக காட்சியளிக்கின்றது.
இந்த காரின் விலையை இன்னும் டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த விஷயத்திலும் பலேனோ மற்றும் கிளான்ஸாவிற்கு அது போட்டியாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. பலேனோ சிஎன்ஜி ரூ. 8.35 லட்சம் மற்றும் கிளான்ஸா சிஎன்ஜி ரூ. 9.48 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா அல்ட்ராஸ் ஐசிஎன்ஜி மைலேஜில் சற்று குறைவானதாக இருக்கும் என கூறப்பட்டாலும், அது பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் இல்லாத வாகனம் என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இது ஓர் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற வாகனம் ஆகும். இந்த ஒரு விஷயத்திற்காகவே டாடா அல்ட்ராஸ் ஐசிஎன்ஜி-யை வாங்கலாம் என்பது எங்களின் கருத்து.


Click it and Unblock the Notifications








