புதிய அல்ட்ராஸ் ரேசர் காரில் டாடாவின் ஸ்பெஷல் என்னென்ன? ஹூண்டாய் ஐ20 என் லைன் காரை சமாளிக்குமா?
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டெல்லியில் நடைபெற்றுவரும் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் அல்ட்ராஸின் ஸ்போர்டியர் வெர்சனாக அல்ட்ராஸ் ரேசர் காரை வெளியீடு செய்துள்ளது. பெரும்பாலும், ஒரு காரின் ஸ்போர்டியர் வெர்சன் என்றால் காரின் தோற்றத்தில் சில பல மாற்றங்கள் செய்யப்பட்டு, ஸ்பெஷல் எடிசன் போலவே விற்பனைக்கு கொண்டுவரப்படும்.
ஆனால் அல்ட்ராஸ் ரேசர் காரில் நெக்ஸானின் டர்போ பெட்ரோல் என்ஜினை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதியதாக வழங்கியுள்ளது. விற்பனையில் டாடா அல்ட்ராஸ் ரேசர் காருக்கு போட்டியளிக்கும் வகையில் ஹூண்டாய் மோட்டார்ஸின் ஐ20 என் லைன் கார் விற்பனையில் உள்ள நிலையில், இந்த இரு செயல்திறன்மிக்க கார்களுக்கு இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

பரிமாண அளவுகள்
பரிமாண அளவுகளை பொறுத்தவரையில், டாடா அல்ட்ராஸ் ரேசர் காரை காட்டிலும் ஐ20 என் லைன் கார் நீளம் மற்றும் அகலத்தில் பெரியதாக உள்ளது. உயரத்தில் மட்டும் அல்ட்ராஸ் மாடல் பெரியதாக உள்ளது. இதனாலேயே அட்ராஸ் ரேசர் கார் சற்று எஸ்யூவி ரக கார் போன்றதான தோற்றத்தை நமக்கு வழங்குகிறது. நீளம் அதிகமாக இருப்பதால் ஐ20 என் லைன் காரிலேயே முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் அதிகமாக உள்ளது.
அல்ட்ராஸ் ரேசர் காரின் நீளம் 3,990மிமீ, அகலம் 1,755மிமீ, உயரம் 1,523மிமீ, வீல்பேஸ் 2,501மிமீ ஆகும். அதுவே ஹூண்டாயின் ஐ20 என் லைன் காரின் நீளம் 3,995மிமீ, அகலம் 1,775மிமீ, உயரம் 1,505மிமீ மற்றும் வீல்பேஸ் 2,580மிமீ ஆகும். இதில் நீங்கள் ஒன்றை கவனித்தீர்களேயானால், நீளத்தில் அல்ட்ராஸ் ரேசரை காட்டிலும் ஐ20 என் லைன் கார் வெறும் 5 மிமீ மட்டுமே அதிகமாக உள்ளது. ஆனால் வீல்பேஸ் எனப்படும் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரத்தை ஐ20 என் லைன் மாடல் கிட்டத்தட்ட 79 மிமீ அதிகமாக கொண்டுள்ளது.
என்ஜின்
ஏற்கனவே கூறியதுபோல், அல்ட்ராஸ் ரேசர் காரில் நெக்ஸானின் 1.2 லிட்டர், 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் தேர்வை டாடா நிறுவனம் வழங்கியுள்ளது. அதிகப்பட்சமாக 120 பிஎஸ் மற்றும் 170 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
மறுப்பக்கம், ஹூண்டாய் ஐ20 என் லைன் காரில் 1 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் கொடுக்கப்படுகிறது. இந்த ஹூண்டாய் டர்போ என்ஜின் மூலமாக 120 பிஎஸ் மற்றும் 172 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெற முடியும். இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு இண்டெலிஜண்ட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. அதாவது, டர்போ பெட்ரோல் என்ஜினை ஆட்டோமேட்டிக் தேர்வில் ஐ20 என் லைன் காரில் தான் வாங்க முடியும்.
தொழிற்நுட்ப அம்சங்கள்
வழக்கமாக அல்ட்ராஸ் காரில் வழங்கும் அம்சங்களில் இருந்து கூடுதலாக ரேசர் வெர்சனில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வயர்லெஸ் போன் சார்ஜர், 6 காற்றுப்பைகள், பெரிய டச் ஸ்க்ரீன் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளது. அதுவே ஐ20 என் லைன் காருடன் ஒப்பிட்டோமேயானால், வெண்டிலேட்டட் முன் இருக்கைகளை அல்ட்ராஸ் ரேசர் பெறுகிறது. அதேநேரம், தன்னிச்சையாக இயங்கும் எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் ரியர் டிஸ்க் பிரேக்குகள் போன்ற தனித்துவமான அம்சங்களை ஐ20 என் லைன் கார் பெறுகிறது.
விலை
2023 ஆட்டோ எக்ஸ்போவில் தற்போதைக்கு வெளியீடு மட்டுமே செய்யப்பட்டுள்ள அல்ட்ராஸ் ரேசர் காரின் விலைகள் எதுவும் தற்போதைக்கு அறிவிக்கப்படவில்லை. அந்த அறிவிப்பினை காரின் அதிகாரப்பூர்வ அறிமுகத்தின்போதும், அல்ட்ராஸ் ரேசரின் விலைகளை ரூ.10 லட்சம் என்ற அளவிலும் எதிர்பார்க்கிறோம். ஏனெனில் 2021 செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் ஐ20 என் லைன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகளும் தற்சமயம் ரூ.10 லட்சம் - ரூ.12.11 லட்சம் வரையில் உள்ளன.


Click it and Unblock the Notifications








