டாடாவில் ஒரு எலக்ட்ரிக் காரை வாங்கி போடுங்க!! ரூ.1.10 இலட்சம் வரையில் சலுகைகள்.. இதைவிட்டால் சான்ஸ் கிடைக்காது
டாடா டியாகோ இவி மற்றும் டிகோர் இவி (Tata Tiago EV, Tigor EV) எலக்ட்ரிக் கார்களுக்கு வருட-இறுதி மாதத்தை முன்னிட்டு ரூ.1.10 லட்சம் வரையில் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் எவ்வளவு குறைவான விலையில் டியாகோ இவி மற்றும் டிகோர் இவி கார்களை வாங்கலாம் என்பதை பற்றியும், இந்த டாடா எலக்ட்ரிக் கார்களை பற்றியும் இனி பார்க்கலாம்.
இந்தியாவில் கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த டிசம்பர் மாதத்திற்காக கிட்டத்தட்ட அதன் அனைத்து கார்களுக்கும் வருட-இறுதி சலுகைகளை அறிவித்துள்ளது. நெக்ஸான் இவி காருக்கு சுமார் ரூ.2.60 இலட்சம் வரையிலான தள்ளுபடிகள் வழங்கப்பட்டு உள்ளதாக சமீபத்தில்தான் நமது செய்தித்தளத்தில் தெரிவித்து இருந்தோம்.

இந்த வரிசையில், டியாகோ இவி மற்றும் டிகோர் இவி எலக்ட்ரிக் கார்களுக்கு ரூ.1.10 லட்சம் வரையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. நெக்ஸான் இவி-க்கான சலுகைகளை போன்று, இந்த எலக்ட்ரிக் கார்களுக்கான சலுகைகளும் வருகிற டிசம்பர் 31ஆம் தேதி வரையில் மட்டுமே அமலில் இருக்கும். நிர்ணயிக்கப்பட்ட ஸ்டாக் அனைத்தும் தீர்ந்து போனால், டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்னதாக கூட இந்த சலுகைகள் ரத்து செய்யப்படலாம்.
இந்த டிசம்பர் மாதத்தில் டிகோர் இவி எலக்ட்ரிக் செடான் காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.50,000 மதிப்பிலான பணம் தள்ளுபடியை பெறலாம். அத்துடன், ரூ.50,000 எக்ஸ்சேஞ்ச் போனஸையும் டிகோர் இவி-இன் அனைத்து வேரியண்ட்களிலும் பெறலாம். இவற்றுடன் ரூ.10,000 வரையிலான கார்ப்பிரேட் தள்ளுபடியும் இந்த டாடா எலக்ட்ரிக் காருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.1.10 இலட்சம்.

டிகோர் இவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.12.49 இலட்சத்தில் இருந்து ரூ.13.75 இலட்சம் வரையில் உள்ளன. டிகோர் இவி-இல் 26kWh லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்படுகிறது. இந்த பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 315கிமீ தொலைவிற்கு பயணிக்க முடியும். இந்த எலக்ட்ரிக் செடான் காரில் அதிகப்பட்சமாக 75 எச்பி மற்றும் 170 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம்.
டியாகோ இவி எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரை பொறுத்தவரையில், இந்த காரின் குறிப்பிட்ட சில வேரியண்ட்களுக்கு ரூ.15,000 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பணம் தள்ளுபடி எதுவும் இந்த எலக்ட்ரிக் காருக்கு வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக ரூ.55,000 வரையிலான க்ரீன் போனஸை டியாகோ இவி-இல் பெறலாம்.

எலக்ட்ரிக் காரை வாங்குவதற்காக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதே க்ரீன் போனஸ் ஆகும். டியாகோ இவி-ஐ வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.7,000 வரையிலான கார்பிரேட் போனஸையும் பெறலாம். டியாகோ இவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.8.69 இலட்சத்தில் இருந்து ரூ.12.04 இலட்சம் வரையில் உள்ளன.
மீடியம் ரேஞ்ச் மற்றும் லாங் ரேஞ்ச் என இரு விதமான வேரியண்ட்களில் டியாகோ இவி விற்பனை செய்யப்படுகிறது. இதில் மீடியம் ரேஞ்ச் வேரியண்ட்டில் 19.2 kWh பேட்டரியும், லாங் ரேஞ்ச் வேரியண்ட்டில் 24kWh பேட்டரியும் பொருத்தப்படுகிறது. மீடியம் ரேஞ்ச் வேரியண்ட்டில் 250கிமீ வரையிலான ரேஞ்சையும், லாங் ரேஞ்ச் வேரியண்ட்டில் 315கிமீ வரையிலான ரேஞ்சையும் பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெட்ரோல்/ டீசல் காருக்கு பதிலாக ஓர் எலக்ட்ரிக் காரை வாங்க வேண்டும் என்கிற ஆசை நம் அனைவரிடத்திலும் இருக்கும். ஆனால், எலக்ட்ரிக் கார்களின் விலைகள் கொஞ்சம் அதிகமாக இருப்பதே நம்மில் பெரும்பாலானோர் எலக்ட்ரிக் கார் பக்கம் செல்லாததற்கு ஒரு காரணம் ஆகும். ஆனால், இவ்வாறான சலுகைகளை, தள்ளுபடிகளை உபயோகித்து குறைந்த விலையில் ஒரு எலக்ட்ரிக் காரை சொந்தமாக்கலாம்.


Click it and Unblock the Notifications









