20 வருஷம் பழைய கார் என்றால் நம்பவே முடியல!! இப்படியொரு டாடா காரை பார்த்திருக்கீங்களா!
20 வருடங்கள் பழமையான டாடா எஸ்டேட் (Tata Estate) கார் ஒன்று புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் விளைவாக, கார் ஷோரூமில் இருந்து இப்போதுதான் வாங்கியது போன்று உள்ளது. இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவையும், டாடா எஸ்டேட் காரை பற்றியும் முழுமையாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
டாடா நிறுவனத்தில் இருந்து கடந்த காலங்களில் பல்வேறு தரமான தயாரிப்புகள் வெளிவந்துள்ளன. அவற்றுள் ஒன்று எஸ்டேட் ஆகும். இது ஓர் ஸ்டேஷன் வேகன் ரக கார் ஆகும். அதாவது, செடான் ரக கார்கள் போன்ற உடலமைப்பில் நன்கு நீளமானதாக இருப்பவை ஸ்டேஷன் வேகன் கார்களாகும். இத்தகைய கார்கள் ஐரோப்பாவில் பிரபலமானவை.

ஆனால் இந்தியாவில் இத்தகைய ஸ்டேஷன் வேகன் கார்கள் கடைசி வரையில் கவனிக்கவே படவில்லை. தற்சமயம் இத்தகைய உடலமைப்பை கொண்ட கார்கள் எதுவும் விற்பனையில் இல்லை. டாடா எஸ்டேட் கார்கள் 1992இல் இருந்து 2000ஆம் ஆண்டு வரையில் விற்பனையில் இருந்தன. இந்த 8 ஆண்டு காலக்கட்டத்தில் இந்திய பிரதமரின் பாதுகாப்பு வாகனமாக கூட இது பயன்படுத்தப்பட்டது.
சுமார் 23 வருடங்களுக்கு முன்பு வரையில் விற்பனையில் இருந்ததால், இந்த காரை சாலையில் காண்பது இன்று மிகவும் அரிதாகி விட்டது. டாடா எஸ்டேட் காரை வைத்திருக்கும் மிகவும் சில ஓனர்களுள் ஒருவர் தனது காரை புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு ரீ-ஸ்டோர் செய்துக் கொண்டுள்ளார். இதற்கு அவருக்கு மாதக் கணக்கில் நேரம் தேவைப்பட்டு உள்ளது.

ஏனெனில், டாடா எஸ்டேட் காரை இன்றைய காலத்தில் சாலையில் காண்பதே அரிதாகிவிட்டது எனும்போது, காருக்கான பாகங்களை பெறுவது அதை விட சிரமமானது. இருப்பினும், கஷ்டப்பட்டு தேடி அலைந்து பாகங்களை பெற்று, காரை முழுவதுமாக அதன் உரிமையாளர் ரீ-ஸ்டோர் செய்துள்ளார். காரின் வெளிப்பக்கத்தில், டாடாவின் லோகோ உடன் காரின் பொனெட் மாற்றப்பட்டு உள்ளது.
அத்துடன், காரின் முன்பக்க கிரில், பம்பர் உள்ளிட்டவையும் மாற்றப்பட்டு உள்ளதாக வீடியோவில் காரின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். டாடா எஸ்டேட் காரில் ஃபாக் விளக்குகள் எதுவும் பொருத்தப்பட்டது கிடையாது. ஆனால் இந்த குறிப்பிட்ட எஸ்டேட் காரில் புதியதாக பொருத்தி உள்ளனர். காரின் ஒரிஜினல் ஹெட்லேம்ப்கள் மற்றும் டர்ன் இண்டிகேட்டர்கள் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக புதியவையாக பொருத்தப்பட்டு உள்ளன.
கார் மொத்தமாக சில்வர் கிரே நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டு உள்ளது. காரில் ஒரிஜினல் இரும்பு சக்கரங்கள் தான் வீல் கேப்கள் உடன் உள்ளன. ஆரம்பத்தில் இந்த வீல் கேப்கள் க்ரோம் ஆல் ஃபினிஷ் செய்யப்பட்டவைகளாக இருந்தன. ஆனால், கால போக்கில் அவை துருப்பிடித்த காரணத்தினால், கன் மெட்டல் கிரே நிறத்தில் ரீ-பெயிண்ட் செய்யப்பட்டு உள்ளன.

காரின் உள்ளே 95% பணிகள் நிறைவடைந்து விட்டன. அதாவது இன்னும் சில பணிகள் செய்ய வேண்டி உள்ளன. காருக்கு உள்ளே ஏசி, பவர் விண்டோக்கள் மற்றும் பவர் ஸ்டேரிங் என சில மாடர்ன் தொழிற்நுட்ப வசதிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. டாடா எஸ்டேட் காரில் அந்த காலத்திலேயே ஏசி வசதி வழங்கப்பட்டது. ஆனால், காரின் முன்பக்கத்தில் மட்டுமே ஏசி வழங்கப்பட்டது. தற்போது, பின் இருக்கை வரிசைகளுக்கும் ஏசி கொடுக்கப்பட்டு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா எஸ்டேட், இந்தியாவின் ஐகானிக் கார். இந்த காரை இன்றைய கால தலைமுறையினர் பார்ப்பதற்கு இந்த ரீ-ஸ்டோர் மாதிரி சிறந்த வாய்ப்பாகும். மேலும், கிளாசிக் கார் பிரியர்கள் நம் நாட்டில் அதிக பேர் இருக்கின்றனர் என்பதற்கும் இந்த எஸ்டேட் கார் சிறந்த சாட்சியாகும்.


Click it and Unblock the Notifications









