டாடா கார்களுக்கு மதிப்பெண்கள் ஒன்னும் கேட்டவுடனே தூக்கி கொடுக்கல!! இத்தனை செக்கிங் நடந்துச்சு!
பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் (Bharat NCAP Crash Test) டாடா மோட்டார்ஸின் ஹெரியர் மற்றும் சஃபாரி கார்கள் முழு 5 நட்சத்திரங்களை பெற்றிருப்பதுதான் இந்திய ஆட்டோமொபைல் துறை முழுவதும் பேச்சாக உள்ளது. சமீபத்தில் வெளியீடு செய்யப்பட்ட கியா சொனெட் அல்லது டாடா பஞ்ச் கார் பாரத் என்சிஏபி-இல் முதலாவதாக சோதனை செய்யப்படலாம் என பேச்சுக்கள் எழுந்துவந்த நிலையில், முதலாவதாக டாடா ஹெரியர் & சஃபாரி கார்களின் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் முடிவுகள் வெளிவந்துள்ளன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரீமியம் தரத்திலான எஸ்யூவி காராக ஹெரியர் விளங்குகிறது. இதன் லாங்-வீல்பேஸ் வெர்சனாக சஃபாரி விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, 5 பேர் மட்டுமே சவுகரியமாக அமரக்கூடிய கார் ஹெரியர் ஆகும். ஆனால், சஃபாரி 6 மற்றும் 7 இருக்கை ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த இரு கார்களும் பாரத் என்சிஏபி-இல் எவ்வாறெல்லாம் மோதி சோதனை செய்யப்பட்டன என்பதை கீழுள்ள வீடியோவில் விளக்கமாக காணலாம்.
கார்களின் தரத்தை கண்டறியவும், அதனை விளக்கமாக பொதுமக்களுக்கு எடுத்துக் கூறவும் என்சிஏபி (New Car Assessment Program) பெரும் உதவியாக இருக்கிறது. உலகளவில் க்ளோபல் என்சிஏபி-யும், ஆசிய அளவில் ஆசியன் என்சிஏபி-யும் உள்ளன. இருப்பினும், இந்தியாவிற்கென தனி என்சிஏபி அமைப்பு இருக்க வேண்டும் என்பதற்காக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அரசு பாரத் என்சிஏபி-ஐ அறிமுகப்படுத்தியது.

ஆனால், பாரத் என்சிஏபி-இல் கார்களை மோதி சோதனை செய்வது டிசம்பர் 15ஆம் தேதியில் இருந்தே துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, டாடா ஹெரியர் மற்றும் சஃபாரி எஸ்யூவி கார்கள் சோதனை செய்யப்பட்டு பாரத் என்சிஏபி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. டாடா ஹெரியர் & சஃபாரி கார்கள் பெரியவர்கள் பாதுகாப்பில் 34 மதிப்பெண்களுக்கு 33.05 மதிப்பெண்களையும், குழந்தைகள் பாதுகாப்பில் 49 மதிப்பெண்களுக்கு 45 மதிப்பெண்களையும் பெற்று ஆச்சிரியப்படுத்தி உள்ளன.


Click it and Unblock the Notifications








