ரொம்ப பாதுகாப்பானது! எல்லாரும் எதிர்பார்த்த டாடா கார்கள் டீலர்ஷிப்களுக்கு வருகை!
இந்தியாவில் டாடா ஹாரியர் (Tata Harrier) மற்றும் டாடா சஃபாரி (Tata Safari) ஆகிய 2 கார்களும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. இவை இரண்டுமே எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்தவைதான்.
இந்த சூழலில் இந்த 2 கார்களின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) வெர்ஷன்களை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இன்று (அக்டோபர் 17) விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதில் டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை 15.49 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது.

மறுபக்கம் டாடா சஃபாரி காரின் விலை 16.19 லட்ச ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஆகிய 2 கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களிலும் பல்வேறு அதிநவீன வசதிகள் (Features) வாரி வழங்கப்பட்டுள்ளன.
இதில், அடாஸ் (ADAS), 7 ஏர்பேக்குகள், பேடில் ஷிஃப்டர்கள், ட்யூயல்-ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இதுதவிர இலுமினினேட்டட் லோகோ உடன் கூடிய புதிய ஸ்டியரிங் வீல், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகிய வசதிகளையும் இந்த எஸ்யூவி கார்கள் பெற்றுள்ளன.

அத்துடன் 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 10 ஸ்பீக்கர் ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம் போன்றவையும் டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஆகிய கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களில் வழங்கப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க வசதிகள் ஆகும். ஆனால் பழைய மாடல்களில் இருந்த அதே இன்ஜின்தான் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஆகிய கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களில் அதே 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் (Diesel Engine) வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 168 பிஹெச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த 2 கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களும் தற்போது டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியுள்ளன. டெலிவரி பணிகள் (Deliveries) விரைவில் தொடங்கப்படலாம் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஆகிய 2 கார்களும் குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (5-star Safety Rating) பெற்றுள்ளன. இந்த தகவலும் இன்றுதான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஆகிய கார்களின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் வருகை மற்றும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனை முடிவுகள் ஆகிய இரண்டு முக்கியமான விஷயங்களும் ஒரே நேரத்தில் நடைபெற்றுள்ளன. இவை இந்த கார்களின் விற்பனை எண்ணிக்கையை உயர்த்த உதவி செய்யும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








