நேபாளத்தில் நம்ம ஊரின் சிறந்த டாடா தயாரிப்பு அறிமுகம்... இதுக்கு நேபாள மக்கள் குடுத்து வெச்சிருக்கனும்!!
இந்தியாவில் விற்பனையில் உள்ள டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் (Tata Nexon EV Max) கார் நேபாளத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவுடன் ஒப்பிடுகையில் நேபாள நெக்ஸான் இவி மேக்ஸ் காரில் வேறு ஏதேனும் மாற்றங்கள் உள்ளனவா என்பதை பற்றி இனி பார்க்கலாம்.
எலக்ட்ரிக் கார்களுக்கு சமீப காலமாகவே வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதனை நன்கு பயன்படுத்தி கொண்ட நிறுவனங்களுள் ஒன்று டாடா மோட்டார்ஸ் ஆகும். டாடா மோட்டார்ஸ் அதன் நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி காரில் முதல்முறையாக எலக்ட்ரிக் வெர்சனை கொண்டு வந்தது. அதன்பின் டிகோர் செடான் மற்றும் டியாகோ ஹேட்ச்பேக் கார்களிலும் எலக்ட்ரிக் மாடல்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.

அத்துடன் நெக்ஸான் இவி காரிலும் நெக்ஸான் இவி மேக்ஸ் என்ற நீண்ட-ரேஞ்ச் வெர்சன் கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த எலக்ட்ரிக் கார் தான் தற்போது நேபாளம் நாட்டு சந்தையில் விற்பனையை துவங்கியுள்ளது. நேபாள சந்தையில் நெக்ஸான் இவி மேக்ஸ் காரின் விலை 46.49 லட்ச நேபாள ரூபாயில் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.29.01 லட்சம் ஆகும். இந்த விலையில் 7.2kWh ஃபாஸ்ட் சார்ஜர் உடன் மட்டுமே இந்த கார் அங்கு கிடைக்கும்.
எக்ஸ்.இசட் மற்றும் எக்ஸ்.இசட்+ என 2 விதமான வேரியண்ட்களில் நேபாளத்தில் நெக்ஸான் இவி மேக்ஸ் காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த நாட்டில் இந்த எலக்ட்ரிக் காரை 3 விதமான பெயிண்ட் தேர்வுகளில் பெற முடியும். வீடு மற்றும் அலுவலகங்களில் பொருத்தக்கூடிய 7.2kWh ஃபாஸ்ட் சார்ஜரில் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்ப குறைந்தது 6.5 மணிநேரங்கள் தேவைப்படும்.

அதுவே 50 கிலோவாட்ஸ் நேர்திசை மின்னோட்ட ஃபாஸ்ட் சார்ஜரில் 0-வில் இருந்து 80% சார்ஜை வெறும் 56 வினாடிகளில் நிரப்பிவிட முடியும். ஆனால் இந்த சார்ஜர் தேர்வை பெறுவதற்கு சற்று கூடுதல் தொகையை செலவிட வேண்டி இருக்கும். நேபாள நாட்டிற்கு இந்தியாவில் உருவாக்கப்படும் நெக்ஸான் இவி மேக்ஸ் கார்கள் தான் அனுப்பி வைக்கப்படவுள்ளன. இந்தியாவில் நெக்ஸான் இவி மேக்ஸ் காரில் 40.5kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்படுகிறது.
இது வழக்கமான நெக்ஸான் இவி காரின் பேட்டரியை காட்டிலும் 33% அதிக திறன் மிக்கது. இந்த பேட்டரியின் மூலமாக 100kWh மற்றும் 250 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். இந்த எலக்ட்ரிக் காரில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 9 வினாடிகளில் எட்டிவிட முடியும். நெக்ஸான் இவி மேக்ஸ் காரில் பேட்டரியை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 453கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என்கிறது டாடா நிறுவனம்.

நெக்ஸான் இவி மேக்ஸ் காரின் 2 வேரியண்ட்களிலும் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், க்ளைமேட் கண்ட்ரோல், வெண்டிலேட்டட் இருக்கைகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், டயரில் காற்றழுத்தத்தை கண்காணிக்கும் கருவி, கனெக்டட் கார் தொழிற்நுட்பம், முன்பக்கத்தில் 2 ஏர்பேக்குகள் மற்றும் பிளவுப்பட்ட பின் இருக்கைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இவை தான் நேபாளத்திலும் இந்த எலக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: நேபாள நாட்டு சந்தையில் பல்வேறு இந்திய தயாரிப்பு வாகனங்கள் கடந்த காலங்களில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வரிசையில் தற்போது டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் இணைந்துள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு செல்வது நமக்கு நல்லதுதான். ஏனெனில் அப்போதுதான் இந்திய தயாரிப்புகளின் தரம் உலகம் முழுவதும் பரவும்.


Click it and Unblock the Notifications









