போட்டி நிறுவனங்களை எல்லாம் கண்ணை கசக்க வைத்த டாடா! ஒரே மாசத்துல இவ்ளோ கார்களை வித்து தள்ளீட்டாங்களா!
நடப்பு 2023ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட்டை (Sales Report) டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் நடப்பு 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 48,337 கார்களை விற்பனை செய்து அசத்தி இருக்கிறது.
ஆனால் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 45,217 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கார் விற்பனையில் 7 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இது போட்டி நிறுவனங்கள் கவனிக்க வேண்டிய வளர்ச்சி என்பதில் நமக்கு துளியும் சந்தேகம் இல்லை.

மறுபக்கம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் (Electric Car) விற்பனை இந்திய சந்தையில் கிடுகிடுவென வளர்ச்சியடைய தொடங்கியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5,465 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து போட்டி நிறுவனங்களை எல்லாம் பிரம்மிக்க வைத்துள்ளது.
ஆனால் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 4,277 ஆக மட்டுமே இருந்தது. இது 28 சதவீத வளர்ச்சி ஆகும். இந்த வரிசையில் இந்தியாவில் இருந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்றுமதி (Export) செய்யும் கார்களின் எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் இருந்து சர்வதேச சந்தைகளுக்கு 300 கார்களை ஏற்றுமதி செய்து அசத்தி இருக்கிறது. ஆனால் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 206 ஆக மட்டுமே இருந்தது. இது 46 சதவீத வளர்ச்சி ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வரும் மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன. ஏனெனில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2 புதிய கார்களை இந்திய சந்தையில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
அவை டாடா பன்ச் இவி (Tata Punch EV) மற்றும் டாடா கர்வ் எஸ்யூவி (Tata Curvv SUV) ஆகும். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த 2 கார்களும் வரும் மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. அனேகமாக நடப்பு 2023ம் ஆண்டின் இறுதிக்குள் இவை களமிறக்கப்படலாம்.
அல்லது வரும் 2024ம் ஆண்டின் தொடக்கத்தில் அவை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த 2 கார்களும் இந்திய சாலைகளில் தற்போது தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகின்றன. எனவே கூடிய விரைவில் இந்த 2 கார்களையும் நாம் உறுதியாக விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








