டாடா எலெக்ட்ரிக் காரில் ஏன் தீப்பற்றியது தெரியுமா? இதுக்குதான் வண்டியை அவங்க கிட்ட குடுக்க கூடாதுனு சொல்றது!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள எலெக்ட்ரிக் கார்களில் (Electric Car) ஒன்று டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV). தற்போதைய நிலையில் இதுதான் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் கொண்டுள்ள எலெக்ட்ரிக் கார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றிருந்தாலும், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அவ்வப்போது தீப்பற்றி எரிந்து வருவது, அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் தீப்பற்றி எரிந்திருந்தது. இந்த சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அரங்கேறியது.

இந்த சூழலில் அதே மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரில், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு, மீண்டும் ஒரு டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் தீப்பற்றியது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் தீயில் எரியும் வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி, வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
ஆனால் இந்த தீ விபத்திற்கான காரணம் என்ன? என்பது தெரியாமல் இருந்தது. எனினும் இந்த கேள்விக்கு தற்போது நமக்கு அதிகாரப்பூர்வமான பதில் கிடைத்து விட்டது. அங்கீகாரம் இல்லாத ஒர்க் ஷாப் ஒன்றில், காரை பழுது பார்த்ததுதான் இந்த தீ விபத்திற்கான காரணம் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அங்கீகாரம் இல்லாத ஒர்க் ஷாப்பில், டாடா நெக்ஸான் காரின் இடது பக்க ஹெட்லேம்ப் மாற்றப்பட்டதுதான் இந்த திடீர் தீ விபத்திற்கான முக்கிய காரணம் என இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஹெட்லேம்ப் மாற்றும் பணிகளில் இருந்த குறைபாடுகள் காரணமாகவே நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் தீப்பற்றியுள்ளது என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அங்கீகாரம் இல்லாத ஒர்க் ஷாப்களில் கார்களை பழுது பார்த்தால், இது போன்ற பிரச்னைகளை உரிமையாளர்கள் எதிர்கொள்ள நேரிடும்.
எனவே சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் சென்டர்களில் கார்களை பழுது பார்ப்பதுதான் நல்லது. கார்கள் மட்டுமல்லாது, டூவீலர்கள் போன்ற மற்ற வாகனங்களுக்கும் இது பொருந்தும். அதிர்ஷ்டவசமாக புனே நகரில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் தீப்பற்றிய சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு சமீப காலம் வரை சந்தையில் போட்டியே இல்லை. ஆனால் தற்போது மஹிந்திரா எக்ஸ்யூவி400 இவி (Mahindra XUV400 EV) எலெக்ட்ரிக் கார் தற்போது அதற்கு போட்டியாக வந்துள்ளது. வரும் காலங்களில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக, இன்னும் நிறைய மாடல்கள் களமிறங்கவுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பற்றும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டேதான் இருக்கின்றன. இதற்கு உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமல்லாது, வாடிக்கையாளர்கள் செய்யும் ஒரு சில தவறுகளும் கூட காரணமாக அமைந்து விடுகின்றன. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை கவனமாக கையாள்வது நல்லது.


Click it and Unblock the Notifications








