Tata Nexon EV Max Dark Edition கார் விற்பனைக்கு அறிமுகம் - இதுதான் விலை... இவ்வளவு புதிய அம்சங்கள் இருக்கா!!
டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் டார்க் (Tata Nexon EV Max Dark) எடிசன் கார் சந்தையில் விற்பனைக்கு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய நெக்ஸான் இவி மேக்ஸ் ஸ்பெஷல் எடிசன் காரை பற்றிய முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்திய சந்தையில் தற்போதைக்கு அதிக எண்ணிக்கையில் விற்பனையாகக்கூடிய எலக்ட்ரிக் கார்களுள் ஒன்று, டாடா நெக்ஸான் இவி ஆகும். இதன் நீண்ட ரேஞ்ச் வெர்சன், அதாவது பெரிய அளவில் பேட்டரியை கொண்ட வெர்சனாக நெக்ஸான் இவி மேக்ஸ் கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வகையில் பார்த்தோமேயானால், நெக்ஸான் இவி மேக்ஸ் எலக்ட்ரிக் கார் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு 1 வருடம் நிறைவடைய உள்ள நிலையில் இந்த காரின் புதிய ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்களில் அவ்வப்போது டார்க் எடிசன்களை அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில்தான் தற்போது, நெக்ஸான் இவி மேக்ஸ் காரிலும் டார்க் எடிசனை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய நெக்ஸான் இவி மேக்ஸ் டார்க் எடிசன் காரை 2 விதமான வேரியண்ட்களில் வாங்கலாம். இதில் ஒரு வேரியண்ட்டில் 7.2 கிலோவாட்ஸ் AC ஃபாஸ்ட் சார்ஜிங் தேர்வு வழங்கப்படும், மற்றொன்றில் வழங்கப்படாது.
ஃபாஸ்ட் சார்ஜிங் தேர்வை பெறாத வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.19.04 லட்சமாகவும், 7.2 கிலோவாட்ஸ் AC ஃபாஸ்ட் சார்ஜிங் தேர்வை பெறும் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை சற்று அதிகமாக ரூ.19.54 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மட்டுமே இரண்டிலும் வித்தியாசப்படும், மற்றப்படி மற்ற அம்சங்களில் இரண்டும் ஒரே மாதிரியானவைகளாக உள்ளன. முக்கியமாக, பெரிய 10.25-இன்ச் எச்டி டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் புதிய நெக்ஸான் இவி மேக்ஸ் டார்க் எடிசனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அளவிற்கு பெரிய இன்ஃபோடெயின்மெண்ட் திரையை பெற்றுள்ள முதல் எஸ்யூவி கார் டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் டார்க் எடிசன் என கூறப்படுகிறது. ஹர்மன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே இணைப்பை ஏற்கக்கூடியது. அத்துடன் அப்டேட் செய்யப்பட்ட ஆடியோ செட்அப் உடன் இந்த சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது.

மற்ற சிறப்பம்சங்கள் என்று பார்த்தால், 180 வாய்ஸ் கமெண்ட்களை இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் நெக்ஸான் இவி மேக்ஸ் கார் ஏற்கும். இந்த வாய்ஸ் கமெண்ட்களை ஆங்கிலம் மட்டுமின்றி, தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி மொழிகளிலும் வழங்கலாம். அப்படியே காரின் வெளிப்பக்கத்திற்கு வந்தால், புதிய நெக்ஸான் இவி மேக்ஸ் டார்க் எடிசன் காருக்கு மிட்நைட் கருப்பு நிற பெயிண்ட் வழங்கப்பட்டுள்ளது. காரின் அலாய் சக்கரங்கள் சார்கோல் கிரே நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இதற்கேற்ப காரின் உட்பக்க கேபினும் முற்றிலும் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டேஸ்போர்டு பளபளப்பான பியானோ கருப்பு நிறத்தில் காட்சி தருகிறது. மற்றப்படி, மற்ற இயந்திர பாகங்கள், எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் இல்லை. நெக்ஸான் இவி மேக்ஸ் காரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 453 கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என டாடா நிறுவனம் கூறுகிறது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: எப்போதும் நாங்கள் கூறுவதுதான். எந்தவொரு வாகனத்தின் விற்பனையையும் தொடர்ந்து அதிகமாக வைத்திருக்க, இவ்வாறான ஸ்பெஷல் எடிசன்கள் & வேரியண்ட்களின் அறிமுகங்கள் அவசியமாகும். ஏனெனில் மற்றவர்களிடம் வித்தியாசப்பட விரும்புபவர்கள் இவ்வாறான ஸ்பெஷல் எடிசன் கார்களை தேர்வு செய்வதற்கு வாய்ப்புள்ளது. இதனை நன்கு புரிந்து வைத்துள்ள டாடா மோட்டார்ஸ் இவ்வாறான டார்க் எடிசன் கார்களை தொடர்ச்சியாக களமிறக்கிய வண்ணம் உள்ளது.


Click it and Unblock the Notifications








