எலெக்ட்ரிக் கார் விலையை தரை மட்டத்திற்கு குறைத்த டாடா! மஹிந்திரா தயாரிப்பு களமிறங்கியதால் பயந்து போய்ட்டாங்க!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV). ப்ரைம் (Prime) மற்றும் மேக்ஸ் (Max) என 2 மாடல்களில், டாடா நெக்ஸான் இவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரின் விலை (Price), தற்போது அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. 85 ஆயிரம் ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதுதவிர டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் (Range) உயர்த்தப்பட்டுள்ளது என்பதும் கூடுதல் சிறப்பம்சம் ஆகும். இதற்கு முன்பு டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் வெறும் 437 கிலோ மீட்டர்களாக மட்டுமே இருந்தது. அது தற்போது 453 கிலோ மீட்டர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அட்றா சக்க!
டாடா நெக்ஸான் இவி ப்ரைம் எலெக்ட்ரிக் காரின் பேஸ் வேரியண்ட்டான XM வேரியண்ட்டின் விலை 50 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் XZ+ வேரியண்ட்டின் விலை 31 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் காரின் அனைத்து வேரியண்ட்களின் விலையும் 85 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. எனவே டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுதான் இப்போதைய விலை!
விலை குறைப்பிற்கு பின்னர், டாடா நெக்ஸான் இவி ப்ரைம் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 14.49 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 16.99 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. அதே நேரத்தில் டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் காரின் 3.3 kW சார்ஜர் மாடல் 16.49 லட்ச ரூபாயில் இருந்து, 18.49 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படும். மறுபக்கம் டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் காரின் 7.2 kW சார்ஜர் மாடல், 16.99 லட்ச ரூபாயில் இருந்து, 18.99 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படும். இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

பேட்டரி மற்றும் வேரியண்ட்கள்!
டாடா நெக்ஸான் இவி ப்ரைம் எலெக்ட்ரிக் காரில், 30.2 kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் 3.3 kW சார்ஜர் வழங்கப்படுகிறது. XM, XZ+ மற்றும் XZ+ Lux என மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants), டாடா நெக்ஸான் இவி ப்ரைம் எலெக்ட்ரிக் கார் கிடைக்கும். மறுபக்கம் டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் காரில், 40.5 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலில், 3.3 kW மற்றும் 7.2 kW ஆகிய சார்ஜர் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன.
டாடா நெக்ஸான் இவி ப்ரைம் எலெக்ட்ரிக் காரை போலவே, டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் காரும், XM, XZ+ மற்றும் XZ+ Lux என மொத்தம் 3 வேரியண்ட்களில்தான் விற்பனை செய்யப்படுகிறது. எனவே வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ற மற்றும் பட்ஜெட்டிற்கு ஏற்ற வேரியண்ட்டை தேர்வு செய்து கொள்ளலாம். நிறைய வேரியண்ட்களில் கிடைப்பதும், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
எப்போதில் இருந்து?
இதற்கிடையே அப்டேட் செய்யப்பட்ட டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் கார், வரும் ஜனவரி 25ம் தேதியில் இருந்து கிடைக்கும். இந்த ரேஞ்ச் மேம்பாட்டை, தற்போது டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் காரை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களும் பெற முடியும். அதாவது வரும் பிப்ரவரி 15ம் தேதியில் இருந்து, சாஃப்ட்வேர் அப்டேட் மூலமாக, தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு ரேஞ்ச் மேம்பாடு கிடைக்கும்.
ஏன் திடீர்னு இதெல்லாம்?
டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக, வெகு சமீபத்தில், மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் (Mahindra XUV400 EV) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை 15.99 லட்ச ரூபாய் ஆகும். அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 18.99 லட்ச ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த போட்டியை சமாளிப்பதற்காகவே விலை குறைப்பு, ரேஞ்ச் அதிகரிப்பு என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிரடியான காரியங்களை செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








