பிரியாவிடை பெற்றது! டாடாவின் இந்த கார் இனி கிடைக்காது! வாடிக்கையாளர்களை கண்ணீர் சிந்த வெச்சுட்டாங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று டாடா நெக்ஸான் (Tata Nexon). இந்த காரின் ஜெட் எடிசன் (Jet Edition) மாடலை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சத்தமே இல்லாமல் தற்போது தனது அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் இருந்து திடீரென நீக்கியுள்ளது.
டாடா நெக்ஸான் காரின் ஜெட் எடிசன் மாடல் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. டார்க் எடிசன் மற்றும் காஸிரங்கா எடிசன் ஆகிய மாடல்களுடன் இணைந்து ஜெட் எடிசன் மாடலும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடனும் டாடா நெக்ஸான் காரின் ஜெட் எடிசன் விற்பனை செய்யப்பட்டது. அதே நேரத்தில் XZ+ மற்றும் XZA+ ஆகிய வேரியண்ட்களில், டாடா நெக்ஸான் ஜெட் எடிசன் கிடைத்து கொண்டிருந்தது.

விலைகளும் அதிரடியாக உயர்ந்தது!
இதற்கிடையே டாடா நெக்ஸான் காரின் விலைகளும் தற்போது அதிரடியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதன்படி ஒரு சில வேரியண்ட்களின் விலைகள் 15 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர நெக்ஸான் காரில், LUX மற்றும் LUXS ஆகிய புதிய வேரியண்ட்களையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. ஆனால் இயந்திர ரீதியாக டாடா நெக்ஸான் காரில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை.
எலெக்ட்ரிக் காரும் இருக்குல்ல!
இதன்படி 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் டாடா நெக்ஸான் கார் கிடைக்கும். இந்த காரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை வழங்குகிறது. இதுதவிர டாடா நெக்ஸான் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். டாடா நெக்ஸான் இவி ப்ரைம் (Tata Nexon EV Prime) மற்றும் டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் (Tata Nexon EV Max) ஆகிய 2 மாடல்களில் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மகுடத்தை தட்டி பறிக்க போகும் புதிய எலெக்ட்ரிக் கார்!
இந்த 2 மாடல்களிலும் வெவ்வேறு விதமான பேட்டரி ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் இதுதான் இந்தியாவிலேயே மிகவும் அதிகமாகி கொண்டுள்ள எலெக்ட்ரிக் கார் ஆகும். ஆனால் கூடிய விரைவில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் (Tata Tiago EV) இந்த மகுடத்தை தட்டி பறிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இந்த எலெக்ட்ரிக் காரை முன்பதிவு செய்துள்ளனர்.
டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் டெலிவரி பணிகள் தற்போது தொடங்கப்பட்டு விட்டன. எனவே கூடிய விரைவில் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக கூடிய விரைவில் பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதுதவிர டாடா அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.
ஏன் திடீர்னு இப்படி?
முன்னதாக டாடா பன்ச் காரின் காஸிரங்கா எடிசனும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக டாடா பன்ச் காஸிரங்கா எடிசனும் விற்பனையில் இருந்து விலக்கப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்களின் வேரியண்ட்கள் மற்றும் ஸ்பெஷல் எடிசன் மாடல்களின் லைன்-அப்களில் மாற்றங்களை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வேறு செய்திகளை பொறுத்தவரையில், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்று முடிந்த 2023 ஆட்டோ எக்ஸ்போ (2023 Auto Expo) வாகன கண்காட்சியில் ஏராளமான வாகனங்களை காட்சிக்கு வைத்திருந்தது. இதில் நிறைய வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக விற்பனைக்கு வரவுள்ளன. இதன் மூலம் இந்திய வாகன சந்தையில் இன்னும் மிக முக்கியமான இடத்திற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications