டாடா நெக்ஸானின் இடத்தை டார்க்கெட் செய்யும் முன்னணி கார் பிராண்ட்கள் - சமாளிக்குமா டாடா மோட்டார்ஸ்?
டாடா மோட்டார்ஸின் பிரபலமான சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார் நெக்ஸான் ஆகும். சந்தையில் நெக்ஸானின் வரலாறு சுவாரஸ்யமானது. 2019இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார் ஆரம்பத்தில் சற்று சுமாராகவே விற்பனையாகி வந்த நிலையில், சமீப ஆண்டுகளாக நெக்ஸான் தான் இந்தியாவின் சிறந்த விற்பனை எஸ்யூவி கார் ஆகும். இதற்கு விற்பனையில் போட்டியளிக்கும் வகையில் சில கார்கள் அறிமுகத்திற்கு தயாராகி வருகின்றன. அவற்றை இனி பார்க்கலாம்.
1. ஹூண்டாயின் மைக்ரோ எஸ்யூவி
ஹூண்டாய் மோட்டார்ஸ் முற்றிலும் புதிய மைக்ரோ எஸ்யூவி காரை சோதனை செய்து வருவது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். ஏனெனில் சமீபத்தில் கூட இதன் சோதனை மாதிரி பொது சாலையில் சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டு இருந்தது. விற்பனையில் உள்ள பிரபலமான ஹூண்டாய் கார்களான கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் அவ்ராவின் பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக இந்த எஸ்யூவி கார் எதிர்பார்க்கப்படுகிறது.

நெக்ஸானிற்கு போட்டி மாடலாக கொண்டுவரப்பட உள்ளதால் இந்த மைக்ரோ எஸ்யூவி காரின் அறிமுகம் ஹூண்டாய் நிறுவனத்திற்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சமீப மாதங்களாக கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸுக்கும், ஹூண்டாய் நிறுவனத்திற்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. இதில் ஹூண்டாய் மோட்டார்ஸுக்கு மிக பெரிய ஆயுதமாக இந்த மைக்ரோ எஸ்யூவி விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2. கியா ஏ.ஒய்
ஹூண்டாயை போன்று மற்றொரு தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான கியாவில் இருந்து ஏற்கனவே சொனெட் என்ற சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார் நெக்ஸானிற்கு போட்டியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் மற்றொரு சப்-4 மீட்டர் எஸ்யூவி காரை இந்திய சந்தையில் களமிறக்கும் முனைப்பில் கியா உள்ளது. இது சொனெட்டை காட்டிலும் முரட்டுத்தனமான தோற்றத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.

இதன்படி, நிமிர்ந்த முகப்பு பகுதி, பருத்த வீல் ஆர்ச்சுகள் மற்றும் நீண்ட பில்லர்கள் இந்த புதிய கியா காரில் எதிர்பார்க்கப்படுகின்றன. இருப்பினும் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ற 4-சக்கர-ட்ரைவ் சிஸ்டத்தை இந்த காரில் எதிர்பார்க்க முடியாது. எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை மெல்ல மெல்ல அதிகரித்து வருவதால், கியாவின் இந்த புதிய சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார் எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வெர்சனிலும் கொண்டுவரப்படலாம்.
3. டொயோட்டாவின் கூபே ஸ்டைல் எஸ்யூவி
பெயரை பார்த்தவுடனே தெரிந்திருக்கும், டொயோட்டா நிறுவனம் கூபே ஸ்டைலில் ஒரு சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரை இந்தியாவிற்கு கொண்டுவர திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில் முன்பு இந்த பிரிவில் விற்பனை செய்யப்பட்டு வந்த அர்பன் க்ரூஸரின் விற்பனையை டொயோட்டா நிறுத்திவிட்டது. அர்பன் க்ரூஸரின் இடத்தை நிரப்பும் பொருட்டு கொண்டுவரப்படும் இந்த புதிய கார் சர்வதேச சந்தைகளில் உள்ள யாரிஸ் கிராஸ் காரின் டிசைனில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4. மாருதி சுஸுகி பிரான்க்ஸ்
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட கார். பலேனோ ஹேட்ச்பேக் காரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட காம்பெக்ட் எஸ்யூவி காராக விளங்கும் இதில் பலேனோவில் வழங்கப்படும் அதே 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின்கள் தான் தேர்வுகளாக வழங்கப்பட உள்ளன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
டாடா நெக்ஸானிற்கு போட்டியாக ஏற்கனவே மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ போன்றவை உள்ளன. இவற்றை விற்பனையில் சமாளித்துவரும் நெக்ஸானால் இந்த எதிர்கால போட்டி கார்களையும் சமாளிக்க முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில் அதற்கேப, உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனையில் நெக்ஸான் முழு 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications









