இந்த டாடா கார் விலை இவ்ளோதானா! பைக் மாதிரி எல்லாரும் வாங்கறாங்க! எமன் எதுத்தாப்ல வந்தாலும் காப்பாத்தும்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று டாடா பன்ச் (Tata Punch). இது மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளதால், ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை டாடா பன்ச் பதிவு செய்து கொண்டுள்ளது.
இதன் மூலம் அதிகமாக விற்பனையாகி வரும் டாடா கார்களின் பட்டியலில், நெக்ஸான் (Tata Nexon) காருக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் பன்ச் உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் டாடா பன்ச் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

அதாவது டாடா பன்ச் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு, சுமார் 19 மாதங்கள் மட்டுமே ஆகின்றன. அதற்குள்ளாக டாடா பன்ச் கார், உற்பத்தியில் (Production) புதிய மைல்கல் (Milestone) ஒன்றை கடந்துள்ளது. 2 லட்சம் யூனிட்கள் உற்பத்தி என்பதுதான் அந்த புதிய மைல்கல்.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையில்தான் பன்ச் கார் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்தியாவில் 1 லட்சம் யூனிட்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை மிக வேகமாக கடந்த எஸ்யூவி ரக கார் என்ற பெருமை ஏற்கனவே டாடா பன்ச் காருக்கு உள்ளது.

வெறும் 10 மாதங்களிலேயே 1 லட்சம் டாடா பன்ச் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு விட்டன. இதற்கு அடுத்த 9 மாதங்களில், மேலும் 1 லட்சம் டாடா பன்ச் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 2 லட்சம் யூனிட்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை, வெறும் 19 மாதங்களில் கடந்த முதல் எஸ்யூவி ரக கார் என்ற பெருமையையும் டாடா பன்ச் தனதாக்கியுள்ளது.
டாடா பன்ச் காரில் பொருத்தப்பட்டிருப்பது, 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 86 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில், இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போதைய நிலையில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் மட்டுமே டாடா பன்ச் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், டீசல் (Diesel) இன்ஜின் ஆப்ஷன் இல்லை. எனினும் கூடிய விரைவில், டாடா பன்ச் காரில், சிஎன்ஜி (CNG) ஆப்ஷன் வழங்கப்படவுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போவில், டாடா பன்ச் சிஎன்ஜி (Tata Punch CNG) மற்றும் டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி (Tata Altroz CNG) கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இதில், டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. அதற்கு முன்னதாக இந்த காரை டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதை தொடர்ந்து டாடா பன்ச் சிஎன்ஜி காரும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு பிறகு, டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரும் விற்பனைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா பன்ச் காரின் ஆரம்ப விலை வெறும் 5.99 லட்ச ரூபாய் மட்டுமே. அதே சமயம் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 9.52 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விலை குறைவான கார்களில் ஒன்றாக பன்ச் உள்ளது.
விலை குறைவானதாக இருந்தாலும் கூட, டாடா பன்ச் பாதுகாப்பில் தலைசிறந்து விளங்குகிறது. இது குளேபால் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (Safety Rating) வாங்கிய கார் ஆகும். வாடிக்கையாளர்கள் மத்தியில் டாடா பன்ச் மிகவும் பிரபலமாக இருப்பதற்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா பன்ச் காருக்கு நேரடி போட்டியாக ஹூண்டாய் எக்ஸ்டர் என்ற கார் வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. அந்த காரின் வருகைக்கு பின், டாடா பன்ச் காரின் ஆதிக்கம் குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தற்போது ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.


Click it and Unblock the Notifications








