இவ்வளவு சிறிய டாடா காரில் சன்ரூஃப்? எல்லாரும் இந்த காரை தான் வாங்க போறாங்க!! இதுக்கு மேல என்னங்க வேணும்...
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் அதன் பஞ்ச் (Punch) மைக்ரோ எஸ்யூவி காரின் சிஎன்ஜி வேரியண்ட்களில் சன்ரூஃப்பை வழங்கும் திட்டத்தில் உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சில விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி தொடர்ந்து பார்க்கலாம், வாங்க.
கார்கள் சந்தையில் கடந்த சில வருடங்களில் டாடா மோட்டார்ஸ் அடைந்திருக்கும் உயரம் அபரிதமானது. குறிப்பாக, நெக்ஸான் டாடா மோட்டார்ஸின் சமீபத்திய வெற்றிக்கரமான கார் என்று சொல்லலாம். இந்தியாவில் சமீப ஆண்டுகளாக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் எஸ்யூவி காராக நெக்ஸான் விளங்குகிறது. இருப்பினும், சற்று அதிகமான விலையினால் அனைவராலும் நெக்ஸானை வாங்க முடிவதில்லை.

இதனை புரிந்துக்கொண்ட டாடா நிறுவனம், சிறிய அளவில், குறைந்த விலையில் களமிறக்கிய கார், பஞ்ச் ஆகும். தற்போதைக்கு பெட்ரோல் என்ஜின் தேர்வில் மட்டுமே பஞ்ச் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றாலும், விரைவில் சிஎன்ஜி என்ஜின் தேர்விலும் பஞ்ச் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பொதுவாகவே, இயற்கை எரிவாயுவில் இயங்கும் சிஎன்ஜி கார்களில் மைலேஜ் அதிகமாக கிடைக்கும். பஞ்ச் சிஎன்ஜி காரிலும் அவ்வாறே எதிர்பார்க்கிறோம்.
ஆனால், இதற்கேற்ப சிஎன்ஜி கார்களின் விலை சற்று அதிகமாக நிர்ணயிக்கப்படுவது வழக்கம். இதன்படி, பஞ்ச் சிஎன்ஜி காரின் விலையும், பஞ்ச்சின் மற்ற வேரியண்ட்களை காட்டிலும் அதிகமாக நிர்ணயிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. இதற்கிடையில், பஞ்ச் சிஎன்ஜி காரில் சன்ரூஃப் அம்சத்தையும் வழங்கும் திட்டத்தில் டாடா மோட்டார்ஸ் உள்ளதாக சமீப வாரங்களாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இதுகுறித்த விபரங்கள் டுவிட்டரில் வெளியாகியுள்ளன.

மோட்டார் அரேனா என்கிற டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள இது தொடர்பான படத்தின் மூலம் பார்க்கும்போது, பஞ்ச் சிஎன்ஜி காரின் அக்கம்பிளிஷ் வேரியண்ட்டில் மட்டும் சன்ரூஃப் அம்சத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்க உள்ளதாம். ப்யூர், அட்வென்ச்சர் மற்றும் அக்கம்பிளிஷ் என்ற வேரியண்ட்களில் பஞ்ச் சிஎன்ஜி கார் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும், இதில் உயர் நிலை வேரியண்ட்டான அக்கம்பிளிஷில் மட்டுமே முதற்கட்டமாக சன்ரூஃப்பை வழங்க டாடா முடிவெடுத்துள்ளதாகவும் இந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்கம்பிளிஷ் வேரியண்ட்டிலும், ஸ்பேர் சக்கரம், பவர் அசிஸ்ட் ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவை அடங்கிய டஸல் தொகுப்பை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே சன்ரூஃப் அம்சம் கிடைக்கும் என தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. சிஎன்ஜி கார்களில் சன்ரூஃப்பை வழங்கும் யுக்தி சமீப காலத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு வெற்றிக்கரமானதாக அமைந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

உதாரணத்திற்கு, சன்ரூஃப் உடன் கிடைக்கும் டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காரை சொல்லலாம். ஏனெனில் அல்ட்ராஸ் கார்களின் விற்பனை கடந்த சில மாதங்களில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. குறிப்பாக, கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 7,250 அல்ட்ராஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
டாடா மோட்டார்ஸின் தொழிற்சாலையில் மும்முரமாக உற்பத்தி செய்யப்பட்டு வரும் பஞ்ச் சிஎன்ஜி கார்களில் இயற்கை எரிவாயுவை நிரப்ப பின்பக்க பூட் பகுதியில் இரு சிலிண்டர்களை அளவில்-சிறியதாக வழங்கும் முயற்சியில் டாடா தொழிலாளர்கள் ஈடுப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இதேபோன்றே செட்-அப் தான் அல்ட்ராஸ் சிஎன்ஜி காரில் கொடுக்கப்படுகிறது. ஆனால் சிங்கிள் சிலிண்டரை விட இவ்வாறான டபுள்-சிலிண்டர் செட்-அப்பினால் பஞ்ச் சிஎன்ஜி காரின் பின்பக்கத்தில் போதிய இடவசதி கிடைக்காது எனவும் கூறப்படுகிறது.

பஞ்ச் சிஎன்ஜி காரில் 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் சிஎன்ஜி தொகுப்பை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதே பவர்டிரெயின் செட்-அப் தான் டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காரிலும் வழங்கப்படுகிறது. இந்த பவர்டிரெயின் செட்-அப் மூலமாக அதிகப்பட்சமாக 72 பிஎச்பி மற்றும் 102 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெற முடியும். இதனுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே இணைக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: பஞ்ச் காரில் சிஎன்ஜி தேர்வையும், சன்ரூஃப்பையும் வழங்க டாடா நிறுவனம் சமீப காலமாக திட்டமிட்டு வருவது என்னவோ உண்மை தான். ஆனால், பஞ்ச் சிஎன்ஜி காரின் அக்கம்பிளிஷ் வேரியண்ட்டில் மட்டுமே சன்ரூஃப் வழங்கப்படும் என மோட்டார் அரேனா டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு இருப்பதை எந்த அளவிற்கு நம்புவது என்பது தெரியவில்லை. ஆதலால், இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரையில் காத்திருப்பது நல்லது.


Click it and Unblock the Notifications









