இந்த காரை எலக்ட்ரிக்கில் கொண்டு வருகிறதா டாடா? சூப்பரு... அடுத்து வாங்குறதா இருந்தால் இதைதான் வாங்கனும்!!
டாடா பஞ்ச் இவி (Tata Punch EV) எலக்ட்ரிக் கார் அறிமுகத்திற்கு முன்பாக புதிய அலாய் சக்கரங்களுடன் சோதனை ஓட்டத்தின்போது காட்சி தந்துள்ளது. இந்த சோதனை ஓட்டம் தொடர்பான ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி, பலரது கவனத்தை ஈர்த்துள்ளன. வாருங்கள், அந்த ஸ்பை படங்களை பற்றி இனி பார்க்கலாம்.
இந்தியாவில் பிரபலமான எலக்ட்ரிக் கார், டாடா நெக்ஸான் இவி ஆகும். இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகக்கூடிய எலக்ட்ரிக் காரான இது சமீபத்தில் தான் அப்டேட் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, பஞ்ச் இவி-ஐ அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறது.

டாடா பஞ்ச் இவி இந்த 2023ஆம் வருடம் முடிவதற்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மீண்டும் ஒருமுறை பஞ்ச் இவி காரின் சோதனை மாதிரி பொது சாலையில் அடையாளம் காணப்பட்டு உள்ளது. இந்த சோதனை ஓட்டம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஸ்பை படங்களில் புதிய பஞ்ச் இவி காரின் சைடு மற்றும் பின்பகுதிகளை மறைப்புகளுடன் பார்க்க முடிகிறது.
வழக்கமான பஞ்ச் காருடன் ஒப்பிடுகையில், புதிய பஞ்ச் இவி-இன் தோற்றத்தில் சில மாற்றங்கள் இருப்பதை இந்த ஸ்பை படங்களின் மூலம் அறிய முடிகிறது. இந்த சோதனை பஞ்ச் இவி காரில் ரீடிசைனில் கிரில், ரீடிசைனில் ஹெட்லைட் ஹௌசிங் உடன் மாடிஃபைடு பம்பர்கள் மற்றும் முழு-அகலத்திற்கும் லைட் பார் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன.

இவற்றுடன், இந்த சோதனை காரில் புதிய அலாய் சக்கரங்கள் மற்றும் டிஸ்க் பிரேக்குகளையும் காண முடிகிறது. காரின் பின்பக்கத்தில் புதிய எல்இடி டெயில்லேம்ப் தொகுப்பு உள்ளது. எலக்ட்ரிக் காராக இருப்பினும், இந்த சோதனை காரிலும் எக்ஸாஸ்ட் குழாய் இருப்பதை காண முடிகிறது. சாலையில் செல்வோரை குழப்புவதற்காக இதனை அவர்கள் பொருத்தியிருக்கலாம்.
டாடா பஞ்ச் இவி காரின் டாப் வேரியண்ட்கள் 12.3-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரையை நெக்ஸான் இவி-இல் இருந்து பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பஞ்ச் இவி-இன் முந்தைய சோதனை ஓட்ட ஸ்பை படங்களில் 7.0-இன்ச் திரை வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், 12.3-இன்ச்சில் நன்கு பெரிய திரையை வழங்க டாடா முயற்சிக்கும் என தெரிகிறது.

இருப்பினும், மற்ற விஷயங்களில் பஞ்ச் இவி மற்றும் நெக்ஸான் இவி இரண்டிற்கும் இடையே வித்தியாசத்தை காட்ட டாடா நிறுவனம் முயற்சிக்கும் என்பது உறுதி. மற்றப்படி, டாடா பஞ்ச் இவி எலக்ட்ரிக் காரின் பவர்டிரெயின் குறித்த விபரங்கள் எதுவும் தற்போதைக்கு கிடைக்க பெறவில்லை. பஞ்ச் இவி-இலும் நெக்ஸான் இவி-இல் வழங்குவதை போன்று டாடா மோட்டார்ஸின் ஜிப்ட்ரான் தொழிற்நுட்பம் வழங்கப்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் டாடா மோட்டார்ஸ் முனைப்புடன் உள்ளதை பற்றி ஏற்கனவே பலமுறை கூறியிருக்கிறோம். அந்த வகையில், டாடா நிறுவனம் புதியதாக பஞ்ச் இவி-ஐ அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. நெக்ஸான் இவி-ஐ போன்று, பஞ்ச் இவி எலக்ட்ரிக் காரும் மக்கள் மத்தியில் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். டாடா பஞ்ச் இவி-இன் அறிமுகத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.
Source: Zigwheels


Click it and Unblock the Notifications









