டாடாவின் புது எலெக்ட்ரிக் கார் விலை இவ்ளோதானா! ஒரு டைம் சார்ஜ் பண்ணீட்டா சென்னைல இருந்து மதுரை போயரலாம்!
இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் (Electric Car) சந்தையில் முதலிடத்தில் இருக்கும் நிறுவனம் டாடா மோட்டார்ஸ் (Tata Motors). தற்போதைய நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மொத்தம் 3 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது.
அவை டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV), டாடா டிகோர் இவி (Tata Tigor EV) மற்றும் டாடா டியாகோ இவி (Tata Tiago EV) ஆகும். இதன் மூலம் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் சுமார் 80 சதவீத பங்களிப்பை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது. அதாவது 100 எலெக்ட்ரிக் கார்களில் விற்பனையாகிறது என்றால், அதில் 80 டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடையது ஆகும்.

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆதிக்கம் தற்போதைக்கு குறைவது போல் இல்லை. ஏனெனில் அடுத்த 12 மாதங்களுக்குள் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 3 புத்தம் புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அவை டாடா பன்ச் இவி (Tata Punch EV), டாடா ஹாரியர் இவி (Tata Harrier EV) மற்றும் டாடா கர்வ் இவி (Tata Curvv EV) ஆகியவை ஆகும். இந்த 3 எலெக்ட்ரிக் கார்களின் ரேஞ்ச் (Range) குறித்த மிக முக்கியமான தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த தகவல், டாடாவின் 3 புதிய எலெக்ட்ரிக் கார்கள் மீதான எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது.

இந்த புதிய தகவலின்படி, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 3 புதிய எலெக்ட்ரிக் கார்களும் 500 கிலோ மீட்டருக்கும் அதிகமான ரேஞ்ச் கொண்டிருக்கும். அதாவது இந்த 3 எலெக்ட்ரிக் கார்களின் பேட்டரியையும் ஒரு முறை முழுமையாக நிரப்பினாலே, 500 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமான தொலைவு பயணம் செய்ய முடியும். இது உறுதி செய்யப்பட்ட தகவல் என்பது கூடுதல் சிறப்பு.
டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் மற்றும் டாடா பாசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனரான சைலேஷ் சந்திராதான் (Shailesh Chandra), இந்த தகவலை உறுதி செய்துள்ளார். இவர் கூறியுள்ள தகவலின்படி பார்த்தால், இந்த 3 புதிய எலெக்ட்ரிக் கார்களிலும், ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 500 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவு பயணிக்க கூடிய பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும்.
தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதற்கு மக்கள் தயங்கி கொண்டிருப்பதற்கு மிக முக்கியமான காரணம் எதுவென்றால், குறைவான ரேஞ்ச்தான். ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த 3 புதிய எலெக்ட்ரிக் கார்களிலும் அந்த பிரச்னையே இருக்காது. எனவே அவை விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன.
இதில் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார்தான் முதலில் விற்பனைக்கு வரவுள்ளது. இதன் மற்றொரு முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், டாடா ஹாரியர் இவி மற்றும் டாடா கர்வ் இவி ஆகிய 2 எலெக்ட்ரிக் கார்களுடன் ஒப்பிடும்போது, டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு வரவுள்ளது என்பதுதான்.
அனேகமாக இந்த எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை (Price) வெறும் 9-9.50 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 12.50 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம். இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
அடுத்த மாதம் (நவம்பர்) இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.இதை தொடர்ந்து வரும் 2024ம் ஆண்டில், டாடா ஹாரியர் இவி மற்றும் டாடா கர்வ் இவி ஆகிய எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எலெக்ட்ரிக் கார் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த 3 எலெக்ட்ரிக் கார்களில், டாடா பன்ச் இவி-யைதான் வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். மிகவும் குறைவான விலை மற்றும் 500 கிலோ மீட்டருக்கும் அதிகமான ரேஞ்ச், ஆகியவைதான் இதற்கு மிக முக்கியமான காரணங்களாக இருக்கின்றன. இந்த எலெக்ட்ரிக் காரின் வருகைக்கு பின், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய சாதனைகள் பலவற்றை படைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








