6 லட்ச ரூபாய் காரில் 6 ஏர்பேக்குகள் கிடைக்க போகுதா!! டாடா மோட்டார்ஸை பாராட்ட வார்த்தையே இல்ல!
பாரத் என்சிஏபி (Bharat NCAP) மோதல் சோதனையில் முதல் காராக உட்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் டாடா பஞ்ச் (Tata Punch) காரில் விரைவில் 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம், வாங்க.
உலகளவில் பல்வேறு என்சிஏபி அமைப்புகள் உள்ளன. பொது விற்பனைக்கு வரும் புது காரை சில பல மோதல்களுக்கு உட்படுத்தி, தகுந்த மதிப்பெண்களை வழங்குவதுதான் என்சிஏபி-இன் பணி ஆகும். மத்திய அரசாங்கம் இந்தியாவிற்கென பிரத்யேகமான பாரத் என்சிஏபி-ஐ சமீபத்தில் அறிமுகப்படுத்தியதை உங்களில் சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

ஆனால், பாரத் என்சிஏபி-இல் இப்போது வரையில் இன்னும் ஒரு கார் கூட சோதனை செய்யப்படவில்லை. முதல் கார்களாக டாடா பஞ்ச் மற்றும் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் சோதனைகளுக்கு உட்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பாரத் என்சிஏபி-ஐ முன்னிட்டு டாடா பஞ்ச் காரில் 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
டாடா மோட்டார்ஸின் மைக்ரோ-எஸ்யூவி காரான பஞ்ச்சில் தற்சமயம் 2 ஏர்பேக்குகள் மட்டுமே முன்பக்கத்தில் வழங்கப்படுகின்றன. அதாவது, முன் இருக்கை பயணிகளுக்கு மட்டும், விபத்து நேரங்களில் முகத்தை நோக்கி வரும் வகையில் இரு ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. ஆனால், விரைவில் இந்த எண்ணிக்கை 6 ஆக அதிகரிக்க உள்ளது.

அதாவது, முன் இருக்கை பயணிகளுக்காக மேலும் கூடுதலாக 4 ஏர்பேக்குகள் வழங்கப்பட உள்ளன. ஆனால், 6 ஏர்பேக்குகள் டாடா பஞ்ச் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்படுமா அல்லது விலைமிக்க டாப் வேரியண்ட்களில் மட்டும் வழங்கப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். விற்பனையில் டாடா பஞ்ச் காருக்கு போட்டியாக விளங்கும் ஹூண்டாய் எக்ஸ்டரில் 6 ஏர்பேக்குகள் அனைத்து வேரியண்ட்களிலும் கிடைக்கின்றன.
டாடா பஞ்ச் கார் க்ளோபல் என்சிஏபி டெஸ்ட்டில் ஏற்கனவே உட்படுத்தப்பட்டு இருக்கிறது. அப்போது இந்த டாடா காருக்கு முழு 5 ஸ்டார்களை க்ளோபல் என்சிஏபி வழங்கி இருந்தது. இதனை ஹைலைட் படுத்தியே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிக பஞ்ச் கார்களை விற்பனை செய்து வருகிறது. அதேபோல், பாரத் என்சிஏபி-இலும் பஞ்ச் காரின் பாதுகாப்பில் முழு மதிப்பெண்களை வாங்கும் முனைப்பில் டாடா நிறுவனம் உள்ளது.

டாடா பஞ்ச் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.6 இலட்சத்தில் இருந்து துவங்குகின்றன. அதிகப்பட்சமாக ரூ.10.10 இலட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளை டாடா பஞ்ச் கார் கொண்டுள்ளது. 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டால் காரின் விலைகள் அதிகரிக்கப்படலாம். பஞ்ச் காரில் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.
இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 87 எச்பி மற்றும் 115 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை பெறலாம். அத்துடன், சிஎன்ஜி ஆப்ஷனிலும் டாடா பஞ்ச் கார் கிடைக்கிறது. பஞ்ச் சிஎன்ஜி காரில் டாடா மோட்டார்ஸின் ட்யூயல்-சிலிண்டர் தொழிற்நுட்பம் வழங்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் டாடா கார்கள் க்ளோபல் என்சிஏபி-இல் முழு 5 நட்சத்திரங்களை பெற்றதை போலவே பாரத் என்சிஏபி-இலும் மதிப்பெண்களை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பாரத் என்சிஏபி-இல் முதல் காராகவே டாடா பஞ்ச் உட்படுத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி வருவது நாம் எதிர்பார்க்காத ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications









