டாடாவின் புதிய காரால் மாருதி, ஹூண்டாய் எல்லாம் ஆட்டம் காண போகுது!! விற்பனைக்கு வந்ததும் வாங்கிடனும்!
டாடா சியாரா (Tata Sierra), எலக்ட்ரிக் காராக வெளிவருவது மட்டுமின்றி, பெட்ரோல்/ டீசல் காராகவும் எதிர்காலத்தில் வெளிவர உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. டாடா சியாரா எலக்ட்ரிக் கார் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளதாக இதுவரையில் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், சியாரா பெட்ரோல்/ டீசல் என்ஜின் ஆப்ஷன்களிலும் விற்பனைக்கு வர உள்ளது டாடா காரை வாங்க திட்டமிட்டு வருபவர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
டாடா சியாரா பெயர் இந்திய கார்கள் சந்தைக்கு ஒன்றும் புதியது அல்ல. ஒரு சமயத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த சியாரா பெயரை மீண்டும் புதிய மாடர்ன் கார் ஒன்றிற்கு பயன்படுத்த டாடா மோட்டார்ஸ் தயாராகி வருகிறது. டாடா சியாரா இவி கான்செப்ட் மாதிரியை உங்களில் பலர் படங்களிலும், வீடியோக்களிலும் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

ஏனெனில், 2020 ஆட்டோ எக்ஸ்போ, 2023 ஆட்டோ எக்ஸ்போ என இருமுறை ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சிகளில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில் காட்சிப்படுத்தப்பட்டது. இதில் 2023 ஆட்டோ எக்ஸ்போ கடந்த ஜனவரி மாதத்தில் வழக்கம்போல் டெல்லிக்கு அருகே நொய்டாவில் நடைபெற்றது. அப்போது காட்சிப்படுத்தப்பட்ட டாடா சியாரா இவி கான்செப்ட் கிட்டத்தட்ட புரோடெக்ஷன்-ரெடி கார் போன்று காட்சியளித்தது.
இதனால், வருகிற 2025ஆம் ஆண்டிற்குள் சியாரா எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து, சில காலத்திலேயே பெட்ரோல்/ டீசல் என்ஜின் ஆப்ஷன்களிலும் டாடா சியாரா விற்பனைக்கு வர உள்ளதாம். எலக்ட்ரிக், எரிபொருள் என்ஜின் என இரு வெர்சன்களில் உருவாகும் சியாரா கார்கள் டாடாவின் அட்வான்ஸ்டு ஜென் 2 சிக்மா கட்டமைப்பில் உருவாக்கப்பட உள்ளது.

இந்த புதிய அட்வான்ஸ்டு பிளாட்ஃபாரம் சியாரா காரில் எலக்ட்ரிக் மோட்டார் அல்லது பெட்ரோல்/ டீசல் என்ஜின் இரு விதமான பவர்டிரெயினையும் பொருத்த அனுமதிக்கவல்லது. டாடா சியாரா கார்களின் நீளம் ஏறக்குறைய 4.3 மீட்டர்களில் இருக்கும். இதனால், கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா, மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா கார்களை போன்று டாடா சியாரா ஓர் மிட்-சைஸ் எஸ்யூவி ரக காராக விளங்கும்.
இருப்பினும், டாடா ஹெரியரை விட சியாரா நீளம் குறைவானதாகவே இருக்கும் என கூறப்படுகிறது. ஏனெனில், ஹெரியர் காரின் நீளம் 4.6 மீட்டர்கள் ஆகும். சியாரா எலக்ட்ரிக் காரில் சிங்கிள்-மோட்டார்/ டபுள் மோட்டார் என 2 விதமான எலக்ட்ரிக் மோட்டார் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் டபுள் மோட்டார் ஆனது இயக்க ஆற்றலை காரின் 4 சக்கரங்களுக்கும், சிங்கிள் மோட்டார் ஆப்ஷனில் இயக்க ஆற்றல் காரின் ஏதேனும் 2 சக்கரங்களுக்கும் செல்லும் வகையில் வழங்கப்படும். இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி கார் ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் 500கிமீ-க்கு மேல் இயங்கக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுப்பக்கம், எரிபொருள் என்ஜின் சியாரா காரில் டாடாவின் புதிய 1.5 லிட்டர் டிஜிடிஐ பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். இதில், டாடாவின் புதிய பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 168 பிஎச்பி மற்றும் 280 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டிசிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சஃபாரியை போன்று, பழைய, பிரபலமான கார் பெயரை மீண்டும் பயன்படுத்துவதற்கு டாடா மோட்டார்ஸ் தயாராகி வருகிறது. ஆனால், நெக்ஸானை போல் சியாராவையும் எலக்ட்ரிக் கார் மற்றும் எரிபொருள் என்ஜின் கார் என இரு விதமாகவும் டாடா விற்பனைக்கு கொண்டுவரும் என்பதை எதிர்பார்க்கவில்லை.


Click it and Unblock the Notifications









