டாடா தன்னோட அழகான எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங்கை தொடங்கிருச்சு.. முன் தொகை இவ்ளோ கம்மிதானா!
டாடா மோட்டார்ஸின் முன்னணி எலெக்ட்ரிக் கார் மாடல்களில் நெக்ஸான் இவி-யும் ஒன்றாகும். இந்த எலெக்ட்ரிக் கார் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை சமீபத்திலேயே இந்தியாவில் வெளியீடு செய்தது, டாடா. இதனை விற்பனைக்குக் கொண்டு வரும் நிகழ்வின் ஒரு பகுதியாக இதனை வியாழக் கிழமை அன்று சுமார் 9 மணி அளவில் அது நிகழ்த்தியது.
இந்த நிலையிலேயே தற்போது ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் நெக்ஸான்இவி-க்கான புக்கிங் பணிகளையம் டாடா மோட்டார்ஸ் தொடங்கி இருக்கின்றது. ரூ. 21 ஆயிரம் முன் தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றது. இது டாடா நெக்ஸான் இவி பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

தற்போது விற்பனையில் இருக்கும் நெக்ஸான் இவி-யைக் காட்டிலும் பலமடங்கு அழகியதாக புதிய ஃபெஸ்லிஃப்ட் வெர்ஷன் அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கின்றது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்த கார் முதல் பார்வையிலேயே பார்வையாளர்களைக் கட்டாயம் மயக்கிவிடும். அந்த அளவிற்கு மிகுந்த கர்வியான அழகைக் கொண்டதாக நெக்ஸான் இவி அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கின்றது.
டாடா மோட்டார்ஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் கர்வ் எனும் கான்செப்ட் மாடலை வெளியீடு செய்தது. இதனை மின்சாரம் மற்றும் ஐசிஇ என இரு விதமான மோட்டார் ஆப்ஷன்களிலும் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த காரின் டிசைன் தாத்பரியங்களை சிலவற்றை எடுத்தே புதிய ஃபேஸ்லிஃப்ட் நெக்ஸான் இவியில் டாடா புகுத்தி இருக்கின்றது.

இதுவே அந்த காரின் கூடுதல் அழகிற்கு மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது. அழகில் மட்டுமில்லைங்க ரேஞ்ஜ் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகிய விஷயங்களிலும் இந்த கார் பலமடங்கு சூப்பரானதாக மெருகேற்றப்பட்டு இருக்கின்றது. ஆகையால், தற்போது விற்பனையில் இருக்கும் நெக்ஸான் இவி-யை போலவே தற்போது புதுப்பிக்கப்பட்டு இருக்கும் நெக்ஸான் இவி இந்தியர்களை வெகுவாகக் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையிலேயே புதுப்பிக்கப்பட்ட நெக்ஸான் இவிக்கு புக்கிங் தொடங்கப்பட்டு இருக்கின்றது. உலக மின்வாகன தினமாக இன்றைய நாள் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த தினத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக டாடா மோட்டார்ஸ் இன்றைய தினம் புக்கிங் பணிகளைத் தொடங்கி இருக்கின்றது.

இதன் அதிகாரப்பூர்வ விற்பனைக்கான வருகை இந்த மாதம் 14 ஆம் தேதி அரங்கேற இருக்கின்றது. அன்றைய தினமே புதிய நெக்ஸான் இவியின் விலைகள மற்றும் பிற முக்கிய தகவல்கள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இப்போது விற்பனையில் இருக்கும் நெக்ஸான் இவி இரு விதமான மாடல்களாக விற்பனைக்குக் கிடைக்கின்றன.
நெக்ஸான் இவி பிரைம் மற்றும் நெக்ஸான் இவி மேக்ஸ் ஆகியவையே அவை ஆகும். இந்த இரண்டும் விலக்கப்பட்டு லாங் ரேஞ்ஜ் மற்றும் மிட் ரேஞ்ஜ் என்கிற தேர்வுகளில் மட்டுமே புதிய நெக்ஸான் இவி விற்பனைக்குக் கிடைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்ரன.
இதன் லாங் ரேஞ்ஜ் தேர்வு ஓர் முழு சார்ஜில் 465 கிமீ ரேஞ்ஜையும், மிட் ரேஞ்ஜ் தேர்வு 325 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும் என கூறப்படுகின்றது. இது தற்போது விற்பனையில் இருக்கும் நெக்ஸான் இவியைக் காட்டிலும் 12 கிமீ முதல் 13 கிமீ வரை அதிக ரேஞ்ஜ் திறன் ஆகும்.
இதன் லாங் ரேஞ்ஜ் தேர்வில் 40.5 kWh பேட்டரி பேக்கும், 106.4 சில kW பவர் மற்றும் 215 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய மின்சார மோட்டாரும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் மிட் ரேஞ்ஜ் தேர்வில் 30 kWh பேட்டரி பேக்கும், 95 kW மற்றும் 215 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட மோட்டாரே பொருத்தப்பட்டு இருக்கின்றது.
புதுப்பிக்கப்பட்ட நெக்ஸானில் ஜென் 2 மின்சார மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. லாங் ரேஞ்ஜில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் இந்த வகை மோட்டார் வெறும் 8.9 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தையும், மிட் ரேஞ்ஜில் பொருத்தப்பட்டு இருக்கும் மோட்டார் இதே வேகத்தை எட்ட 9.2 செகண்டுகளையும் எடுத்துக் கொள்ளும்.
இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 150 கிமீ ஆகும். இப்போது விற்பனையில் இருக்கும் நெக்ஸான் இவியின் டாப் ஸ்பீடு மணிக்கு 120 கிமீ மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல், ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் வைத்து இந்த கார் சார்ஜ் செய்யும்போது வெறும் 56 நிமிடங்களில் 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜை ஏற்றிவிட முடியும்.
இந்த காரின் வெளிப்புறத்தை அலங்கரிக்கும் விதமாக டாடா மோட்டார்ஸ் ஸ்மார்ட் டிஜிட்டல் டிஆர்எல்-கள், ஸ்மார்ட் டிஜிட்டல் எக்ஸ் ஃபேக்டர்), ஏரோ இன்செர்ட்டுகள் கொண்ட ஆர் 16 அலாய் வீல்கள், பின் பக்கத்தில் மறைமுக வைப்பர்கள் என ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்துடன் இந்த காரில் இரண்டு ஸ்போக்குகள் மட்டுமே கொண்ட ஸ்டியரிங் வீல் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் ஸ்மார்ட் டிஜிட்டல் ஸ்டியரிங் வீல் ஆகும். இத்துடன் டச் வசதிக் கொண்ட பிஜிட்டல் கன்ட்ரோல் பேனல், ஸ்மார்ட் டிஜிட்டல் ஷிஃப்டர், பிரீமியம் வகை டேஷ்போர்டையும் புதிய நெக்ஸான் இவியில் டாடா வழங்கி இருக்கின்றது.
இதைவிட சூப்பர் வசதி என்னவென்றால் இந்த எலெக்ட்ரிக் காருக்கு தேவையான மின்சாரத்தை வேறு எலெக்ட்ரிக் காரில் இருந்தும், இந்த காரில் வேறொரு மின்சார காருக்கு மின்சாரத்தையும் பகிர்ந்துக் கொள்ள முடியும். இத்தகைய தரமான சிறப்பு வசதிகளுடனேயே புதுப்பிக்கப்பட்ட நெக்ஸான் இவி-யை டாடா உருவாக்கி இருக்கின்றது.
இதுதவிர, தேவைப்படும் போது சில மின்சாதனங்களுக்கு கரண்டையும் இந்த கார் வாயிலாக எடுத்துக் கொள்ள முடியும். எனவே ஓர் பவர் பேங்கைப் போல இந்த காரை நம்மால் பயன்படத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த சிறப்பு வசதி இப்போது விற்பனையில் இருக்கும் விலை உயர்ந்த எலெக்ட்ரிக் கார் மாடல்களில் மட்டுமே இடம் பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
பெரிய இன்ஃபோடெயின்மென்ட் திரை, 9 ஸ்பீக்கர்கள் கொண்ட ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், டிஜிட்டல் காக்பிட், ஒயர்லெஸ் சார்ஜர், வயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே, ஏர் ஃப்யூரிஃபையர், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம், ஓடிஏ அப்டேட்டுகள், மழை பொழிந்தால் தானாக வைப் ஆகும் வைப்பர்கள், ஆட்டோ ஹெட்லேம்ப் உள்ளிட்ட அம்சங்களும் புதுப்பிக்கப்பட்ட நெக்ஸான் இவியில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் புதிய நெக்ஸான் இவிக்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதி செய்யும் விதமாக நெக்ஸானின் சிறப்பம்சங்கள் அமைந்திருக்கின்றன. இதன் வருகை சிட்ரோன் இ-சி3 மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி400 இவிக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்த இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









