5 லட்சம் யூனிட்னா சும்மா கிடையாது! நாயர் கடையில 'டீ' சேல்ஸ் ஆகுற மாதிரி விற்பனையாகும் டாடா டியாகோ கார்!
உற்பத்தி மற்றும் விற்பனை என அனைத்திலும் டாடா நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்று சக்கைப்போடு போட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த காரின் சிறப்புகள் என்ன? என்ன காரணத்திற்காக இந்தியர்கள் இந்த காரை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றனர்? உள்ளிட்ட அனைத்து முக்கிய விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் விற்பனைச் செய்துக் கொண்டிருக்கும் மிக முக்கியமான தயாரிப்புகளில் ஒன்றாக டியாகோ இருக்கின்றது. இது ஓர் விலை குறைவான ஹேட்ச்பேக் ரக காராகும். நிறுவனத்தின் மலிவு விலை காராகவும் இது காட்சியளிக்கின்றது. இதன் ஆரம்ப விலையே ரூ. 5.60 லட்சம் மட்டுமே ஆகும்.

இவ்வளவு விலை மலிவாக இந்த கார் இருந்தாலும் பாதுகாப்பு மற்றும் நவீன தொழில்நுட்ப விஷயத்தில் நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் டியாகோ இருக்கின்றது. இதனாலேயோ என்னமோ இந்த காருக்கு மிகப் பெரிய வரவேற்பு இந்தியர்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஓர் தரமான சம்பவமே தற்போது அரங்கேறி இருக்கின்றது.
டாடா மோட்டார்ஸின் உற்பத்தி ஆலையில் இருந்து டியாகோவின் 5 லட்சமாவது யூனிட் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்காக வெளியேற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது. ஒரு சில கார் மாடல்கள் விற்பனைக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியும் இப்போதும் அவை ஒரு லட்சம் யூனிட் உற்பத்தியைகூட எட்ட முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன.

இந்த மாதிரியான சூழலில் டியாகோ அசால்டாக 5 லட்சம் யூனிட் உற்பத்தி எனும் மைல் கல்லை எட்டி சாதனைப் படைத்து இருக்கின்றது. இந்த அளவு அதிகபட்ச உற்பத்தி எண்ணிக்கையை எட்டுவதற்கு மிக அதிகளவில் அந்த கார் விற்பனையாகிக் கொண்டிருப்பதே முக்கியமான காரணம் ஆகும்.
கடந்த 15 மாதங்களில் மட்டும் 1 லட்சம் யூனிட் டாடா டியாகோ கார்கள் விற்பனையாகி இருப்பதாக நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்து இருக்கின்றது. இந்த அளவு அமோக விற்பனையை டியாகோ ஹேட்ச்பேக் பெற்றுக் கொண்டிருப்பது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

இந்த கார் இந்தியாவில் பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் கார் பன்முக அவதாரங்களில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களும் மிக தாராளமாக இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக பாதுகாப்பு விஷயத்தில் நற்மதிப்பை பெற்ற தயாரிப்பாக டாடா டியாகோ காட்சியளிக்கின்றது.
ஐந்திற்கு நான்கு ஸ்டார்களை இந்த கார் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றிருக்கின்றது. குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வின் வாயிலாகவே இந்த கார் இவ்வளவு உறுதியான மற்றும் தரமானது என்பது தெரிய வந்தது. இதுமாதிரியான தரம் மிக்க காராக டியாகோ உருவாக்கப்பட்டு இருக்கின்றன காரணத்தினாலேயே தற்போது இந்திய வாடிக்கையாளர்களை தன் குவித்துக் கொண்டிருக்கின்றது.
அடுத்தடுத்து வரும் காலங்களிலும் தற்போதைய 5 லட்சம் யூனிட் உற்பத்தியைப் போல் 6, 7, 8 என எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த அளவு மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை டியாகோ பெற்றிருப்பதனால் நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பாக அது மாறி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் விபத்துகளின்போது பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கின்றது. கடந்த ஒரு சில மாதங்களில் மட்டும் டியாகோ டிரைவரின் தவறுகளால் அதிக எண்ணிக்கையில் விபத்தைச் சந்தித்தன. மிக மோசமான விபத்துகளும் இதில் அடங்கும். இருப்பினும் டியாகோ சார்ந்து அரங்கேறிய ஒரு விபத்தில்கூட உயிர் சேதம் ஏற்படவில்லை. இந்த திறனே அதன் இப்போதைய வளர்ச்சிக்கு மிகப் பெரிய காரணமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications









