எல்லாரும் சிலுக்கு ஃபோட்டோவ தூக்கிட்டு இந்த காரோட ஃபோட்டோவ வைக்க போறாங்க! நாளைக்கு ரெண்டு கார் அறிமுகமாகுது!
80ஸ், 90ஸ், ஏன் 2கே கிட்ஸ்களில்கூட ஒரு சிலர் சிலுக்கு ஸ்மிதாவின் ஃபேன்களாக இருக்கின்றனர். இதற்கு சான்றாக அவர்களின் பலருடைய செல்போனின் வால் பேப்பராக சிலுக்கின் படமே இருக்கின்றது. இந்த வால் பேப்பருக்கே ஆப்பு வைக்கும் வகையில் முற்றிலும் கவர்ச்சியான தோற்றம் கொண்ட கார்களை நாளைய தினம் நம்முடைய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.
அது வேறு எதுவும் இல்லைங்க, நம்மில் பலருக்கு பழக்கப்பட்ட நெக்ஸான் கார் மாடல்தான் அது. இந்த கார் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்களையே நாளைய தினம் அது விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இது எப்போ விற்பனைக்கு வருமோ? என இதன் வருகையை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு பேரின்பம் அளிக்கும் வகையிலேயே நாளைய தினம் நெக்ஸான் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வர இருக்கின்றது.

தற்போது நெக்ஸான் ஐசிஇ மற்றும் மின்சாரம் ஆகிய இரு வெர்ஷன்களில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த இரண்டின் அப்டேட்டட் மாடல்களும்தான் நாளைய தினத்தில் விற்பனைக்கு வர இருக்கின்றன. இந்த இரு கார்களுக்குமான புக்கிங்குகளும் ஏற்கனவே நாட்டில் தொடங்கிவிட்டது. இதேபோல், அவை விற்பனைக்காக டீலர்களிடமும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த மாதிரியான சூழலிலேயே நாளைய தினம் அதன் விலைகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. டாடா மோட்டார்ஸ் அதன் பிரபல கான்செப்ட் கார் மாடல்களில் ஒன்றான கர்வ்-ஐ தழுவியே புதிய நெக்ஸான் மற்றும் நெக்ஸான்.இவி-யை அப்கிரேட் செய்திருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே கூடுதல் கவர்ச்சியான தோற்றம் கொண்ட காராக புதுப்பிக்கப்பட்ட நெக்ஸான் கார்கள் காட்சியளிக்கின்றன.
காரின் ஒட்டுமொத்த வெளிப்புற தோற்றம் மற்றும் உட்பக்கம் என அனைத்தும் வேற லெவலுக்கு அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இந்த காரின் வெளிப்புறம் மட்டுமல்ல உட் பக்கமும் வேற லெவல் கவர்ச்சியானதாகக் காட்சியளிக்கின்றது. ஐசிஇ மற்றும் மின்சார வெர்ஷன் இவையிரண்டிற்கும் இடையில் மிகவும் கணிசமான அளவு மட்டுமே வித்தியாசங்கள் தென்படுகின்றன.
.இவி என்கிற பேட்ஜ், கிரில் உள்ளிட்ட விஷயங்களில் மட்டுமே அந்த வித்தியாசங்கள் தென்படுகின்றன. இந்த வித்தியாசங்களைக்கூட டாடா மோட்டார்ஸ் செய்ய தவிர்த்திருக்கும் எனில் இரண்டும் வெர்ஷன்களுக்கும் இடையில் வித்தியாசம் என்பதே இல்லாமல் போயிருக்கும். ஐசிஇ வெர்ஷன் டாடா நெக்ஸானில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் டீசல் மோட்டார் ஆகிய இர எஞ்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட இருக்கின்றது.
இதன் பெட்ரோல் எஞ்ஜின் 118 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வ வழங்கப்பட இருக்கின்றது. டீசல் மோட்டார் 113 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதில், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஏஎம்டி தேர்வு வழங்கப்பட இருக்கின்றது. எலெக்ட்ரிக் வெர்ஷனான நெக்ஸான்.இவி மிட் ரேஞ்ஜ் மற்றும் லாங் ரேஞ்ஜ் ஆகிய இரு தேர்வுகளில் கிடைக்கும். இதில், லாங் ரேஞ்ஜ் தேர்வில் ஓர் முழு சார்ஜில் 465 கிமீ தூரமும், மிட் ரேஞ்ஜ் தேர்வில் 325 கிமீ தூரமும் பயணிக்க முடியும்.
இது தற்போது விற்பனையில் இருக்கும் நெக்ஸான் இவியைக் காட்டிலும் 12 கிமீ - 13 கிமீ அதிக ரேஞ்ஜ் திறன் ஆகும். இதன் லாங் ரேஞ்ஜ் தேர்வில் 40.5 kWh பேட்டரி பேக்கும், மிட் ரேஞ்ஜ் தேர்வில் 30 kWh பேட்டரி பேக்கும் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த இரு தேர்வுகளிலும் ஜென் 2 வகை மின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நெக்ஸான் இது ஓர் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் மாடலாகும். ஆகையால், புதிதாக பாதுகாப்பான காரை தேர்வு செய்ய நீங்கள் விரும்பினால் இந்த கார் உங்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். விலையில் பெரிய அளவில் இருக்காது என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








