மத்திய அரசின் முயற்சியில் இந்தியாவில் முதலீடுகள் குவியுது!! டெஸ்லா மட்டும் எத்தனை கோடி டாலர்கள் தெரியுமா?
டெஸ்லா (Tesla) நிறுவனம் கார் பாகங்களை வாங்குவதற்காக இந்தியாவில் சுமார் 2 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யவுள்ளதாக மத்திய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்வளவு அதிகப்படியான முதலீடு எதற்காக? இதனை தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் யார்? என்பதை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
உலகின் முன்னணி எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்று, டெஸ்லா ஆகும். அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் முன்னிலை வகிக்கும் டெஸ்லா நிறுவனத்திற்கு தற்போதைக்கு 2 நாடுகளில் மட்டுமே உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. ஒன்று அமெரிக்காவிலும், ஒன்று சீனாவிலும் உள்ளது.

உலகின் முக்கியமான சந்தைகளுள் ஒன்றான ஐரோப்பாவில் கூட டெஸ்லாவுக்கு தொழிற்சாலை இல்லை. ஆனால், இந்தியாவில் தொழிற்சாலையை நிறுவுமாறு கடந்த பல வருடங்களாக டெஸ்லாவை நம் மத்திய அரசு கேட்டுக் கொண்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம், இந்தியாவில் வணிகத்தை துவங்கும் முனைப்பில் டெஸ்லா உள்ளது. இதன் வெளிப்பாடாக, கடந்த வருடங்களில் பல்வேறு பேச்சுவார்த்தைகள் இந்திய அரசுக்கும், டெஸ்லா நிறுவன அதிகாரிகளுக்கும் இடையே நடந்தன.
ஆனால் டெஸ்லா இந்தியாவில் தொழிற்சாலையை அமைக்கும் திட்டத்தில் இல்லை. அதைவிட முக்கியமாக, சீனாவில் இருந்து கார்களை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்வோம் என டெஸ்லா சார்பில் கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நம் மத்திய அரசுக்குதான் சீன தயாரிப்பு என்றாலே பிடிக்காதே. இருப்பினும், சீனாவில் இருந்து டெஸ்லா கார்களை இறக்குமதி செய்ய ஒப்புக்கொண்டது. ஆனால், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு வழக்கமாக விதிக்கப்படும் அதிகப்படியான வரி உங்களுக்கும் விதிக்கப்படும் என டெஸ்லாவிடம் மத்திய அமைச்சகம் தெளிவாக கூறிவிட்டது.

ஆனால் டெஸ்லா நிர்வாகம் இந்தியாவில் இறக்குமதி வரி அதிகமாக உள்ளதாகவும், தங்களுக்கென பிரத்யேக சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும் எனவும் கூறியது. இதுதொடர்பான டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்கின் ட்விட்டை டுவிட்டரில் பார்த்திருப்பீர்கள். இவ்வாறு, டெஸ்லா - இந்திய அரசாங்கத்திற்கு இடையே உரசல்கள் சென்றுக் கொண்டிருந்த நிலையில், சமீபத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் மோடி எலான் மஸ்க்கை சந்தித்து பேசினார்.
இதன்பின், இந்தியாவில் நுழைவது குறித்து எலான் மஸ்க் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டார். இதனால் டெஸ்லாவின் இந்திய நுழைவு இன்னும் சில வருடங்களில் இருக்கும் என ஒருபக்கம் எதிர்பார்க்கப்படும் நிலையில், மறுப்பக்கம் எப்போதும் போல் இந்தியாவில் இருந்து பாகங்களை வாங்கும் பணிகளை டெஸ்லா மேற்கொண்டு வருகிறது. இன்னும் சொல்லப்போனால், இந்த 2023 வருடத்தில் சுமார் 2 பில்லியன் டாலர்கள் (ஏறக்குறைய ரூ.16600 கோடி)-க்கு வாகன உற்பத்திக்கான பாகங்களை டெஸ்லா வாங்கவுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

மேலும், இது கடந்த 2022இல் டெஸ்லா முதலீடு செய்த தொகையின் இரு மடங்கு எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய விநியோகத் துறை மற்றும் தொழில்துறை அமைச்சரான பியூஸ் கோயல் இதுகுறித்து மேலும் பேசுகையில், "டெஸ்லா கடந்த வருடத்தில் 1 பில்லியன் டாலர்களுக்கு பாகங்களை வாங்கியது. டெஸ்லாவுக்கு வாகன உற்பத்திக்கு தேவையான பாகங்களை வழங்கும் நிறுவனங்கள் குறித்த லிஸ்ட் என்னிடம் உள்ளது.
அவர்கள் (லிஸ்ட்டில் இருக்கும் நிறுவனங்கள்) குறிப்பிட்டுள்ளதன் படி, இந்த வருடத்தில் இந்த டார்க்கெட் 1.7 பில்லியன் டாலர்களில் இருந்து 1.9 பில்லியன் டாலர்கள் வரையில் வரும்" என்றார். ஆனால் இதுகுறித்து டெஸ்லா சார்பில் எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. முன்னதாக, அமைச்சர் பியூஸ் கோயல் உடன் டெஸ்லா அதிகாரிகள் சந்தித்து பேசியதாகவும், அப்போதும் விலை குறைவான எலக்ட்ரிக் காரை இந்தியாவில் தயாரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா, பல்வேறு வெளிநாட்டு கார்ப்பிரேட் நிறுவனங்களுக்கு ஓர் சிறந்த உற்பத்தி மையமாக திகழ்கிறது. ஏனெனில், தொழிலாளர்கள் சம்பளம் மற்றும் மூல பொருட்களுக்கான செலவு மற்றும் அவற்றிற்கான போக்குவரத்து செலவு உள்ளிட்டவை மற்ற வல்லரசு நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் குறைவாக உள்ளது. அதேநேரம், டெஸ்லா போன்ற நிறுவனங்கள் இங்கிருந்து பொருட்களை மட்டும் குறைந்த விலையில் வாங்கி வெளிநாடுகளுக்கு கொண்டு செல்கின்றன.


Click it and Unblock the Notifications









