சென்னையில் அமைகிறதா டெஸ்லா கார் தயாரிப்பு ஆலை? இடம் தேடும் பணி துவங்கியாச்சு!
டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வருவது உறுதியாகியுள்ள நிலையில் அதன் ஆலையை அமைக்க இடத்தை தேடி வருகிறது. இந்நிலையில் டெஸ்லா ஆலை தமிழகத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன. குறிப்பாக சென்னையில் அமைய அதிக வாய்ப்புள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக வளர்ந்துள்ளது டெஸ்லா நிறுவனம். இந்நிறுவனம் உலகின் ஆட்டோ தொழிற்நுட்ப கார்களை தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வருவதில் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் கார்களுக்கு உலகம் முழுவதும் டிமாண்ட் இருக்கிறது. இந்நிறுவனத்தால் அதன் உரிமையாளர் எலான் மஸ்க் உலகின் மிகப்பெரிய பணக்காரராக மாறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எலான் மஸ்க் இந்தியாவின் தனது கார்களை விற்பனைக்குக் கொண்டு வர முடிவு செய்தார். அப்பொழுது மத்திய அரசிடம் அதற்கான பேச்சுவார்த்தை நடத்திய போது மத்திய அரசு இந்தியாவில் ஆலை அமைத்து கார்களை தயாரித்து விற்பனை செய்தால் மட்டுமே குறைவான வரியில் கார்களை விற்பனை செய்ய முடியும் எனச் சொல்லிவிட்டது.
வெளிநாட்டில் தயாரித்த கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய முடிவு செய்தால் வழக்கமான இறக்குமதி வரி விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இப்படியாக இறக்குமதி வரி விதிக்கப்பட்டால் காரின் விலை இரண்டு மடங்காக மாறும் அன்றைய சூழ்நிலையில் எலான் மஸ்க் சீனாவிலிருந்து இந்தியாவிற்கு கார்களை இறக்குமதி செய்யும் எண்ணத்தில்தான் இருந்தார்.
ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. இந்தியா ஆட்டோமொபைல் சந்தையின் மிக முக்கியமான பங்கை வகிக்கும் நாடாக இருக்கிறது.இந்தியாவைத் தவிர்த்துவிட்டு ஆட்டோமொபைல் துறையில் தொடர்ந்து ஜெயிப்பது குதிரைக் கொம்பான விஷயம் தான். அதனால் வேறு வழியில்லாமல் எலான் மஸ்க் இறங்கிவந்துள்ளார். இந்தியாவில் தனது ஆலையை அமைத்தே கார்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
டெஸ்லா நிறுவனத்திலிருந்து சில அதிகாரிகள் சமீபத்தில் இந்திய அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்து தங்களுக்கு இந்தியாவில் தொழிலைத் துவங்குவதற்கான விருப்பத்தையும் அதற்கான சாத்தியக்கூறுகளையும் பற்றி பேச்சுவார்த்தை நடத்திச் சென்றுள்ளனர். இது பாசிடிவாக அமையவே இந்தியாவில் தனது ஆலையை அமைக்க டெஸ்லா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதன் அடிப்படையில் தற்போது இந்தியாவில் எந்த பகுதியில் தனது ஆலையை அமைக்கலாம் என்று இடத்தை தேடும் பணி தற்போது துவங்கியுள்ளது. இதில் தான் தமிழ்நாட்டிற்கு ஒரு லக் அடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் ஆலையைத் தமிழகத்தில் அமைக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
டெஸ்லா நிறுவனம் ஆலையை இந்தியாவில் அமைத்தாலும் இந்தியாவிலிருந்து மற்ற உலக நாடுகளுக்கும் தனது கார்களை ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்துள்ளது. இதுவும் குறிப்பாக கிழக்காசிய நாடுகளுக்கு இந்திய ஆலையிலிருந்து தனது ஏற்றுமதியைச் செய்ய முடிவு செய்துள்ளது. தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளது.
அப்படி என்றால் ஏற்றுமதி செய்ய வசதியான இடம் சென்னைதான். சென்னை துறைமுகத்திலிருந்து பெரும்பாலான நாடுகளுக்கு கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இதே போல டெஸ்லா கார்களையும் ஏற்றுமதி செய்துவிடச் சுலபமாக இருக்கும். இது போலச் சென்னை இந்தியாவில் மற்ற நகரங்களுடனும் நன்கு இணைக்கப்பட்ட நகரமாக இருக்கிறது.
இதனால் இங்குத் தயாரிக்கப்படும் கார்களை இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யவும் சுலபமாக இருக்கும். ஏற்கனவே சென்னையில் ஹூண்டாய் போன்ற பெரிய நிறுவனங்கள் கார் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் டெஸ்லா போன்ற நிறுவனங்களுக்குச் சென்னை ஆலையை அமைக்க ஏற்ற நகரமாக இருக்கும்.
ஏற்கனவே மாநில அரசும் ஆட்டோமொபைல் தயாரிப்பு ஆலைகளை அமைக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இவிகளை பொருத்தவரை ஓலா, ஏத்தர், சிம்பிள் எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் தமிழகத்தில் தான் ஆலையை அமைத்துள்ளனர். இதனால் டெஸ்லா நிறுவனம் தமிழகத்திற்கு வர வாய்ப்புகள் அதிகம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டெஸ்லா போன்ற பெரு நிறுவனங்கள் நுழைவது ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தும். தமிழகத்திற்குள் இந்த ஆலை அமைந்தால் தமிழக வளர்ச்சி மேலும் பல மடங்கு அதிகமாகும். தற்போது நடக்கும் இடம் தேடும் பணியில் தமிழகத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








