எலன் மஸ்க் நிறுவனம் தயாரித்த எலெக்ட்ரிக் கார்களில் பிரச்னை.. 1.1 மில்லியன் இ-கார்களுக்கு ரீ-கால்!
உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலன் மஸ்க்கிற்கு சொந்தமான நிறுவனங்களில் டெஸ்லா (Tesla)-வும் ஒன்று. இது ஓர் மின்சார கார் உற்பத்தி நிறுவனமாகும். இந்த நிறுவனம் தயாரித்த 1.1 மில்லியன் எலெக்ட்ரிக் கார்களிலேயே மிகப் பெரிய ஆபத்து ஒளிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதனை சரி செய்யும் விதமாகவே டெஸ்லா நிறுவனம் தற்போது பாதிக்கப்பட்ட அனைத்து கார்களையும் திரும்பி கொண்டு வருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றது. பாதிக்கப்பட்ட பெரும்பாலான தயாரிப்புகள் சீனாவிலேயே விற்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. என்ன பிரச்னைனு கேக்கிறீங்களா.. டெஸ்லா கார்களின் பிரேக்கிங் விஷயத்திலேயே பிரச்னை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களில் வழங்கப்பட்டிருக்கும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் இன்டென்சிட்டியை செட் செய்வதற்கு பெரியளவில் ஆப்ஷன்கள் வழங்கப்படாதது மற்றும் இன்னும் சில சிக்கல்கள் இருப்பதே நிறுவனத்தின் கார்களில் பிரேக்கிங் பிரச்னை ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. இதை சரி செய்யும் பொருட்டே நிறுவனம் தற்போது 1.1 மில்லியன் கார்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த எண்ணிக்கை இதுவரை டெஸ்லா நிறுவனம் சீனாவில் விற்பனைச் செய்த ஒட்டுமொத்த கார்களின் எண்ணிக்கைக்கு சமம் ஆகும். டெஸ்லா நிறுவனம், இப்போது எலெக்ட்ரிக் கார்களில் ஏற்பட்டு இருக்கும் பிரச்னையை சாஃப்ட்வேர் அப்டேட் வாயிலாக சரி செய்ய இருப்பதாக நிறுவனம் தெரிவித்து உள்ளது.

ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் லெவல் மற்றும் கஸ்டமர்களுக்கு தேவையான இன்னும் சில வசதிகளையும் இந்த சாஃப்ட்வேர் வாயிலாக வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது. நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் மாடல்களான மாடல் 3 மற்றும் மாடல் ஒய் ஆகியவற்றிலேயே பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கின்றது.
ஜனவரி 2019 தொடங்கி நடப்பாண்டு ஏப்ரல் வரையில் தயாரிக்கப்பட்ட மாடல் 3 மற்றும் மாடல் ஒய் எலெக்ட்ரிக் கார்களுக்கே இந்த திரும்பி அழைத்தல் பொருந்தும். இதுதவிர, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மாடல் 3, மாடல் எஸ் மற்றும் மாடல் எக்ஸ் ஆகியவற்றிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என நிறுவனம் சந்தேகிக்கின்றது.
ஆகையால், விரைவில் அந்த கார்களுக்கு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பிரச்னை சரி செய்யப்பட இருக்கின்றது. சென்ற ஆண்டிலும் டெஸ்லா நிறுவனம் இதேபோல் தான் தயாரித்த கார்களில் பிரச்னை இருப்பதாகக் கூறி 3.21 லட்சம் யூனிட் கார்களை திரும்பி அழைத்தது. சாஃப்ட்வேரில் ஏற்பட்ட பிரச்னையே நிறுவனத்தின் திரும்பி அழைத்ததற்காக காரணமாக உள்ளது.
2023 இல் தயாரித்த மாடல் 3 மற்றும் 2020 முதல் 2023 வரை தயாரித்த மாடல் ஒய் கார்களே இந்த திரும்பி அழைத்தலின் பேரில் சரி செய்யப்பட்டன. இந்த நிலையிலேயே தற்போது மீண்டும் அதே மாடல் 3 மற்றும் மாடல் ஒய் எலெக்ட்ரிக் கார்களில் சிக்கல் இருப்பது கண்டறியப்பட்டு திரும்பிக் கொண்டு வர அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகளவில் டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே நிறுவனத்தின் முன்னணி கார் மாடல்கள் சர்ச்சையில் சிக்குவதும், ரீ-கால் செய்யப்படுவதும் தொடர் கதையாகிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலை நிறுவனத்திற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பில் சிக்கலை ஏற்படுத்தும் என யூகிக்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








