டெஸ்லா இந்தியாவில் தொழிற்சாலையை நிறுவுமா? மத்திய அமைச்சர் கூறும் பதில் இதுதான்!!
இந்தியாவில் தொழிற்சாலையை அமைப்பதில் டெஸ்லா (Tesla) தீவிரமாக உள்ளதாக மத்திய அமைச்சர் ஒருவர் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். யார் அந்த அமைச்சர்? இதுகுறித்து மேலும் என்னென்ன விஷயங்களை தெரிவித்துள்ளார்? என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
உலகம் முழுவதும் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் தற்சமயம் கொடிக்கட்டி பறக்கும் நிறுவனமாக டெஸ்லா விளங்குகிறது. அமெரிக்காவை சேர்ந்த இந்த நிறுவனம் கடுமையான போட்டி மிகுந்த சீன நாட்டு சந்தையில் கூட கார்கள் விற்பனையில் பல சீன நிறுவனங்களுக்கு போட்டியாக முன்னிலை வகிக்கிறது என்றால் எந்த அளவிற்கு டெஸ்லாவின் திட்டங்களும், தயாரிப்புகளும் உள்ளன என்பதை பார்த்து கொள்ளுங்கள்.

அமெரிக்காவை போன்று, சீனாவிலும் டெஸ்லாவிற்கு தொழிற்சாலை உள்ளது. அதேபோன்று, இந்தியாவும் மிக பெரிய ஆட்டோமொபைல் சந்தையே, ஆதலால் இங்கும் தொழிற்சாலையை நிறுவுமாறு கடந்த பல ஆண்டுகளாக மத்திய அரசு தொடர்ந்து டெஸ்லாவை அழைத்த வண்ணம் உள்ளது. இதற்கு அவ்வப்போது செவி சாய்க்கும் டெஸ்லா நிறுவனத்தின் சார்பில் சில வருடங்களுக்கு முன்னர் கூட தொழிற்சாலையை எங்கு அமைப்பது என்று கள ஆய்வு பணிகள் சில மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் அந்த பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. இந்த சூழ்நிலையில், சில தினங்களுக்கு முன் டெஸ்லா நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் அடங்கிய குழு இந்தியாவிற்கு வந்தது. அவர்கள் மத்திய அரசின் அதிகாரிகளுடன் தொழிற்சாலை அமைப்பது குறித்து தீவிரமாக விவாதித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து மத்திய தொழிற்நுட்ப துணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சமீபத்திய பேட்டியில் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "இந்தியாவை உற்பத்தி மற்றும் கண்டுப்பிடிப்பு மையமாக அவர்கள் மிகவும் தீவிரமாக உற்று நோக்குகிறார்கள். இந்திய அரசாங்கம் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதாக சிக்னல் கொடுத்துள்ளோம். இதனால் அவர்கள் எத்தகைய நோக்கம் மற்றும் முதலீடுகளை கொண்டிருந்தாலும் அது வெற்றி பெறும்" என கூறினார். வாகனங்களை உற்பத்தி செய்வதுடன் வேறு விஷயங்களை பற்றி டெஸ்லா குழு பேசினார்களா என துணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரிடம் கேட்கப்பட்டது.

இதற்கு, "உங்களால் கார்களை பற்றி மட்டும் பேச முடியாது" என கூறியவர், "நீங்கள் கார்களை பற்றி பேசுவீர்கள், நீங்கள் அவற்றிற்கான ஆற்றலை பற்றி பேசுவீர்கள், நீங்கள் தொழிற்நுட்பங்களை உற்பத்தி செய்வதை பற்றியும் பேசுவீர்கள். ஆதலால் எல்லா விஷயங்களும் இந்த உரையாடலில் இருந்தது. அவர்கள் இந்தியாவில் என்ன செய்ய போகிறார்கள் என்பதை என்னால் கூற இயலாது (சந்திரசேகர் வேறு துறையை சார்ந்தவர் என்பதால்)" என்றார்.
கடந்த காலங்களிலேயே இந்தியாவிற்கு டெஸ்லா வராததற்கு முக்கிய காரணம், நமது மத்திய அரசின் விட்டு கொடுக்காத போக்கு ஆகும். அதாவது, இந்தியாவில் தங்களது கார்களுக்கு மற்ற எலக்ட்ரிக் கார்களை காட்டிலும் கூடுதல் மானியங்களை வழங்க வேண்டும் என டெஸ்லா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதனை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. தற்போது சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் இந்தியாவை டெஸ்லா தொடர்பு கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: உலக மக்கள் தொகையில் சீனாவை சமீபத்தில் இந்தியா முந்தியதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். சீனா அளவிற்கு போட்டி மிகுந்த சந்தை நமது நாடு கிடையாது. அதுமட்டுமின்றி, வாகனங்களை உற்பத்தி செய்வதும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் செலவு குறைவானது. இந்த காரணிகளுடன், சமீபத்தில் இந்தியா மீது ஒட்டி கொண்டுள்ள 'உலகின் மிக பெரிய மார்க்கெட்' என்ற பெயர் டெஸ்லா போன்ற நிறுவனங்களை கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications








